அரசியல் தலைவர்களும் ஆதரவாளர்களும் உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டாலும், தனது காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்தப் போவதில்லை என்று சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக புதன்கிழமை இரவு வெளியிட்ட வீடியோவில், “உண்ணாவிரதத்தை முடிக்குமாறு ஆயிரக்கணக்கானோர் எனக்கு தகவல் அனுப்பியுள்ளனர். பல மூத்த அரசியல் தலைவர்களும் நேரில் வந்து அன்புடனும் அக்கறையுடனும் பேசியுள்ளனர்.

ஆனால் இப்போது நான் உண்ணாவிரதத்தை கைவிட்டால் அரசுக்கு என்ன செய்தி செல்லும்? போராட்டம் நடத்துபவர்கள் வந்து சில நாட்கள் இருந்து சென்றுவிடுவார்கள்; அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று அரசு நினைத்துவிடும்” என்றார்.
மேலும், “உண்ணாவிரதத்தை நிறுத்தச் சொல்லுவதற்குப் பதிலாக, ஜூலை 20-ஆம் தேதி ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ சார்பில் நடைபெற உள்ள ‘பாராளுமன்றம் நோக்கிப் பேரணி’ போராட்டத்தில் மாணவர்களும் பொதுமக்களும் பங்கேற்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையில், சோனம் வாங்சுக்கை கட்டாயமாக மருத்துவமனையில் அனுமதிக்க மத்திய மற்றும் டெல்லி அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கும் அவர் பதிலளித்தார்.
“எனது உடல்நிலைக்கு உடனடி ஆபத்து எதுவும் இல்லை. இ.சி.ஜி. உள்ளிட்ட அனைத்து மருத்துவப் பரிசோதனை முடிவுகளும் இயல்பாக உள்ளன. உடலில் சிறிது பலவீனம் இருந்தாலும், என் இதயமும் மனஉறுதியும் வலிமையாக உள்ளன. இன்னும் பல நாட்கள் போராட முடியும்” என்று கூறினார்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட கல்வித்துறையில் நடைபெறுவதாக கூறப்படும் முறைகேடுகளை கண்டித்தும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை வலியுறுத்தியும் ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகிறது. இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக சோனம் வாங்சுக் கடந்த 18 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.