சென்னை: வேளச்சேரி பரங்கிமலை இடையேயான பறக்கும் ரயில் சேவை நாளை தொடங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக,  பல மாதங்களாக இழுத்தடிக்கப்பட்டு வந்த விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது.

சென்னை வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான நீட்டிக்கப்பட்ட பறக்கும் ரயில் வழித்தடம் 5 கி.மீ. தொலைவிற்கு புழுதிவாக்கம் மற்றும் ஆதம்பாக்கம் ஆகிய இரண்டு புதிய ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரை நீட்டிக்கப்பட்டுள்ள இந்த ரயில் சேவை எப்போது தொடங்கப்படும் என பயணிகள் கடந்த 18 ஆண்டுகளாகக் காத்திருந்தனர்.

இதற்கான பணிகள் நிறைவடைந்த நிலையில் சேவை தொடங்குவது அரசியலாக்கப்பட்டு, விவாதப்பொருளானது. இந்த நிலையில் இந்த வழித்தடம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு நாளை (14.02.2026) முதல் தொடங்கப்பட உள்ளது இந்தத் திட்டம், ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் இறுதி ஒப்புதலுக்குப் பிறகு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

சென்னை கடற்கரை – பரங்கிமலை இடையே தினமும் 43 இணை (86 ரயில்கள்) மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளன. மேலும் கடற்கரை – வேளச்சேரி இடையே 4 ரயில்களும், பரங்கிமலை – வேளச்சேரி இடையே 6 ரயில்களும் என மொத்தம் 96 ரயில்கள் இந்தத் தடத்தில் இயக்கப்பட உள்ளன அதே சமயம் பாதுகாப்பு ஆணையரின் அறிவுறுத்தலின்படி, தொடக்கத்தில் இந்தப் புதிய தடத்தில் ரயில்கள் மணிக்கு 55 கி.மீ வேகத்தில் இயக்கப்பட உள்ளன. இதன் மூலம் வேளச்சேரி, மடிப்பாக்கம் மற்றும் ஓ.எம்.ஆர் பகுதி பொதுமக்கள் தாம்பரம் மற்றும் செங்கல்பட்டுக்குச் செல்லும் ரயில்களைப் பிடிக்க பரங்கிமலையிலேயே எளிதாக மாற முடியும் எனக் கூறப்படுகிறது.

மேலும் மெட்ரோ ரயில், பறக்கும் ரயில் மற்றும் புறநகர் ரயில் ஆகிய மூன்று போக்குவரத்துகளையும் இணைக்கும் ஒரு முக்கிய மையமாக பரங்கிமலை மாற உள்ளது. மற்றொருபுறம்எழும்பூர் ரயில் நிலையப் பணிகள் காரணமாகப் புறநகர் ரயில் சேவைகள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், இச்சேவை தென் சென்னை பயணிகளுக்குப் பெரும் நிம்மதியை அளிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. முன்னதாக மார்ச் 10ஆம் தேதியே இச்சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சில தொழில்நுட்பக் குறைபாடுகளைச் சரிசெய்ய பாதுகாப்பு ஆணையர் உத்தரவிட்டதால் நான்கு நாட்கள் தள்ளிசென்று இந்த ரயில் சேவை நாளை தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]