சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைச் சுற்றி ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்குக் கட்டுமானப் பணிகளுக்குத் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (NGT) விதித்த தடைக்கு எதிரான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைச் சுற்றியுள்ள 128.19 ஹெக்டேர் பரப்பளவில், 36 சர்வே எண்களை இடைக்காலப் பாதிப்பு மண்டலமாகக் கருதலாம் என்று தமிழ்நாடு மாநில ஈரநில ஆணையம் தெரிவித்தது. இதில் தனியாருக்குச் சொந்தமான பட்டா நிலங்கள் சேர்க்கப்படவில்லை என்றும் விளக்கம் அளித்தது.
ஈரநில ஆணையத்தின் இந்த நடவடிக்கையை வரவேற்ற கிரெடாய் சென்னை அமைப்பு, இந்தப் பரிந்துரை தங்களுக்கு முழுமையாக ஏற்றுக்கொள்ளத்தக்கது எனத் தெரிவித்தது.
இதையடுத்து, 36 சர்வே எண்கள் தொடர்பான அறிக்கையை அக்டோபர் 14ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு அரசுத் தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அறிக்கையை ஆய்வு செய்த பின்னர், அதே நாளில் உத்தரவு பிறப்பிப்பதாகவும் தெரிவித்தனர்.