ஜெர்மன் நாட்டில் சர்க்கரை கலந்த குளிர்பானங்களுக்கு புதிய வரி விதிக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதிகரித்து வரும் நிதிப்பற்றாக்குறையை சமாளிக்கும் நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2027-ம் ஆண்டு பட்ஜெட்டில் இந்த ‘சர்க்கரை வரி’ இடம்பெறும் என கூறப்படுகிறது. இதன் மூலம் Coca-Cola போன்ற இனிப்பு பானங்களை வாங்கும் மக்கள் கூடுதல் தொகை செலுத்த வேண்டிய நிலை ஏற்படலாம்.

இதற்கு முன் இதுபோன்ற வரி விதிக்கப்பட்ட நாடுகளில், சில குளிர்பான நிறுவனங்கள் சர்க்கரை அளவை குறைத்து, செயற்கை இனிப்புகளை அதிகம் பயன்படுத்த தொடங்கியுள்ளன.
ஜெர்மனி அரசு 2027-ல் தனது முக்கிய பட்ஜெட்டிற்காக 110 பில்லியன் யூரோ (சுமார் 12.2 லட்சம் கோடி ரூபாய்) கடன் பெற திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு 98 பில்லியன் யூரோவும் (சுமார் ரூ. 10.86 லட்சம் கோடி), 2025-ல் 66.9 பில்லியன் யூரோவும் கடன் பெறப்பட்டுள்ளது.
அதிபர் ஃபிரெட்ரிக் மெர்ஸின் தலைமையிலான அரசு, நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் பொருளாதாரத்தை வளர்த்தெடுக்கவும் கூடுதல் கடன் பெறும் திட்டங்களையும் முன்னெடுத்து வருகிறது.
மேலும், ரஷ்யா – உக்ரைன் போர் நீடித்து வரும் நிலையில், பாதுகாப்பு செலவுகளும் அதிகரித்துள்ளன. 2030-க்குள் பாதுகாப்பு செலவை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 3.7 சதவீதமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது அது 2.8 சதவீதமாக உள்ளது.
சவுதி அரேபியா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் ஏற்கனவே சர்க்கரை கலந்த பானங்களுக்கு வரி விதித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]