சென்னை வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தின் இரண்டாம் கட்டப் பகுதியில், நுழைவு மற்றும் வெளியேறும் வழிகளின் பணிகள் இன்னும் முடிவடையாததால் பயணிகள் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். நீண்ட நடைபாதை, போதிய வழிகாட்டிப் பலகைகள் இல்லாமை, பயணிகளின் பாதுகாப்பு தொடர்பான குறைபாடுகள் உள்ளிட்ட பிரச்சினைகள் எழுந்துள்ளன.

நீண்ட தூரம் நடந்து செல்லும் பயணிகள்

பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான 14.6 கி.மீ. தொலைவிலான இரண்டாம் கட்ட மெட்ரோ வழித்தடம், திட்டமிட்ட காலக்கெடுவைக் கடந்து 10 மாதங்கள் தாமதமாக 11-10-2026 அன்று திறக்கப்பட்டது. இருப்பினும், வடபழனி இரண்டாம் கட்ட மெட்ரோ நிலையத்தின் நுழைவு, வெளியேறும் வழிகளுக்கான பணிகள் இன்னும் நிறைவடையவில்லை.

இதனால், பயணிகள் 100 அடி சாலையில் உள்ள முதல் கட்ட மெட்ரோ நிலையத்தின் நுழைவு வழியாகச் சென்று, அங்கிருந்து இரு நிலையங்களையும் இணைக்கும் நடைமேம்பாலம் வழியாக நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது. பின்னர் இரண்டு தளங்களைக் கடந்து, இரண்டாம் கட்ட நிலையத்தின் நடைமேடையை அடைந்து ரயிலில் ஏற வேண்டியுள்ளது.

இந்த நடைமேம்பாலத்தின் நீளத்தைக் குறைத்திருக்கலாம் என்றும், பயணிகளுக்கு வழிகாட்டும் பலகைகளை மேம்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், கைப்பை உள்ளிட்ட சுமைகளுடன் வரும் பயணிகள் முதல் மற்றும் இரண்டாம் கட்டத்திற்கு உடைமைகளைத் தூக்கிக்கொண்டு நீண்டதூரம் செல்வதில் சிரமம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்து?

இரண்டாம் கட்ட மெட்ரோ நிலையங்களில், தண்டவாளப் பகுதிக்குள் பயணிகள் செல்வதைத் தடுக்கும் வகையில் பாதி உயரமுள்ள பாதுகாப்புக் கதவுகள் (Platform Screen Doors) அமைக்கப்பட்டுள்ளன. ரயில் வரும்போது மட்டுமே இவை திறக்கப்பட வேண்டும். ஆனால், வடபழனி இரண்டாம் கட்ட நிலையத்தில் இந்தக் கதவுகள் எப்போதும் திறந்த நிலையிலேயே இருப்பதாகப் பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

மேலும், ரயில் வரும் நேரத்தைக் காட்ட வேண்டிய தகவல் திரைகளும் (PIDS) செயல்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால், ரயில் எப்போது வரும் என்பது தெரியாமல் பயணிகள் குழப்பமடைகின்றனர். சிலர் ரயில் வருகிறதா என்று பார்ப்பதற்காக நடைமேடையின் விளிம்புவரை செல்வதால், அவர்களின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுகிறது.

வழிகாட்டிப் பலகைகளிலும் குழப்பம்

முதல் கட்ட நிலையத்திலிருந்து நடைமேம்பாலத்துக்குச் செல்லும் வழியைக் காட்டும் பலகைகள் உள்ளன. ஆனால், அந்த நடைமேம்பாலம் இரண்டாம் கட்ட மெட்ரோ நிலையத்துக்குச் செல்கிறது என்ற விவரம் அதில் குறிப்பிடப்படவில்லை. இதனால், முதல்முறையாக வரும் பயணிகள் குழப்பமடைகின்றனர்.

இரண்டு மாதங்களில் பணிகள் முடியும்

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன (CMRL) அதிகாரிகள் கூறுகையில், “வடபழனி இரண்டாம் கட்ட நிலையத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் வழிகளுக்கான பணிகள் இன்னும் இரண்டு மாதங்களில் முடிக்கப்படும். தேவையான இடங்களில் வழிகாட்டிப் பலகைகளும் மேம்படுத்தப்படும்” என்று தெரிவித்தனர்.