அமெரிக்கா – ஈரான் இடையே தாக்குதல் மற்றும் பதிலடி நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ஹோர்முஸ் ஜலசந்தியை முழுமையாக மூடியுள்ளதாக ஈரான் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.
ஆனால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இதை மறுத்து, “வணிகக் கப்பல்களின் போக்குவரத்துக்கு ஹோர்முஸ் ஜலசந்தி திறந்தே உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
என்பிசி தொலைக்காட்சியின் “மீட் தி பிரஸ்” நிகழ்ச்சியில் பேசிய டிரம்ப், ஈரான் அந்த ஜலசந்தியை கட்டுப்படுத்துவதாக கூறுவதை ஏற்க முடியாது என்றார்.

போர் தொடங்குவதற்கு முன்பு ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் சுதந்திரமாகச் சென்றுவந்தன. தற்போது அந்தப் பகுதி தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக ஈரான் வலியுறுத்தி வருகிறது. ஆனால் அதனை அமெரிக்கா திட்டவட்டமாக மறுத்துள்ளது.
ஈரான் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனியின் ஆலோசகர்களில் ஒருவரான அதிகாரி, “ஹோர்முஸ் ஜலசந்தியின் கட்டுப்பாடு ஈரானுக்கு மிகப்பெரிய சக்தி. அது பல அணுகுண்டுகளை விடவும் முக்கியமானது” என்று கூறியதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ஈரான் ஜலசந்தியை மூடியதாகக் கூறினாலும், கப்பல் போக்குவரத்து வழக்கம்போல நடைபெற்று வருவதாக அமெரிக்க ராணுவத்தின் சென்ட்ரல் கமாண்ட் தெரிவித்துள்ளது.
சமூக வலைதளமான எக்ஸில் வெளியிட்ட பதிவில், “ஹோர்முஸ் ஜலசந்தி ஈரானின் கட்டுப்பாட்டில் இல்லை. கப்பல் போக்குவரத்து சுதந்திரமாக நடைபெற்று வருகிறது. கப்பல்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய அமெரிக்க ராணுவப் படைகள் தயார் நிலையில் உள்ளன” என்று சென்ட்ரல் கமாண்ட் கூறியுள்ளது.
ஆனால், அடுத்த அறிவிப்பு வரும் வரை மற்றும் அந்தப் பகுதியில் அமெரிக்க தலையீடு முடிவடையும் வரை ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டே இருக்கும் என்று ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) தெரிவித்துள்ளது. மேலும் விதிமுறைகளை மீறிய இரண்டு கப்பல்களை இலக்காகக் கொண்டு நடவடிக்கை எடுத்ததாகவும் ஈரான் கூறியுள்ளது.
இதற்கு பதிலடியாக, ஈரானின் சுமார் 140 இலக்குகள் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டதாக அமெரிக்க சென்ட்ரல் கமாண்ட் தெரிவித்துள்ளது.
சிஎன்என் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் டிரம்ப் கூறுகையில், “நேற்று இரவு ஈரான் மீது மிகக் கடுமையான தாக்குதலை நடத்தினோம். அமெரிக்காவும் ஈரானும் சனிக்கிழமை ஒரு உடன்பாட்டை எட்டும் நிலையில் இருந்தன. ஆனால் இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு அவர்கள் ட்ரோன் மூலம் ஒரு கப்பலைத் தாக்கினர். அதற்கு பதிலாக வான்வழித் தாக்குதல் நடத்தி கடுமையான சேதத்தை ஏற்படுத்தினோம்” என்றார்.