மேகதாது திட்டத்தின் மூலம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் நலன்களை பாதுகாக்க கர்நாடகா உறுதியாக இருப்பதாக அம்மாநில துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.
தென் மாநில முதலமைச்சர்கள் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேகதாது அணையில் குடிநீருக்காக 5 டி.எம்.சி. நீரை மட்டும் வைத்துக்கொண்டு, மீதமுள்ள நீர் முழுவதும் தமிழ்நாட்டுக்கு திறந்துவிடப்படும் என்றார்.

“இந்த அணை உங்களுக்காகத்தான் கட்டப்படுகிறது; எங்களுக்காக அல்ல” என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை குறிப்பிட்டு அவர் தெரிவித்தார்.
மேலும், நீர் பங்கீடு தொடர்பான பிரச்சினைகளை சுமுகமாகத் தீர்க்க தனியாக கூட்டம் நடத்த அமித் ஷா விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் சிவகுமார் கூறினார்.
“நதிகளுக்கு மாநில எல்லைகள் கிடையாது. காவிரி, கிருஷ்ணா, துங்கபத்ரா, பெண்ணையாறு, பாலாறு உள்ளிட்ட நதிகள் தென் மாநிலங்களின் உயிர்நாடிகள். நீர் பங்கீடு என்ற நிலையிலிருந்து நீர் ஒத்துழைப்புக்கு நாம் மாற வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார்.
அண்டை மாநிலங்களின் உரிமைகளை கர்நாடகா எப்போதும் மதித்து வருவதாகவும், அதேபோல் கர்நாடகாவின் உரிமைகளையும் மதிக்க வேண்டும் என்றும் சிவகுமார் வலியுறுத்தினார். நீர்வழக்கு தீர்ப்பாயங்களின் தீர்ப்புகளின்படி கர்நாடகாவுக்கு கிடைக்க வேண்டிய சட்டப்பூர்வ நீர்ப்பங்கையும், விவசாயிகளுக்கு நீரை கொண்டு சேர்க்கும் திட்டங்களையும் உரிய காலத்தில் நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார்.