சென்னை: 1865-ம் ஆண்டு முதல் உள்ள பழைய சொத்து ஆவணங்கள் மற்றும் கோடிக்கணக்கான பிறப்பு, இறப்பு பதிவுகளை டிஜிட்டல் மயமாக்க தமிழக பதிவுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்காக 2.23 கோடி ஆவணங்களில் உள்ள சுமார் 11.15 கோடி பக்கங்களை டிஜிட்டல் மயமாக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் பழைய சொத்து ஆவணங்களை எளிதாக தேடி எடுக்க முடியும். உரிமை தொடர்பான வரலாற்றை சரிபார்ப்பதுடன், போலி மற்றும் இரட்டைப் பதிவுகளைக் கண்டறிந்து மோசடிகளையும் தடுக்க முடியும்.

மேலும், 5.69 கோடி பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகளின் தகவல்களும் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்பட உள்ளன. 1865 முதல் 1974 வரை பதிவு செய்யப்பட்ட ஆவணங்களில் உள்ள அடமானம் உள்ளிட்ட விவரங்களும் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்படும்.

சென்னை, கடலூர், கோவை, மதுரை, சேலம், திருநெல்வேலி, தஞ்சாவூர், திருச்சி, வேலூர் என 9 மண்டலங்களில் உள்ள 581 சார்பதிவாளர் அலுவலகங்களும் இத்திட்டத்தில் இடம்பெறும். பணிகள் முடிந்ததும் சொத்து ஆவணங்கள் பதிவுத்துறையின் STAR 2.0 தளத்துக்கு மாற்றப்படும்.

இந்தப் பணிகள் 14 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 13 மாதங்களில் டிஜிட்டல் மயமாக்கல் முடிக்கப்பட்டு, கடைசி ஒரு மாதம் சரிபார்ப்பு மற்றும் ஒப்படைப்புக்கு பயன்படுத்தப்படும்.

முழு தரவுகளையும் சேமிக்க 1.2 பெட்டாபைட் சேமிப்புத் திறன் தேவைப்படும். தரவுகளின் பாதுகாப்புக்காக ஒவ்வொரு ஆவணத் தொகுப்புக்கும் கண்காணிப்பு வசதி ஏற்படுத்தப்படுவதுடன், அதிகாரிகளின் கைரேகை மற்றும் டிஜிட்டல் கையொப்பமும் பயன்படுத்தப்படும்.

இந்த ஆவணங்கள் பெருங்குடியில் உள்ள மாநில தரவு மையத்தின் பாதுகாப்பான பகுதியில், NIC மற்றும் ELCOT இணைந்து பராமரிக்கும் வசதியில் சேமிக்கப்படும்.

இத்திட்டத்துக்கான டெண்டர் விண்ணப்பங்கள் செப்டம்பர் 15-ம் தேதி திறக்கப்பட்டு, செப்டம்பர் 23-ம் தேதி நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.