சீனா–நேபாள எல்லைப் பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளத்துக்கு பனிச்சரிவு அல்லது பனிப்பாறை ஏரி உடைப்பு காரணமாக இருக்கலாம் என தமிழக அரசின் எல் நினோ நிபுணர் ஆலோசனைக் குழு உறுப்பினரும், வானிலை ஆர்வலருமான பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

Bhotekoshi ஆற்றின் மேல்பகுதியில் உள்ள Lhende ஆற்றில் பனிச்சரிவு ஏற்பட்டு, ஆற்றின் நீரோட்டம் தற்காலிகமாகத் தடைப்பட்டிருக்கலாம். இதனால் தண்ணீர் தேங்கி, பின்னர் அந்தத் தடுப்பு உடைந்தபோது பெரும் வெள்ளம் வேகமாக கீழ்நோக்கிப் பாய்ந்திருக்கலாம் என அவர் கூறியுள்ளார்.

மேலும், திபெத் பகுதியில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. எனவே, அந்த நிலநடுக்கம் பனி அல்லது பாறைகள் சரிவதற்குத் தூண்டுதலாக இருந்திருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மற்றொரு சாத்தியமாக, இப்பகுதியில் உள்ள பனிப்பாறை ஏரி உடைந்து திடீர் வெள்ளம் ஏற்பட்டிருக்கலாம் (GLOF) என்றும் பிரதீப் ஜான் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இதுவரை எந்த காரணமும் உறுதி செய்யப்படவில்லை. செயற்கைக்கோள் படங்கள் மற்றும் கள ஆய்வுகளுக்குப் பிறகே உண்மையான காரணம் தெரியவரும்.

2025-ம் ஆண்டும் இதே Lhende–Bhotekoshi ஆற்றுப் பகுதியில் இதேபோன்ற திடீர் வெள்ளம் ஏற்பட்டது. அப்போது திபெத் பகுதியில் இருந்த பனிப்பாறை ஏரி திடீரென வடிந்ததே வெள்ளத்துக்குக் காரணம் என்பது பின்னர் ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டது. அந்தச் சம்பவத்தில் உயிரிழப்புகளுடன், நேபாளம்–சீனாவை இணைக்கும் Friendship Bridge-ம் சேதமடைந்தது.

தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளம், கடந்த ஆண்டைவிட மிகவும் தீவிரமாக இருப்பதாகத் தெரிகிறது. மேல்பகுதியில் இருந்து திடீரென வெள்ளநீர் வெளியேறியதால், கீழ்ப்பகுதியில் வசித்த மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கவும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவும் போதிய நேரம் கிடைக்காமல் போயிருக்கலாம் என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

மேலும், Rasuwagadhi பகுதி Langtang மலைப்பகுதிக்கும், திபெத்தில் உள்ள Mount Kailash மற்றும் Mansarovar பகுதிகளுக்கும் செல்லும் முக்கியப் பாதையாகும். இதனால் அப்பகுதியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மற்றும் மலையேற்றப் பயணிகள் இருந்திருக்க வாய்ப்புள்ளது.

வெள்ளம் மிகவும் திடீரென ஏற்பட்டதால், அப்பகுதியின் நில அமைப்பையும் வெள்ள அபாயத்தையும் அறிந்திராத வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பலரும் தப்பிக்க முடியாமல் சிக்கியிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.