அமெரிக்க குடியுரிமையை அதிகாரப்பூர்வமாக துறக்க விரும்புபவர்களிடம் வசூலிக்கப்படும் கட்டணத்தை அமெரிக்க அரசு 80 சதவீதத்திற்கும் அதிகமாக குறைக்க முடிவு செய்துள்ளது.

அமெரிக்க வரி விதிமுறைகளால் சிக்கலில் சிக்கியுள்ள “Accidental Americans” என அழைக்கப்படும் பலருக்கு இந்த முடிவு வரவேற்பைப் பெற்றுள்ளது.

உதாரணத்திற்கு, ஒரு இந்திய குடும்பம் தற்காலிகமாக அமெரிக்காவில் இருந்தபோது குழந்தை பிறந்தால், அந்த குழந்தைக்கு தானாகவே அமெரிக்க குடியுரிமை கிடைக்கும்.

ஆனால் அந்த குழந்தை பிறகு இந்தியாவில் வளர்ந்து வாழ்ந்தாலும் சட்டப்படி அவர் இன்னும் அமெரிக்க குடியுரிமையாளர் தான்.

இதனால் அவர்களுக்கு அமெரிக்க வரி விதிமுறைகள் மற்றும் வங்கி கணக்கு தகவல் தெரிவிப்பு போன்ற சட்டங்கள் பொருந்தும். இந்த காரணத்தால் பலர் பின்னர் அமெரிக்க குடியுரிமையை துறக்க முயற்சிக்கிறார்கள்.

அமெரிக்க குடியுரிமையை துறக்கும் போது தற்போது வசூலிக்கப்படும் 2,350 அமெரிக்க டாலர் (சுமார் ரூ.2 லட்சம்) கட்டணம் 450 டாலராக (சுமார் ரூ. 41000) குறைக்கப்படுகிறது. இந்த புதிய கட்டணம் ஏப்ரல் 13 முதல் அமலுக்கு வரும் என அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடான Federal Register-ல் வெளியிடப்பட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டணம் 2015 ஆம் ஆண்டு அதிகரிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த உயர்வை ரத்து செய்து, 2010 ஆம் ஆண்டு முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட கட்டண நிலைக்கு மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் வாழும் பல அமெரிக்கர்களுக்கு வரி தொடர்பான சிக்கல்கள் இருப்பதாக கிடைத்த பல தகவல்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

பாரிஸை தலைமையிடமாகக் கொண்ட Association of Accidental Americans (AAA) என்ற இலாப நோக்கமற்ற அமைப்பு இந்த முடிவை வரவேற்றுள்ளது. இது தங்களது சட்டப்போராட்டம் மற்றும் பிரச்சாரத்தின் நேரடி பலன் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பின் நிறுவனர் மற்றும் தலைவர் Fabien Lehagre, “இந்த கட்டணக் குறைப்பு எங்களுக்கான முதல் முக்கிய வெற்றி” என்று சமூக வலைதளங்களில் வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.

அமெரிக்காவின் விதிமுறைகளின்படி, ஒருவர் எங்கு வசித்தாலும் அவர்களின் தேசியத்தை அடிப்படையாகக் கொண்டு வரி விதிக்கப்படுகிறது. இதனால் வெளிநாடுகளில் வாழும் அமெரிக்கர்கள் பல்வேறு வரி அறிக்கைகள் தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

மேலும் Foreign Account Tax Compliance Act (FATCA) போன்ற சட்டங்களின் கீழ், வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கணக்குகளின் விவரங்களையும் வருடாந்திர வரி அறிக்கைகளில் தெரிவிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்த விதிமுறைகள் காரணமாக வெளிநாடுகளில் வாழும் அமெரிக்கர்களுக்கு வங்கி கணக்குகள் தொடங்குவதும் கடினமாகிறது என பல அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன.

[youtube-feed feed=1]