உகாண்டாவில் உள்ள கிபாலே தேசிய பூங்கா பகுதியில் வாழும் சிம்பான்ஸி குரங்குகள் தற்போது கடுமையான கோஷ்டி மோதலில் ஈடுபட்டு வருகின்றன. ஒரே கூட்டமாக இருந்த இவை, இரண்டு பிரிவுகளாகப் பிளந்து, ஒருவரை ஒருவர் தாக்கி கொல்வது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

பொதுவாக சிம்பான்ஸிகள் மற்ற குழுக்களுடன் தான் சண்டை போடுவது வழக்கம். ஆனால் ஒரே குழுவில் இருந்தவர்கள் இப்படியாகப் பிரிந்து போராடுவது மிகவும் அரிதானது.

இந்த ஆய்வை அமெரிக்காவின் ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஆரோன் சாண்டல் மற்றும் அவரது குழு மேற்கொண்டுள்ளனர். ஆய்வு முடிவுகள் Science இதழில் வெளியாகியுள்ளது.

சுமார் 200 சிம்பான்ஸிகள் இருந்த இந்த பெரிய கூட்டம், 2015ஆம் ஆண்டு முதல் இரண்டு பிரிவுகளாக மாறத் தொடங்கியது. ஆரம்பத்தில் இரு குழுக்களுக்கும் நட்பு இருந்தாலும், 2018க்கு பிறகு அந்த உறவுகள் முற்றிலும் முறிந்து, தாக்குதல் அதிகரித்தது.

இதன் பின்னர், ஒரே குழுவில் இருந்த குரங்குகள் இப்போது எதிரிகளாக மாறி, தாக்குதல் நடத்தி கொலை செய்யும் சம்பவங்கள் நடந்துள்ளன. 2021 முதல் குட்டி குரங்குகளையும் கொல்வது (infanticide) அதிகரித்துள்ளது.

இந்த மோதலுக்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. ஆனால்,

  • கூட்டம் மிகப் பெரியதாக இருந்தது
  • உணவு மற்றும் இனப்பெருக்க போட்டி
  • முக்கிய உறுப்பினர்கள் மரணம்
  • தலைமை மாற்றம்
  • நோய் பரவல்

போன்ற காரணங்கள் இதற்குக் காரணமாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

முன்னதாக, ஜேன் குட்ஆல், 50 ஆண்டுகளுக்கு முன் இதுபோன்ற சம்பவத்தை கொம்பே தேசிய பூங்கா பகுதியில் பதிவு செய்திருந்தார்.

இந்த மோதல் இன்னும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. 2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளிலும் தாக்குதல்கள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

மனிதர்களைப் போல இன, மதம், அரசியல் போன்ற காரணங்கள் இல்லாமலேயே, சமூக உறவுகள் உடைந்தால் வன்முறை ஏற்பட முடியும் என்பதையே இந்த சம்பவம் உணர்த்துவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

[youtube-feed feed=1]