டாஸ்மாக் பார்களில் இனி மது மட்டுமின்றி டீ, காபி, பழச்சாறுகளும் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட உள்ளது. பார்களிலேயே சமையலறை அமைத்து, சுகாதார விதிகளைப் பின்பற்றி தின்பண்டங்களைத் தயாரித்து விற்கவும் அனுமதி வழங்கப்பட உள்ளது.

வரும் ஆகஸ்ட் 30-ம் தேதியுடன் தற்போதைய பார் உரிமங்கள் முடிவடையும் நிலையில், புதிய விதிமுறைகளுடன் டெண்டர் வெளியிட டாஸ்மாக் தயாராகி வருவதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த புதிய நடவடிக்கை டாஸ்மாக் கடைகளுடன் செயல்படும் பார்களில் பல ஆண்டுகளாக நிலவி வரும் முறைகேடுகள் மற்றும் சுகாதாரப் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று கூறப்படுகிறது.

டாஸ்மாக் பார்களில் இனி மது மட்டுமின்றி டீ, காபி, பழச்சாறுகளும் விற்பனை செய்ய அனுமதிக்கப்படும் என்பதால் கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருப்பது போல் மது அருந்தாதவர்களும் பார்களுக்கு வர முடியும்.

இதனால் காவல்துறை, உள்ளாட்சி பிரதிநிதிகள், டாஸ்மாக் மாவட்ட மேலாளர்கள் மற்றும் மதுவிலக்கு அமலாக்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கும் நிலை இருக்காது என்று கூறப்படுகிறது.

மேலும், பார்களுக்குள் தனியாக சமையலறை அமைத்து, தின்பண்டங்களைத் தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு சூடாக வழங்க அனுமதி அளிக்கப்பட உள்ளது. தற்போது பெரும்பாலான பார்களில் சமையலறைகள் செயல்பட்டு வந்தாலும், அது தற்போதைய விதிகளுக்கு எதிரானதாக உள்ளது.

டாஸ்மாக் கடைகளில் இருந்து 100 மீட்டருக்குள் பார்கள் செயல்பட அனுமதிக்கும் வகையில், 2003-ம் ஆண்டு தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளில் ஏற்கனவே திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, டாஸ்மாக் கடைக்கு அருகில் உள்ள இடத்துக்கு தடையில்லாச் சான்றிதழ் (NOC) பெற்றவர்கள் பார் டெண்டரில் பங்கேற்கலாம்.

பார்களில் சமையலறை அமைக்கக்கூடாது என்ற விதி தேவையற்றது என மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் கே.விக்னேஷ் தெரிவித்துள்ளார். சமையலறைக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும், அதே நேரத்தில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் உறுதி செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

புதிய வரைவு விதிகளின்படி, சமையலறை தனியாக அமைக்கப்பட வேண்டும். அது வாடிக்கையாளர்கள் அமரும் இடத்தில் இருந்து தனியாகப் பிரிக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம், 2006-ல் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விதிகளையும் சமையலறை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

பார் நடத்துவதற்கான ஒப்பந்த காலம் 2 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக உயர்த்தப்பட உள்ளது. விதிமுறைகளை முறையாகப் பின்பற்றினால், மேலும் ஓராண்டுக்கு என இரண்டு முறை ஒப்பந்தத்தை நீட்டிக்கவும் வாய்ப்பு வழங்கப்படும்.

வருவாயை அதிகரிக்கும் வகையில், இதுவரை இருந்த நிலையான மாத உரிமக் கட்டணத்துக்குப் பதிலாக, ஒவ்வொரு மாத விற்பனையைப் பொறுத்து மாறும் கட்டண முறையை டாஸ்மாக் அறிமுகப்படுத்த உள்ளது. அதிகபட்ச ஏலத்தொகை (H1) எடுத்தவரிடம்கூட கூடுதல் தொகை கோரப்படும். உண்மையான மாத விற்பனையின் அடிப்படையில் உரிமக் கட்டணம் நிர்ணயிக்கப்படும்.

மேலும், பார் கட்டாயம் முறையான கான்கிரீட் கட்டிடமாக இருக்க வேண்டும் என புதிய விதிகளில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. தற்காலிகக் கொட்டகை, முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட கட்டமைப்பு, தகரம், ஆஸ்பெஸ்டாஸ் தாள், மரம், மூங்கில், தார்ப்பாய் அல்லது ஓலை போன்றவற்றால் அமைக்கப்பட்ட இடங்களில் பார் நடத்த அனுமதி இல்லை.

பார்களின் இடங்களை சுத்தமாகவும், வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையிலும் மாற்றுவதற்காக மேலும் பல சீர்திருத்தங்கள் புதிய டெண்டரில் இடம்பெறும் என டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளையில், புதிய டெண்டருக்கான விதிகளை உருவாக்கும்போது டாஸ்மாக் நிர்வாகம் பார் உரிமையாளர்களிடம் கருத்து கேட்கவில்லை என பார் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

டாஸ்மாக் கடைகளில் இருந்து 100 மீட்டருக்குள் பார்களை அனுமதிப்பதற்கு ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக, தமிழ்நாடு டாஸ்மாக் பார் உரிமையாளர்கள், கட்டிட உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறியுள்ளனர். மேலும், இந்த நடவடிக்கை பொதுமக்களின் பாதுகாப்பை பாதிக்கும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்தனர்.

இருப்பினும், இந்த மாற்றத்தை வரவேற்றுள்ள வாடிக்கையாளர்கள், அரசு புதிய விதிகளை உருவாக்குவதுடன் நின்றுவிடாமல், அவை முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.