வாஷிங்டன்:   ” ஈரானின் ‘மகுட ஆபரணத்தை’ அழிப்பதற்கு அமெரிக்கா ‘முழு தயார் நிலையில்’ உள்ளது; ‘கார்க் தீவு’ எந்த நேரத்திலும் அழிக்கப்படலாம் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்தகாலத் தாக்குதல்களின்போது எரிசக்தி உள்கட்டமைப்புகளைத் தாக்குவதைத் திட்டமிட்டே தவிர்த்திருந்த போதிலும், ஈரானின் கார்க் தீவில் அமைந்துள்ள எண்ணெய் குழாய்கள் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்  எச்சரித்தார்.

1960-களில் இருந்து கார்க் ஈரான் நாட்டின் எரிசக்தி ஏற்றுமதியின் முதுகெலும்பாக இருந்து வருகிறது. மேலும் ஈரானிய எண்ணெய் வயல்களுக்கும் உலகச் சந்தைகளுக்கும் இடையே ஒரு முக்கியமான இணைப்பாகவும் உள்ளது. தற்போது எழுந்துள்ள போர் காரணமாக, ஈரான் வளைகுடா நாடுகளில் உள்ள எண்ணை வயல்களை தாக்கி அழித்து வருகிறது. மேலும் ஹார்முஸ் கடல்வழி பாதையை மூடி உலக நாடுகளுக்கு கச்சா எண்ணை போக்குவரத்தை தடை செய்துள்ளது. இதனால் உலக நாடுகளிடையே எரிபொருள்  கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து,  அதிபர் டிரம்ப் உத்தரவிட்டால், கார்க் தீவை அழக்க அமெரிக்க ராணுவம் தயாராக இருப்பதாக வெள்ளை மாளிகை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரான் மீது இஸ்ரேல் – அமெரிக்கா கூட்டுப்படை தாக்குதலை கடந்த பிப்ரவரியில் தொடங்கியது. ஈரானின் ராணுவ தளவாடங்கள், முக்கிய தலைமையகத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக ஈரான் தாக்குதலுக்கு பதிலடியாக, ஈரான் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது, இது பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கச்சா எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டு, உலகப் பொருளாதாரம் மந்தநிலைக்குத் தள்ளப்படும் அபாயம் உருவாகியுள்ளது.

வளைகுடா நாடுகளில் இருந்து ஹார்முஸ் ஜல சந்தி வழியாக, கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என ஈரான் கூறியிருந்தது. இந்த ஹார்முஸ் ஜலசந்தி பகுதி எண்ணெய் கப்பல் போக்குவரத்துக்கு மிகமிக முக்கியமானதாக உள்ளது. இந்தப் பகுதியில் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால், எண்ணெய் கப்பல்கள் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. இதனால் பல நாடுகளில் பெட்ரோல், டீசல், காஸ் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகில் அமைந்துள்ள ஈரானின் இராணுவ தளமான கார்க் தீவில் அமெரிக்க இராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியதாக அறிவித்தார்.  இதுதொடர்பாக ட்ரூத் சோஷியலில் டிரம்ப் வெளியிட்ட ஒரு பதிவில், இந்த நடவடிக்கையை “மத்திய கிழக்கு வரலாற்றில் மிகவும் சக்திவாய்ந்த குண்டுவீச்சு” என்று குறிப்பிட்டுள்ளார், மேலும் அமெரிக்க இராணுவம் “ஈரானின் கிரீடம் போன்ற ரத்தினமான கார்க் தீவில் இருந்த ஒவ்வொரு இராணுவ இலக்கையும் முழுமையாக அழித்துவிட்டது” என்று கூறினார். இருப்பினும், தீவில் உள்ள ஈரானின் எண்ணெய் உள்கட்டமைப்புக்கு இன்னும் சேதம் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டால் எந்த நேரத்திலும் ஈரான் நாட்டின் கார்க் தீவின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம் என வெள்ளை மாளிகை வெள்ளிக்கிழமை அன்று தெரிவித்துள்ளது. 1960-களில் இருந்து கார்க் ஈரான் நாட்டின் எரிசக்தி ஏற்றுமதியின் முதுகெலும்பாக இருந்து வருகிறது. மேலும் ஈரானிய எண்ணெய் வயல்களுக்கும் உலகச் சந்தைகளுக்கும் இடையே ஒரு முக்கியமான இணைப்பாகவும் உள்ளது.

இதுதொடர்பாக வெள்ளை மாளிகையின் முதன்மை துணைச் செய்திச் செயலாளர் அன்னா கெல்லி AFP செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், “அதிபர் உத்தரவிட்டால் அமெரிக்க இராணுவம் எந்த நேரத்திலும் கார்க் தீவைக் கைப்பற்ற முடியும்” என்றார்.  ஈரான் கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தையும் எரிசக்தி தடையில்லாமல் கிடைப்பதையும் தடுக்க முயற்சிக்கும் என்பதை அதிபர் ட்ரம்ப் முழுமையாக அறிந்திருந்தார். மேலும் அவர் ஏற்கனவே 40-க்கும் மேற்பட்ட கண்ணிவெடி கப்பல்களை அழிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்” என்றார்.

உலகின் கச்சா எண்ணெய் விநியோகத்தில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு கடந்து செல்லும் முக்கியமான நீர்வழியான ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க தெஹ்ரான் மீது அழுத்தம் கொடுப்பதற்காக கார்க் தீவைக் கைப்பற்றும் திட்டத்தை ட்ரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருவதாக ஆக்சியோஸ் அறிக்கை கூறியுள்ளது. ஈரான் பிரதான நிலப்பரப்பிலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கார்க் தீவு, நாட்டின் எண்ணெய் ஏற்றுமதிக்கு முக்கியமானதாகும். கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் சுமார் 90 சதவீதத்தை இது கையாளுகிறது.

கார்க் தீவுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?

கார்க் தீவு, ஈரானின் தெற்கு கடற்கரையிலிருந்து சுமார் 21 மைல் தொலைவில் உள்ள ஒரு சிறிய பவளப் பாறை ஆகும். இது நாட்டின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் பெரும்பகுதி அனுப்பப்படும் முக்கிய முனையமாக செயல்படுகிறது. எண்ணெய் ஏற்றுமதி ஈரானுக்கு வருவாயின் முக்கிய ஆதாரமாக உள்ளது, மேலும் சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கார்க் தீவு மீதான தாக்குதல் தற்போதைய அரசாங்கத்தை மட்டுமல்ல, ஈரானில் எதிர்காலத்தில் எந்தவொரு தலைமையின் பொருளாதார அடித்தளத்தையும் சீர்குலைக்கக்கூடும். இந்த தீவின் தெற்கு பகுதியில் பெரிய எண்ணெய் சேமிப்பு தொட்டிகள் உள்ளன, அத்துடன் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கான குடியிருப்பு வசதிகளும் உள்ளன.

இங்கு அமைக்கப்பட்டுள்ள எண்ணை சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் எண்ணை  கிடங்குகளுக்கு அருகில் வரிசையாக இருக்கும் கேஸல்கள் இந்த தீவை ஈரானின் மிகவும் மதிப்புமிக்க மற்றும் முக்கியமான பொருளாதார சொத்துக்களில் ஒன்றாக  பார்க்கப்படுகிறது. அதனால், இந்த தீவை கைப்பற்ற அமெரிக்கா அதீத ஆர்வம் காட்டி வருகிறது.

[youtube-feed feed=1]