அமெரிக்கா-ஈரான் போருக்குப் பிறகு, உலகின் அதிகாரச் சமநிலை மாறி வருவதாகக் கூறப்படுகிறது.

மேற்காசிய பிராந்தியத்தில் உள்ள இஸ்லாமிய நாடுகளில் இருக்கும் கடுமையான சட்டங்கள் காரணமாக அங்குள்ள கள நிலவரம் அதிகளவு பகிரப்படுவதில்லை.

இந்த சூழலில், துபாயிலிருந்து முதலீட்டை வெளியே எடுக்க முயலும் முதலீட்டாளர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிதி மற்றும் சட்ட வட்டாரங்களின் தகவலின்படி, முதலீட்டை திரும்பப் பெறத் திட்டமிட்டதாக அறிவிக்கும் தொழிலதிபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு பணம் வெளியே மாற்றுவதிலும், நாட்டை விட்டு வெளியேறுவதிலும் தடைகள் விதிக்கும் நடவடிக்கைகள் குறித்து அரசு பரிசீலனை நடத்துகிறது.

இதன் ஒரு பகுதியாக,

  • வங்கி கணக்குகளை தற்காலிகமாக முடக்கம் செய்வது,
  • பணப் பரிவர்த்தனைகளுக்கு கட்டுப்பாடு விதிப்பது,
  • முதலீட்டை வெளியே மாற்ற முயற்சிப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு வெளிநாடு பயணத் தடை விதிப்பது

போன்ற நடவடிக்கைகள் குறித்து விவாதங்கள் நடைபெறுவதாக கூறப்படுகிறது.

பிராந்திய மோதல்கள் மற்றும் ஈரான் தொடர்பான பதற்றம் காரணமாக வர்த்தகம், கப்பல் போக்குவரத்து, விமான சேவைகள் போன்ற துறைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கக்கூடும் என அதிகாரிகள் கவலை தெரிவித்து வருகின்றனர். இதனால் திடீரென வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறுவதைத் தடுக்க முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க முயற்சி நடப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

ஆனால், முதலீட்டாளர்களுக்கு சொத்து முடக்கம் அல்லது பயணத் தடை போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவது துபாய் நீண்ட காலமாக உருவாக்கியிருந்த திறந்த மற்றும் பாதுகாப்பான வணிக மையம் என்ற பெயருக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடும் என சட்ட மற்றும் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்நிலையில், பொருளாதார நிலைத்தன்மையை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் குறித்து UAE அதிகாரிகள் தீவிரமாக ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

[youtube-feed feed=1]