கணினிப் பூக்கள்
கவிதைத் தொகுப்பு – பகுதி 47
பா. தேவிமயில் குமார்

மகளிர் தினம்…..
(சற்று யோசிப்போம்)
எளிதாக இந்த தினத்தை
கடந்து விட
இயலவில்லை!!
சதி… சாதியெனும்
சக்கர வியூகங்களில்
சிக்கிய முன் வரிசை
வீரர்கள் நாங்களே!!!
நிலமும், வீடும்
நகையும், பணமும் அதோடு… கூட
நாங்களும் ஒன்றுதான் உங்கள்
கணக்கீட்டில்!
பேறுகால வலியைக்
காட்டிலும், அனுதினமும்
போர்க் கால வலிகள்
எங்களுக்கு பழகிய
ஒன்றாகி போனது!!!
உலகமெலாம்
பொதுவானதொரு
பணயப்பொருளானோம்…
அன்று முதல்… இன்று வரையில்!!
வினா எழுப்பும் பெண் நிலை
கூட பரவாயில்லை…
விடை தெரிந்த பெண்களை
யாருமிங்கே
மதிப்பதில்லை!
சகலத் துறைகளிலும்
இருக்கிறோம்….
சுயமாக இயங்க
விடுகிறார்களா??
என்பதே உண்மை!
அடைத்து வைத்ததை
அறியாமல்
ஆரூடம் சொல்லிடும்
கிளிகளாக உலக
இயக்கத்தில் நாங்கள்!!!!
புனிதமானவளென்ற பட்டம் வேண்டாம்…
புரிந்து கொள்ளுங்கள்
எங்களை…
அதுவே எங்களுக்கான
வாழ்த்துகள்!!!
மார்ச் 8 என்பதை கூட
என்னவென எட்டாத
இவ்வுலகில் எங்கோ
வாழும் கோடி மகளிரை தேடி வாழ்த்துங்கள் ஆண்களே!!!
பா. தேவிமயில் குமார்
[youtube-feed feed=1]