அமெரிக்காவின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் (Securities and Exchange Commission – SEC), நிறுவனங்கள் வெளியிடும் நிதி அறிக்கைகளில் முக்கிய மாற்றம் செய்யும் திட்டத்தைத் தயாரித்து வருகிறது.

தற்போது காலாண்டு அடிப்படையில் ஆண்டுக்கு நான்கு முறை நிதி அறிக்கைகள் வெளியிடும் நடைமுறை உள்ளது. இதை மாற்றி, ஆண்டுக்கு இரண்டு முறை மட்டும் அறிக்கைகள் வெளியிடும் வகையில் புதிய திட்டம் கொண்டு வரப்படலாம்.

இந்த மாற்றத்திற்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் SEC தலைவர் பவுல் அட்கின்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளனர். காலாண்டு அறிக்கைகள் தயாரிப்பது நிறுவனங்களுக்கு அதிக சுமையாக இருப்பதாகவும், செலவுகளை குறைக்க இது உதவும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

இதன் மூலம் அமெரிக்க பங்குச் சந்தையில் புதிய நிறுவனங்கள் பட்டியலாகும் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திட்டம் அமலுக்கு வந்தால், காலாண்டு அறிக்கைகள் கட்டாயம் அல்லாமல் விருப்பமானதாக மாறும். அதே சமயம், இந்த மாற்றத்தால் பங்குச்சந்தை விதிகளில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி SEC, முக்கிய பங்குச்சந்தைகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறது.

இத்திட்டம் இறுதி முடிவாக அமைய, குறைந்தது 30 நாட்கள் பொதுமக்களின் கருத்து கேட்கப்பட்டு, அதன் பின்னர் அதிகாரப்பூர்வ வாக்கெடுப்பு நடைபெறும். எனவே, இந்த மாற்றம் உடனடியாக அமலுக்கு வரும் என உறுதி இல்லை.

இந்த திட்டத்திற்கு ஆதரவாக இருப்பவர்கள், நிறுவனங்களின் செலவுகள் குறையும் என்றும், நீண்டகால முதலீட்டை ஊக்குவிக்கும் என்றும் கூறுகின்றனர். ஆனால், எதிர்ப்பாளர்கள் முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும் தகவல்கள் குறையும் என்பதால் பங்கு விலைகளில் அதிக மாற்றம் ஏற்படக்கூடும் என கவலை தெரிவிக்கின்றனர்.

ஐரோப்பா மற்றும் இங்கிலாந்து போன்ற பகுதிகளில் இதேபோன்ற நடைமுறைகள் ஏற்கனவே தளர்த்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]