அமெரிக்கா–ஈரான் இடையிலான தற்காலிக போர்நிறுத்தத்துக்கு இடையே, ஹோர்முஸ் கடல்சந்தியை கடக்கும் கப்பல்களிடமிருந்து ஈரானின் இராணுவ அமைப்பான இஸ்லாமியப் புரட்சிகரக் காவலர் படை (IRGC) சுங்க கட்டணமாக பிட்காயின் மற்றும் சீன யுவான் கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து தி வால் ஸ்ட்ரீட் வெளியிட்டுள்ள செய்தியில், முன் அனுமதி இல்லாமல் செல்லும் கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளாகலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சில குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே சில கப்பல்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அதேபோல் பைனான்சியல் டைம்ஸ் தகவலின் படி, சரக்குகளுடன் செல்லும் எண்ணெய் கப்பல்களுக்கு ஒரு பேரலுக்கு 1 அமெரிக்க டாலர் வரை கட்டணம் விதிக்கப்படலாம். பெரிய சூப்பர் டேங்கர்களுக்கு இது கோடிக்கணக்கில் உயரக்கூடும். காலியாக செல்லும் கப்பல்களுக்கு சலுகை இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் விதிக்கும் முக்கிய நிபந்தனைகள்:
- கப்பல் விவரம் மற்றும் சரக்கு பற்றிய முன் தகவல் அளிக்க வேண்டும்
- கட்டணம் பிட்காயின் அல்லது சீன யுவானில் முன்கூட்டியே செலுத்த வேண்டும்
- ‘நட்பு’ நாடுகளின் சரக்குகள் விரைவாக அனுமதி பெறும்
- மற்ற கப்பல்களுக்கு கட்டுப்பாடு அல்லது மறுப்பு இருக்கலாம்
- ஈரான் அதிகாரிகளின் அனுமதி அவசியம்
- கடல் கன்னிவெடிகள் காரணமாக ஈரான் கரைக்கு அருகிலான குறிப்பிட்ட பாதையில் மட்டுமே பயணம் செய்ய வேண்டும்
ஏன் பிட்காயின், யுவான்?
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடைகள் காரணமாக, டாலரில் பரிவர்த்தனை செய்வது ஈரானுக்கு கடினமாகியுள்ளது. அதனால் மாற்று வழியாக Bitcoin மற்றும் சீன யுவான் பயன்படுத்தப்படுகின்றன. இது உலக எரிசக்தி வர்த்தகத்தில் மேற்கத்திய ஆதிக்கத்தை பாதிக்கக்கூடும் என்ற கவலைவும் எழுந்துள்ளது.
போர்நிறுத்தம் – இன்னும் பதற்றம்
அமெரிக்க அதிபர் டிரம்ப் இரண்டு வார போர்நிறுத்தத்தை அறிவித்த நிலையில், ஹோர்முஸ் கடல்சந்தி மீண்டும் திறக்கப்பட்டது. உலக எண்ணெய் வர்த்தகத்தின் சுமார் 20% இங்கு நடைபெறுகிறது என்பதால் இது மிகவும் முக்கியமானது.
ஆனால் போர்நிறுத்தம் இருந்தாலும் பதற்றம் முழுமையாக குறையவில்லை. சமீபத்தில் லெபனான் பகுதியில் வான்தாக்குதல்கள் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, பிப்ரவரி 28 முதல் இந்த கடல்சந்தி மூடப்பட்டதால் உலக எண்ணெய் விலைகள் அதிகரித்திருந்தன. தற்போது மீண்டும் திறக்கப்பட்டாலும், பாதுகாப்பு சிக்கல்கள் மற்றும் இராணுவ பதற்றம் தொடர்கிறது.
[youtube-feed feed=1]