குவைத்தில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து மோடிக்கு அவர் இன்று எழுதியுள்ள கடிதத்தில், ‘’குவைத் போலீசாரால் 11 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 10 பேர் தமிழகத்தின் கன்னியாகுமரியைச் சேர்ந்தவர் என்றும், ஒருவர் கேரளாவைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் மீன்பிடி தொழிலுக்காக சென்ற இவர்களுக்கு, முதலாளிகள் பேசியபடி லாபத்தில் பங்கு கொடுக்கவில்லை. இதனால் தங்கள் குடும்பத்திறகு பணம் அனுப்ப முடியவில்லை.
சம்பளம் மட்டுமாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இழந்த நிலையில், இந்தியாவுக்கு அனுப்பும்படி கேட்டுள்ளனர். அதனையும் முதலாளிகள் ஏற்கவில்லை. அதன் பின்னர் முதலாளிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் 11 பேரும் உள்ளூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஒருமாதத்திற்கு பிறகு விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களின் பாஸ்போர்ட்டுகளை முதலாளிகள் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், அவர்கள் நாடு திரும்ப முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர்.
குவைத்தில் சிக்கியுள்ள அப்பாவி மீனவர்களை அங்குள்ள இந்திய தூதரகம் மூலம் பத்திரமாக மீட்டு நாட்டிற்கு அனுப்பி வைக்க தாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சம்பளம் மற்றும் நீதி கிடைக்கவும் தேவையான நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும்’’என்று குறிப்பிட்டுள்ளார்.