புற்றுநோய் பரிசோதனைக்கு எடுத்த பயாப்சி (biopsy) மாதிரியில் இருந்து ஆய்வகங்கள் பொதுவாக ஒரு திசு ஸ்லைடு தயாரிக்கின்றன. மைக்ரோஸ்கோப்பில் செல்களின் வடிவத்தைப் பார்க்க உதவும் இந்த ஸ்லைடு தயாரிக்க சுமார் 5 டாலர் மட்டுமே செலவாகும். உலகம் முழுவதும் புற்றுநோய் நோயாளிகளின் மருத்துவ பதிவுகளில் இந்த ஸ்லைடு ஏற்கனவே இருக்கும்.

ஆனால் இதைவிட மிகவும் மேம்பட்ட மல்டிப்ளெக்ஸ் இம்யூனோஃப்ளூரஸன்ஸ் (Multiplex Immunofluorescence) என்ற பரிசோதனை உள்ளது. இது கட்டியைச் சுற்றி இருக்கும் நோய் எதிர்ப்பு செல்கள் என்ன செய்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள உதவும் ஒரு புரத அளவிலான வரைபடம் போன்றது. ஆனால் இந்த பரிசோதனைக்கு ஆயிரக்கணக்கான டாலர்கள் செலவாகும்; அதற்கான சிறப்பு கருவிகள் எல்லா மருத்துவமனைகளிலும் கிடைப்பதில்லை.

புற்றுநோய் சிகிச்சையில் தற்போது அதிகம் பயன்படுத்தப்படும் இம்யூனோதெரபி (Immunotherapy) எல்லா நோயாளிகளுக்கும் வேலை செய்யாது. உலகளவில் 20% முதல் 40% நோயாளிகளுக்கு மட்டுமே இந்த சிகிச்சை பலன் அளிக்கிறது. காரணம், கட்டி “ஹாட் ட்யூமர்” (immune cells தாக்கும் கட்டி) ஆக இருக்கிறதா அல்லது “கோல்ட் ட்யூமர்” (immune system கவனிக்காத கட்டி) ஆக இருக்கிறதா என்பதை மருத்தவர்கள் எளிதாக கண்டறிய முடியாதது.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காண மைக்ரோசாப்ட், ப்ரொவிடென்ஸ் ஹெல்த் மற்றும் வாஷிங்டன் பல்கலைக்கழகம் இணைந்து ஒரு AI மாடல் உருவாக்கியுள்ளன. இதற்கு GigaTIME என்று பெயர் வைத்துள்ளனர்.

சுமார் 40 மில்லியன் செல்கள் அடங்கிய தரவுகளை வைத்து இந்த AI பயிற்சி பெற்றது. பின்னர் அமெரிக்காவில் உள்ள 51 மருத்துவமனைகளில் இருந்து 14,256 புற்றுநோய் நோயாளிகளின் தரவுகளில் இதைச் சோதித்தனர்.

இந்த ஆய்வின் முடிவுகள் Cell என்ற உலகப் புகழ்பெற்ற அறிவியல் இதழில் வெளியாகியுள்ளது. AI மொத்தம் 24 வகை புற்றுநோய்கள் மற்றும் 306 துணை வகைகள் குறித்து ஆய்வு செய்து, நோய் எதிர்ப்பு செல்களின் நடத்தை, மரபணு மாற்றங்கள் மற்றும் நோயாளி உயிர் பிழைப்புத் தரவுகள் ஆகியவற்றுக்கு இடையே 1,234 புதிய தொடர்புகளை கண்டறிந்துள்ளது.

மேலும் 10,200 நோயாளிகளைக் கொண்ட மற்றொரு தரவுத்தளத்தில் சோதித்தபோதும் இந்த AI கணிப்புகள் 88% துல்லியத்துடன் பொருந்தியதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால், இதுவரை ஆயிரக்கணக்கான டாலர்கள் செலவாகும் பரிசோதனையை, மருத்துவமனைகளில் ஏற்கனவே இருக்கும் $5 ஸ்லைடு மூலம் கணிக்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.

இந்த AI மாடல் open-source ஆக வெளியிடப்பட்டுள்ளதால், உலகம் முழுவதும் உள்ள புற்றுநோய் ஆராய்ச்சி ஆய்வகங்கள் தங்களிடம் இருக்கும் பழைய பயாப்சி ஸ்லைடுகளை பயன்படுத்தி புதிய ஆய்வுகளை மேற்கொள்ளலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

[youtube-feed feed=1]