விண்வெளியில் மனிதர்கள் அனுப்பிய மிகத் தொலைதூர விண்கலமான வாயேஜர்-1, 49 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து பயணித்து வரும் நிலையில், அதன் செயல்பாட்டை நீட்டிக்க நாசா முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது.

வாயேஜர்-1-ல் இருந்த Low-Energy Charged Particle (LECP) எனப்படும் தாழ் ஆற்றல் மின்னூட்டத் துகள் கருவியை நாசா தற்போது நிறுத்தியுள்ளது.

இந்த கருவியில் ஏற்பட்ட பழுது காரணமாக அது நிறுத்தப்படவில்லை. விண்கலத்தின் மின்சாரத்தைச் சேமித்து, அதன் ஆயுளை மேலும் நீட்டிப்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு 4 வாட்ஸ் மின்சாரம் குறைகிறது!

வாயேஜர்-1-க்கு தேவையான மின்சாரம், புளூட்டோனியம் அடிப்படையிலான மின்சக்தி உற்பத்தி அமைப்பிலிருந்து கிடைக்கிறது. ஆனால், இந்த அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4 வாட்ஸ் மின்சாரத்தை இழந்து வருகிறது.

இதனால் விண்கலத்தின் அனைத்து கருவிகளையும் தொடர்ந்து இயக்குவது நாளுக்கு நாள் சிரமமாகி வருகிறது.

ஒரு கருவியை நிறுத்துவதன் மூலம் மின்சாரத்தைச் சேமித்து, மிக முக்கியமான கட்டுப்பாட்டு அமைப்புகள் மற்றும் மற்ற அறிவியல் கருவிகள் தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்ய நாசா முயற்சி செய்கிறது.

பூமியிலிருந்து 1500 கோடி கி.மீ. தொலைவில்!

வாயேஜர்-1 தற்போது பூமியிலிருந்து 1500 கோடி கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவில் உள்ளது.

அவ்வளவு தொலைவில் இருக்கும் விண்கலத்துடன் தொடர்புகொள்வதும் மிகப்பெரிய சவால்தான். பூமியிலிருந்து அனுப்பப்படும் ஒரு ரேடியோ சிக்னல் வாயேஜர்-1-ஐ சென்றடைய சுமார் 23 மணி நேரம் ஆகிறது. அதேபோல், அங்கிருந்து அனுப்பப்படும் தகவலும் பூமியை வந்தடைய சுமார் 23 மணி நேரம் ஆகும்.

LECP கருவி நிறுத்தப்பட்டதால், அந்தக் கருவி மூலம் கிடைத்து வந்த அறிவியல் தகவல்கள் இனி கிடைக்காது. இருப்பினும், மேலும் இரண்டு முக்கிய அறிவியல் கருவிகள் தொடர்ந்து செயல்பட்டு, விண்மீன்களுக்கு இடையிலான விண்வெளி குறித்த மதிப்புமிக்க தகவல்களை பூமிக்கு அனுப்பி வருகின்றன.

இன்னும் கொஞ்சம் காலம் பயணிக்கும்!

வாயேஜர்-1-ன் மின்சாரத்தை மேலும் சேமிப்பதற்கான வழிகளை நாசா விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர்.

தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கை மூலம் வாயேஜர்-1 குறைந்தது மேலும் ஒரு ஆண்டாவது தொடர்ந்து செயல்பட வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

கிட்டத்தட்ட அரை நூற்றாண்டாக விண்வெளியின் ஆழத்தை நோக்கிப் பயணித்து வரும் வாயேஜர்-1-ன் கருவிகள் ஒவ்வொன்றாக ஓய்வெடுக்கத் தொடங்கினாலும், அதன் பயணம் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

மெல்ல மெல்ல அதன் ‘சக்தி’ குறைந்து வருகிறது… ஆனால் மனிதகுலத்துக்காக அது அனுப்பும் விண்வெளிச் செய்திகள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன!