கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பான OPEC மற்றும் OPEC+ அமைப்புகளில் இருந்து விலகுவதாக ஐக்கிய அரபு அமீரகம் (UAE) அறிவித்துள்ளது. இந்த முடிவு மே 1 முதல் அமலுக்கு வரும் என அந்நாட்டு எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஹோர்முஸ் ஜலசந்தி நெருக்கடியால் எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தேசிய நலன், உற்பத்தித் திறன் மற்றும் எதிர்கால எரிசக்தி திட்டங்களை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக UAE தெரிவித்துள்ளது.

1967-ம் ஆண்டு OPEC-இல் இணைந்த UAE, தற்போது சவூதி அரேபியா மற்றும் ஈராக் நாடுகளுக்கு அடுத்தபடியாக பெரிய எண்ணெய் உற்பத்தியாளராக உள்ளது. OPEC+ ஒப்பந்தப்படி நாளொன்றுக்கு 30 லட்சம் பீப்பாய் எண்ணெய் மட்டுமே உற்பத்தி செய்ய அனுமதி இருந்தாலும், UAE-யின் தற்போதைய உற்பத்தித் திறன் 40 லட்சம் பீப்பாய்களாக உள்ளது. மேலும், 2027-க்குள் அதை 50 லட்சம் பீப்பாய்களாக உயர்த்த ADNOC நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

எண்ணெய் உற்பத்தி கட்டுப்பாடு தொடர்பாக OPEC அமைப்பில் நீண்டகாலமாக கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மற்ற உறுப்புநாடுகள் உற்பத்தியை குறைக்கும் முடிவில் UAE அதிருப்தியில் இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

2050-க்குள் ‘நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு’ இலக்கை அடைய UAE பல ஆயிரம் கோடி முதலீட்டு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. OPEC மற்றும் OPEC+ அமைப்புகளில் தொடர்ந்தால் இந்த இலக்கை அடைவது சிரமம் என அந்நாடு கருதுகிறது.

UAE விலகியதால் OPEC மற்றும் OPEC+ அமைப்புகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்த கூட்டத்தில் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம் என சர்வதேச பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.
இதற்கு முன் கத்தார் 2019-லும், இந்தோனேசியா 2016-லும் OPEC அமைப்பிலிருந்து விலகியிருந்தன. ஈக்வடார் மற்றும் அங்கோலாவும் பின்னர் வெளியேறின.

இதற்கிடையில், OPEC அமைப்பு எண்ணெய் விலையை செயற்கையாக உயர்த்துகிறது என அமெரிக்க அதிபர் Donald Trump தொடர்ந்து விமர்சித்து வந்துள்ளார். UAE-யின் இந்த முடிவு, டிரம்பின் கருத்துக்கு மேலும் வலு சேர்க்கும் என கூறப்படுகிறது.

[youtube-feed feed=1]