சென்னை: வருமானத்திற்கு அதிகமாக ரூ. 5.42 கோடி சொத்துக்குவித்துள்ளதாக  பெண் காவல் ஆய்வாளர் மீது  லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்கு பதிவு செய்திருப்பது, தமிழ்நாடு காவல்துறையில்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக இரு பெண் காவல்துறை அதிகாரிகளும் ஒருவர்மீது ஒருவர் குற்றச்சாட்டுக்களை சுமத்தி இருப்பது, காவல்துறை மீதான நம்பகத் தன்மையை கேள்விக்குறியாக்கி உள்ளது.

இதுதொடர்பாக காவல் ஆய்வாளர் ராஜலட்சுமி,  லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளர் விமலா மீது கடுமையாக சாடியுள்ளார.  தன் மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாகவே சொத்துகுவிப்பு வழக்குபதிவு செய்துள்ளதாக குற்றம் சாட்டி உள்ளார்.

சென்னையில் பாலியல் குற்றங்கள் தடுப்பு பிரிவில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் ராஜலட்சுமி. இவர்மீது வந்த புகார்களின் அடிப்படையில் பிப்ரவரி 13ந்தேதி அன்று அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக  கூறப்பட்டது.

இதைத்தொடர்ந்து,  பெண் காவல் ஆய்வாளர் ராஜலட்சுமி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இதுதொடர்பான எஃப் ஐஆர்  எனப்படும் முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது.

இந்த அறிக்கையில், ராஜலட்சுமி  “கடந்த 1999 ஆம் ஆண்டு உதவி ஆய்வாளராக  காவல் துறையில் பணியில் சேர்ந்தார். 2010ஆம் ஆண்டு முதல் சென்னையில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, பொருளாதார குற்றப்பிரிவு போன்ற முக்கிய பிரிவுகளில் தொடர்ந்து பணியாற்றி வந்துள்ளார். அவரது பணி காலத்தில் ராஜலட்சுமி மீது பல்வேறு புகார்கள் வந்துள்ளது.

இந்த புகார்களின் பேரில்,  லஞ்ச ஒழிப்புத் துறையினர் ராஜலட்சுமி குறிதது  ரகசிய விசாரணை நடத்தினர்.  கடந்த 2017 ஜூன் மாதம் முதல் கடந்த 2025 ஆண்டு ஜூன் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் ராஜலட்சுமியின் வரவு – செலவுகளை ஆய்வு செய்ததில், அவர் தனது பெயரிலும், குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வாங்கி குவித்திருப்பது தெரியவந்தது.

அதாவது,   2017ஆம் ஆண்டு ராஜலட்சுமியின் சொத்து மதிப்பு ரூ.3 லட்சத்து 64 ஆயிரத்து 310ஆக இருந்த நிலையில், 2025 ஜூன் மாதம் ரூ.4.62 கோடியாக உயர்ந்திருப்பது கண்டறியப்பட்டது. மேலும், சேமிப்பாக சுமார் 80 லட்ச ரூபாய் வைத்திருந்ததையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இது, தனது அதிகாரப்பூர்வ வருமானத்தை விட 372 சதவீதம் கூடுதல் என கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர்மீது வருமானத்தை மீறிய சொத்து சேர்த்துள்ளதாக  வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளதாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையின் எஃப்ஐஆரில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள  ராஜலட்சுமி, லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளர் விமலா என்பவர் தன் மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாக இவ்வாறு செய்திருப்பதாகவும், அதிகாரிகளின் சோதனை முடிவில் எந்த ஆவணமும் கைப்பற்றப்படவில்லை என தன்னிடம் எழுதி கொடுத்துவிட்டுத்தான் சென்ற தாகவும் கூறியுள்ளார்.

 லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் முதல் தகவல் அறிக்கையில், தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப தகவல்களை சேர்த்துள்ளதாகவும், அந்த அறிக்கையை சம்பந்தப்பட்ட தனக்கு கொடுக்காமல் ஊடகங்களுக்கு மட்டும் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளர் விமலா அனுப்பி கொண்டிருக்கிறார் என குற்றம் சாட்டி உள்ளதுடன்,   , “இந்த வழக்கை விசாரிக்க வேறு ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டிருந்த போது விமலா ஆவணங்களை அவரிடம் ஒப்படைக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். என்னிடம் ஒரு வீடு மட்டும் தான் இருக்கிறது. அதன் ஆவணங்களும் வங்கிக்கடனில் உள்ளது. ஆனால் என்னிடம் 5 கோடி சொத்திருப்பதாக எப்படி கூறுகிறார்கள் என தெரியவில்லை.

தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளராக இருக்கும் விமலா, கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு பாலியல் குற்றத் தடுப்பு பிரிவில் பணியாற்றி வந்தார். அப்போது நான் மதுவிலக்கு அமலாக்க பிரிவில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அவரும் அந்த துறைக்கு வருவதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தார். ஆனால் அவருக்கு அந்த பணி வழங்கப்படவில்லை. இதனால் என் மீது அவருக்கு காழ்ப்புணர்ச்சி ஏற்பட்டிருந்தது. அதே போல், பொருளாதார குற்றப்பிரிவில் பணியாற்றிய போது எனக்கு கீழே உதவி ஆய்வாளராக பணிபுரிந்த விமலாவின் கணவர் மீது சில காரணங்களுக்காக நடவடிக்கை எடுக்க வேண்டி இருந்தது.

இந்த அனைத்து காழ்ப்புணர்ச்சிகளையும் சேர்த்துதான் விமலா என் மீது கலங்கம் ஏற்படுத்த இது போன்று செய்கிறார். இதற்கு பின்புலமாக மேலும் 2 பெண் ஆய்வாளர்கள் இருக்கிறார்கள். இந்த விவகாரத்தை நீதிமன்றம் மூலம் எதிர்கொள்ள இருக்கிறேன்” ராஜலட்சுமி கூறினார்.

[youtube-feed feed=1]