மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போரின் தாக்கத்தால் எரிசக்தி தட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலையில், வங்கதேசத்தில் அனைத்து பல்கலைக்கழகங்களையும் தற்காலிகமாக மூடவும், எரிபொருள் விற்பனைக்கு தினசரி கட்டுப்பாடு விதிக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.

இந்த அவசர நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நாட்டின் அனைத்து அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களும் திங்கள்கிழமை முதல் மூடப்பட்டுள்ளன. மேலும், ஈத்-உல்-பித்ர் (ரம்ஜான்) விடுமுறையும் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மின்சார பயன்பாட்டை குறைப்பதுடன், போக்குவரத்து நெரிசலையும் குறைத்து எரிபொருள் வீணாவதைத் தடுக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பல்கலைக்கழக வளாகங்களில் உள்ள விடுதிகள், வகுப்பறைகள், ஆய்வகங்கள் மற்றும் ஏர்-கண்டிஷனர் வசதிகள் காரணமாக அதிக அளவில் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. எனவே அவற்றை முன்கூட்டியே மூடுவது நாட்டின் மின்சார அமைப்பின் மீது இருக்கும் அழுத்தத்தை குறைக்கும் என்று அதிகாரிகள் கூறினர்.

“தற்போதைய உலக சூழ்நிலையை கருத்தில் கொண்டு மின்சாரம் மற்றும் எரிபொருள் பயன்பாட்டை குறைப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று வங்கதேச கல்வி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

ரம்ஜான் மாதத்தையொட்டி அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளதால், தற்போது நாட்டின் பெரும்பாலான கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.

வங்கதேசம் தனது எரிசக்தி தேவைக்கு 95 சதவீதத்தை இறக்குமதியையே நம்பி உள்ளது, பெட்ரோலிய பொருட்கள் மற்றும் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அச்சத்தில் உள்ள மக்கள் அதிகமாக எரிபொருள் வாங்கி குவிப்பதைத் தடுக்க, கடந்த வெள்ளிக்கிழமை முதல் தினசரி விற்பனைக்கு வரம்பு விதித்துள்ளது.

மேலும் மின்சார பயன்பாட்டை குறைக்கும் நோக்கில் வெளிநாட்டு பாடத்திட்ட பள்ளிகள் மற்றும் தனியார் பயிற்சி மையங்களும் தற்காலிகமாக செயல்பாட்டை நிறுத்துமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதே நேரத்தில், அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் இயற்கை வெளிச்சத்தை அதிகமாக பயன்படுத்தி தேவையற்ற விளக்குகள் மற்றும் மின்சார சாதனங்களை குறைக்க வேண்டும் என்ற வழிகாட்டுதல்களையும் அரசு வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நடைபெறும் போர் காரணமாக உலகளவில் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வங்கதேசத்தில் எரிசக்தி விநியோகத்தில் பெரும் சிக்கல் உருவாகியுள்ளது.

கடுமையான எரிவாயு தட்டுப்பாட்டால் அரசு நடத்தும் ஐந்து உரத் தொழிற்சாலைகளில் நான்கு தொழிற்சாலைகள் செயல்பாடுகளை நிறுத்தி, கிடைக்கும் எரிவாயுவை மின் உற்பத்தி நிலையங்களுக்கு மாற்றி வழங்கியுள்ளது.

170 மில்லியன் மக்கள் தொகையுடன் உலகில் எட்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடான வங்கதேசம், தற்போது அதிக விலையில் LNG எரிவாயுவை சர்வதேச சந்தையில் இருந்து வாங்கி எரிசக்தி பற்றாக்குறையை சமாளிக்க முயற்சித்து வருகிறது.

“மின்சாரம், எரிபொருள் மற்றும் இறக்குமதி விநியோகம் நிலையாக இருக்கும்படி பயன்பாட்டை குறைக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்” என்று வங்கதேச மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எரிசக்தி நிபுணர்கள் கூறுவதாவது, இத்தகைய நடவடிக்கைகள் குறுகிய காலத்தில் மின்சார துறைக்கு ஓரளவு நிவாரணம் அளிக்கலாம். ஆனால் இந்த நிலை நீண்ட காலம் தொடர்ந்தால் மாணவர்களின் கல்வி அட்டவணையில் சிக்கல்கள் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

பல்கலைக்கழகங்கள் எப்போது மீண்டும் திறக்கப்படும் என்பது குறித்து அதிகாரிகள் இதுவரை அறிவிக்கவில்லை. எரிசக்தி நிலைமை மேம்பட்டால் ஈத் விடுமுறைக்கு பிறகு வழக்கமான கல்வி நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

[youtube-feed feed=1]