உலகின் மிகவும் பிரபலமான விளையாட்டான கால்பந்தில், வீரர்களின் ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் பராமரிக்க நடுவர்கள் (Referees) பயன்படுத்தும் முக்கிய கருவிகள் தான் மஞ்சள் கார்டு (Yellow Card) மற்றும் சிவப்பு கார்டு (Red Card).

தற்போது நடைபெற்று வரும் 2026 பிஃபா உலகக் கோப்பை தொடரில் அமெரிக்க வீரர் ஒருவருக்கு வழங்கப்பட்ட ரெட் கார்ட் அமெரிக்க அதிபர் டிரம்ப் கோரிக்கையை ஏற்று விலகிக்கொள்ளப்பட்ட நிலையில் கால்பந்து போட்டிகளில் உள்ள கார்டுகள் குறித்து அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

ஒரு போட்டியின் போக்கையே மாற்றக்கூடிய இந்த கார்டுகளின் வரலாறு, விதிமுறைகள் மற்றும் தடை நடைமுறைகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

மஞ்சள், சிவப்பு கார்டுகளின் வரலாறு

1960-கள் வரை கால்பந்தில் மஞ்சள் மற்றும் சிவப்பு கார்டுகள் என்ற நடைமுறை இல்லை. வீரர்களுக்கு நடுவர்கள் வாய்மொழியாக எச்சரிக்கை வழங்கியோ அல்லது மைதானத்திலிருந்து வெளியேற்றியோ வந்தனர்.

ஆனால் 1962 உலகக் கோப்பையில் சிலி மற்றும் இத்தாலி அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் மொழிப் பிரச்சினை காரணமாக நடுவரின் முடிவு வீரர்களுக்குப் புரியாமல் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

இதற்கு தீர்வாக பிரிட்டிஷ் நடுவர் கென் ஆஸ்டன் போக்குவரத்து சிக்னல்களில் இருந்து ஈர்க்கப்பட்டு மஞ்சள் மற்றும் சிவப்பு கார்டு முறையை உருவாக்கினார். பிஃபா இதை முதன்முறையாக 1970 மெக்சிகோ உலகக் கோப்பையில் அறிமுகப்படுத்தியது.

கார்டு முறைக்கு காரணமான இரண்டு முக்கிய சம்பவங்கள்

1. “பேட்டில் ஆஃப் சாண்டியாகோ” (1962)

சிலி மற்றும் இத்தாலி அணிகளுக்கு இடையேயான வன்முறை நிறைந்த போட்டியை கென் ஆஸ்டன் நடத்தியார். இத்தாலி வீரர் ஜியோர்ஜியோ ஃபெரினியை வெளியேறுமாறு ஆங்கிலத்தில் உத்தரவிட்டபோதும், மொழி தெரியாதது போல் நடித்து அவர் மைதானத்தை விட்டு செல்ல மறுத்தார். இறுதியில் காவல்துறையினர் வந்து அவரை வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.

2. இங்கிலாந்து – அர்ஜென்டினா சர்ச்சை (1966)

1966 உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணித்தலைவர் ஆண்டோனியோ ராட்டினை ஜெர்மன் நடுவர் வெளியேற்றினார். ஆனால் மொழிப் பிரச்சினை காரணமாக அவர் ஏன் வெளியேற்றப்பட்டார் என்பது புரியாமல் சுமார் 9 நிமிடங்கள் மைதானத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அதே போட்டியில் இங்கிலாந்து வீரர்களான பாபி சார்ல்டன் மற்றும் ஜாக் சார்ல்டனுக்கும் அதிகாரப்பூர்வ எச்சரிக்கை வழங்கப்பட்டது. ஆனால் அது வீரர்களுக்கோ, ஊடகங்களுக்கோ போட்டி முடியும் வரை தெரியவில்லை.

போக்குவரத்து சிக்னலில் இருந்து வந்த யோசனை

1966 உலகக் கோப்பைக்குப் பிறகு கென் ஆஸ்டன் லண்டனில் கார் ஓட்டிச் செல்லும்போது போக்குவரத்து சிக்னலில் நின்றிருந்தார்.

அப்போது மஞ்சள் விளக்கு “எச்சரிக்கை” என்பதையும், சிவப்பு விளக்கு “நிறுத்து” என்பதையும் குறிக்கிறது என்பதை நினைத்த அவர், இதையே கால்பந்திலும் பயன்படுத்தினால் உலகின் எந்த நாட்டைச் சேர்ந்த வீரருக்கும் மொழி தெரியாவிட்டாலும் நடுவரின் முடிவு உடனே புரியும் என கருதினார்.

வீட்டிற்கு திரும்பியதும் தனது மனைவி இல்பே உதவியுடன் பாக்கெட்டில் வைத்துச் செல்லக்கூடிய சிறிய மஞ்சள் மற்றும் சிவப்பு கார்டுகளை உருவாக்கினார்.

எப்போது நடைமுறைக்கு வந்தது?

பிஃபா ஒழுங்கு நடவடிக்கை குழு கென் ஆஸ்டனின் யோசனையை ஏற்றுக்கொண்டது.

1970 மெக்சிகோ உலகக் கோப்பையில் முதன்முறையாக மஞ்சள் மற்றும் சிவப்பு கார்டு முறை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.

உலகக் கோப்பை வரலாற்றில் முதல் மஞ்சள் கார்டைப் பெற்றவர் சோவியத் யூனியன் (USSR) வீரர் காகி அசதியானி ஆவார்.

இந்த முறை நடுவர்களின் பணியை எளிதாக்கியதுடன், வீரர்களின் ஒழுங்கீன செயல்களையும் கணிசமாகக் குறைத்தது. பின்னர் ஹாக்கி, ரக்பி உள்ளிட்ட பல விளையாட்டுகளும் இதை பின்பற்றத் தொடங்கின.

மஞ்சள் கார்டு என்றால் என்ன?

மஞ்சள் கார்டு என்பது வீரருக்கு வழங்கப்படும் அதிகாரப்பூர்வ எச்சரிக்கை ஆகும்.

எப்போது வழங்கப்படும்?

  • கவனக்குறைவான டாக்கிள் செய்தல்
  • நேரத்தை வீணடித்தல்
  • நடுவரின் முடிவை எதிர்த்து வாதிடுதல்
  • விளையாட்டு ஒழுங்குக்கு முரணான நடத்தை
  • விதிமுறைகளை மீண்டும் மீண்டும் மீறுதல்

விளைவு

மஞ்சள் கார்டு பெற்ற வீரர் தொடர்ந்து போட்டியில் விளையாடலாம். ஆனால் அதன் பிறகு மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

சிவப்பு கார்டு என்றால் என்ன?

சிவப்பு கார்டு என்பது வீரரை உடனடியாக மைதானத்திலிருந்து வெளியேற்றும் கடுமையான தண்டனை ஆகும்.

எப்போது வழங்கப்படும்?

  • எதிரணி வீரருக்கு கடுமையான காயம் ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான தவறு செய்தல்
  • உடல் ரீதியான தாக்குதல் அல்லது வன்முறையில் ஈடுபடுதல்
  • ஆபாச அல்லது இழிவான வார்த்தைகளை பயன்படுத்துதல்
  • எதிரணி அணியின் உறுதியான கோல் வாய்ப்பை விதிமுறைக்கு முரணாக தடுத்தல்

இரண்டாவது மஞ்சள் கார்டு விதி

ஒரே போட்டியில் ஒரு வீரர் இரண்டு முறை மஞ்சள் கார்டு பெறும் தவறு செய்தால், நடுவர் அவருக்கு சிவப்பு கார்டு காட்டி வெளியேற்றுவார்.

அணிக்கு ஏற்படும் பாதிப்பு

ஒரு வீரர் சிவப்பு கார்டு பெற்று வெளியேற்றப்பட்டால், அவருக்குப் பதிலாக மாற்று வீரரை களமிறக்க முடியாது.

இதனால் அந்த அணி போட்டியின் மீதமுள்ள நேரத்தை 10 வீரர்களுடன் மட்டுமே விளையாட வேண்டிய நிலை ஏற்படும். இது போட்டியின் முடிவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

வீரர்கள் மட்டுமல்லாமல், பயிற்சியாளர்கள் மற்றும் அணியின் நிர்வாகிகளுக்கும் நடுவர்கள் கார்டு காட்டி வெளியேற்ற முடியும்.

தடை விதிகள் எப்படி செயல்படுகின்றன?

நேரடி சிவப்பு கார்டு அல்லது இரண்டு மஞ்சள் கார்டுகள்

ஒரு போட்டியில் சிவப்பு கார்டு பெற்ற வீரர் தானாகவே குறைந்தது அடுத்த ஒரு போட்டியில் விளையாடத் தடை செய்யப்படுவார்.

குற்றத்தின் தீவிரம் அதிகமாக இருந்தால் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகளுக்கு தடை விதிக்கப்படலாம்.

மஞ்சள் கார்டுகள் சேரும் போது

பல்வேறு போட்டிகளில் தொடர்ந்து மஞ்சள் கார்டுகள் பெற்றாலும் தடை விதிக்கப்படும்.

உலகக் கோப்பை மற்றும் யூரோ கோப்பை

தொடரின் வெவ்வேறு போட்டிகளில் மொத்தம் இரண்டு மஞ்சள் கார்டுகள் பெற்றால் அடுத்த ஒரு போட்டியில் விளையாட முடியாது.

கிளப் கால்பந்து (EPL, லா லிகா போன்றவை)

பொதுவாக சீசனின் முதல் பாதியில் ஐந்து மஞ்சள் கார்டுகள் பெற்றால் ஒரு போட்டி தடை விதிக்கப்படும்.

கார்டு ரீசெட் (Reset) விதி

முக்கிய வீரர்கள் வெறும் மஞ்சள் கார்டுகள் காரணமாக இறுதிப் போட்டியை தவறவிடக்கூடாது என்பதற்காக “கார்டு ரீசெட்” விதி உள்ளது.

பிஃபா உலகக் கோப்பையில் காலிறுதி சுற்று முடிந்த பிறகு மஞ்சள் கார்டு கணக்குகள் பூஜ்ஜியமாக மாற்றப்படும்.

இதனால் அரையிறுதியில் ஒரு மஞ்சள் கார்டு பெற்றாலும் அந்த வீரர் இறுதிப் போட்டியில் விளையாட முடியும்.

ஆனால் அரையிறுதிக்கு முன்பே இரண்டு மஞ்சள் கார்டுகள் பெற்று தடை செய்யப்பட்டிருந்தால் இந்த சலுகை கிடையாது.

சமீபத்திய புதிய விதிமுறைகள்

விளையாட்டில் ஒழுக்கத்தை மேலும் வலுப்படுத்த பிஃபா புதிய கடுமையான விதிமுறைகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

2026 உலகக் கோப்பை முதல், நடுவரின் முடிவை கடுமையாக எதிர்த்து மைதானத்தை விட்டு வெளியேற மறுக்கும் வீரர்களுக்கு நேரடி சிவப்பு கார்டு வழங்கப்படும்.

மேலும், மைதானத்தில் மோதல் ஏற்படும் போது வாயை அல்லது முகத்தை மறைத்துக்கொண்டு இழிவான வார்த்தைகளை பயன்படுத்தும் வீரர்களுக்கும் சிவப்பு கார்டு வழங்கப்படும்.

போக்குவரத்து சிக்னல்களில் இருந்து பிறந்த இந்த மஞ்சள் மற்றும் சிவப்பு கார்டு முறை, இன்று உலக கால்பந்தின் முக்கியமான ஒழுங்கு நடவடிக்கை முறையாக விளங்கி வருகிறது.