மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போர் நீண்ட காலம் தொடரும் அபாயம் இருப்பதால், எரிபொருளைச் சேமிக்க இலங்கை அரசு முக்கிய முடிவு எடுத்துள்ளது. இதன்படி, அரசு அலுவலகங்கள் இனி வாரத்தில் 4 நாட்கள் மட்டும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக எண்ணெய் போக்குவரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹார்முஸ் நீர்வழிச் சாலை மூடப்பட்டதையடுத்து எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் அவசிய சேவைகள் ஆணையர் ஜெனரல் பிரபாத் சந்திரகீர்த்தி கூறுகையில், புதன்கிழமை முதல் அரசு அலுவலகங்கள் 4 நாட்கள் மட்டுமே செயல்படும் என்றும், இதே நடைமுறை பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கும் பொருந்தும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், தனியார் நிறுவனங்களும் இதைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், மருத்துவமனைகள், துறைமுகங்கள் மற்றும் அவசர சேவைகள் வழக்கம்போல் இயங்கும். பொதுவிழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தேவையான இடங்களில் அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கை தனது எண்ணெய் தேவைகளுக்காக முழுமையாக இறக்குமதியையே சார்ந்துள்ளது. இதனால், தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் வழங்கலில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒரு வாகனத்திற்கு வாரத்திற்கு 15 லிட்டர் மட்டுமே வழங்கப்படும் என்றும், பொதுப் போக்குவரத்துக்கு 200 லிட்டர் வரை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாட்டின் எரிபொருள் இருப்பு சுமார் 6 வாரங்களுக்கு போதுமானதாக இருந்தாலும், புதிய விநியோகத்தில் இடையூறு ஏற்பட்டால் நிலைமை மோசமாகும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மேலும், 2022 பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வர முயற்சி செய்து வரும் நிலையில், இந்த போர் நீண்டால் இலங்கையின் பொருளாதாரத்திற்கு மீண்டும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகக் கூறப்படுகிறது..
[youtube-feed feed=1]