தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள நா லாட்ப்ராவ் (Na Ladprao) என்ற பப்பில் திங்கள்கிழமை அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர். மேலும் 63 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 22 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்தில் இருந்தவர்கள் எடுத்த வீடியோக்களில், பப்பை முழுவதும் தீ சூழ்ந்திருப்பதும், கரும்புகை வெளியேறுவதும், மக்கள் உயிர் தப்பிக்க அலறியடித்து வெளியே ஓடுவதும் பதிவாகியுள்ளது.
தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன்விராகுல் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு, தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

பப்பில் இசை நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்த இசைக் கலைஞர் ஒருவர், மேடைக்கு அருகிலிருந்த மின்சார சர்க்யூட் பிரேக்கரில் இருந்து முதலில் புகை வந்ததாகவும், பின்னர் மின்சாரம் தடைபட்டு சில நொடிகளில் பெரிய வெடிப்பு சத்தம் கேட்டதாகவும் கூறியுள்ளார். அதன்பின் அடர்ந்த புகை வேகமாக பரவியதால் பலர் வெளியேற முடியாமல் சிக்கியதாக தெரிகிறது.
உயிரிழந்தவர்களில் பலர் பப்பின் பின்புற கழிப்பறை பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாங்காக் ஆளுநர் சட்சார்ட் சிட்டிபுண்ட் கூறுகையில், 63 பேர் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். பலர் அடையாள ஆவணங்கள் இன்றி இருந்ததால், உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.
தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்களுக்கு சுமார் 30 நிமிடங்கள் பிடித்தது. மீட்புப் பணியின் போது சில தீயணைப்பு வீரர்களும் காயமடைந்துள்ளனர்.
சம்பவத்தின்போது அருகில் பாடல் நிகழ்ச்சியில் இருந்த பாடகி சுகன்யா வொங்வொங்வாய் கூறுகையில், “தீப்பற்றிய உடனே மின்சாரம் முழுவதும் துண்டிக்கப்பட்டது. எங்கும் புகை சூழ்ந்ததால் உள்ளே இருந்தவர்கள் ஒருவரை ஒருவர் கூட பார்க்க முடியவில்லை” என்றார்.
இதற்கு முன்பும் தாய்லாந்தில் இதுபோன்ற தீ விபத்துகள் நடந்துள்ளன. 2022-ஆம் ஆண்டு கிழக்கு தாய்லாந்தில் உள்ள ஒரு இசை பப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.