அமெரிக்கர்களை குறிவைத்து போலி கடன் செயலி மோசடி: குஜராத்தைச் சேர்ந்த கும்பல் திருவனந்தபுரத்தில் சிக்கியது
திருவனந்தபுரத்தில் கால் சென்டர் என்ற பெயரில் செயல்பட்டு, அமெரிக்கர்களை குறிவைத்து ஆன்லைன் கடன் மோசடியில் ஈடுபட்ட கும்பலை நகர காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதுவரை இந்த வழக்கில் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நகர காவல் ஆணையர் அருள் ஆர்.பி. கிருஷ்ணா கூறுகையில், இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்டவர்கள் குஜராத்தைச் சேர்ந்த 3 பேர். அவர்களில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர். விசாரணை நலன் கருதி அவர்களின் பெயர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்றார்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் திருவனந்தபுரம் விமான நிலையத்திலும், மற்றொருவர் தப்பிச் செல்ல முயன்றபோது அகமதாபாத் விமான நிலையத்திலும் பிடிபட்டனர். இந்த கும்பலின் இணையவழி நடவடிக்கைகளை கடந்த சில வாரங்களாக போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சோதனையின் போது அலுவலகத்தில் இருந்த லேப்டாப்கள், செல்போன்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சொகுசு அலுவலகத்தில் இயங்கிய இந்த கால் சென்டரில் சுமார் 50 பேர் பணியாற்றி வந்தனர். முக்கிய குற்றவாளிகள் குஜராத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், மற்ற ஊழியர்கள் உத்தரப் பிரதேசம் மற்றும் பீகாரிலிருந்து வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தனர்.
கும்பலில் ஒருவர் அமெரிக்க ஆங்கில உச்சரிப்பில் பேசிப் பொதுமக்களின் நம்பிக்கையைப் பெற்று கடன் வழங்குவதாக கூறுவார். பின்னர் அவர்களின் விவரங்கள் மற்ற ஊழியர்களிடம் பகிரப்பட்டு, ஒரு இணைப்பு (லிங்க்) அனுப்பி தனிப்பட்ட தகவல்கள் சேகரிக்கப்பட்டன. அதன் பிறகு பல்வேறு கட்டணங்கள், குறிப்பாக புராசசிங் கட்டணம் என்ற பெயரில் பணம் வசூலிக்கப்பட்டது. பணத்தை திருப்பிச் செலுத்த முடியாதவர்களை மிரட்டியும் பணம் பறித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட மின்னணு சாதனங்கள் அனைத்தும் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதன் மூலம் மோசடியின் முழு பரிமாணமும் தெரியவரும் என்று காவல் ஆணையர் கூறினார்.
சோதனையின்போது ஒரு கணினியில் “Don’t Touch the System, Will Shoot You” (இந்த கணினியைத் தொடாதீர்கள்; சுட்டுவிடுவோம்) என்று ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர் போலீசாரின் கவனத்தை ஈர்த்தது. அந்த கணினியை முக்கிய குற்றவாளி பயன்படுத்தியிருக்கலாம் என்றும், மோசடி தொடர்பான முக்கிய தகவல்கள் அதில் இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. அந்தக் கணினியும் தடயவியல் ஆய்வுக்காக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
குஜராத்தைச் சேர்ந்த 3 பேர்தான் இந்த மோசடி திட்டத்தை வகுத்து, ஆட்களை நியமித்து, கேரளாவை மையமாகக் கொண்டு செயல்படுத்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுவரை இந்த மோசடியில் எந்த கேரளாவாசிக்கும் தொடர்பு இருப்பது கண்டறியப்படவில்லை. பெரும்பாலான பாதிக்கப்பட்டவர்கள் அமெரிக்க குடிமக்களே. அமெரிக்காவில் செயல்படும் ஒரு பிரபல கடன் செயலியின் பெயரை பயன்படுத்தி மக்களை ஏமாற்றியிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.