பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் போலீசார் 48 டன் கஞ்சாவை பறிமுதல் செய்து சாதனை படைத்துள்ளனர். வழக்கமான சோதனை நடவடிக்கையின் போது, “ஹல்க்” என்ற போலீஸ் நாய் சந்தேகமான இடத்தை கண்டுபிடித்ததன் மூலம் இந்தப் பெரிய அளவிலான போதைப்பொருள் குவியல் வெளிச்சத்துக்கு வந்தது.

நகரின் வடபகுதியில் உள்ள ‘காம்ப்ளெக்ஸோ டா மாரே’ குடிசைப்பகுதியில் நடந்த இந்தச் சோதனையில், கைவிடப்பட்ட தண்ணீர் தொட்டியின் கீழ் ஏதோ இருப்பதை நாய் சுட்டிக்காட்டியது. பின்னர் போலீசார் தோண்டிப் பார்த்ததில், அதன் கீழ் பெரிய மறைவிடத்தில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த பறிமுதல் பிரேசில் வரலாற்றிலேயே மிகப்பெரியது என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் சந்தை மதிப்பு சுமார் 10 மில்லியன் டாலர் (ரூ. 92 கோடி) இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

ரியோ டி ஜெனீரோவில் பல ஏழை குடும்பங்கள் அதிகமாக உள்ள பகுதிகள் இன்னும் குற்றக் கும்பல்களின் கட்டுப்பாட்டில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போதைப்பொருளை அகற்றும் போது குற்றவாளிகள் துப்பாக்கிச்சூடு நடத்த, போலீசாரும் பதிலடி கொடுத்து ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இதை அகற்ற போலீசாருக்கு சுமார் 5 மணி நேரம் பிடித்ததுடன், 4 லாரிகளில் எடுத்துச் செல்லப்பட்டது.

மேலும், இந்த நடவடிக்கையில் 250 போலீசார் கலந்து கொண்டு, 5 துப்பாக்கிகள், 4 பிஸ்டல்கள் மற்றும் 26 திருடப்பட்ட வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதற்கு முன்பு 2021-ல் 36.5 டன் கஞ்சா பறிமுதல் செய்ததே பெரிய சாதனையாக இருந்தது.

[youtube-feed feed=1]