டெல்லி: தலைநகர் டெல்லியில், இன்று காலை  நாடாளுமன்றம் மற்றும் ஒன்பது பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. இது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காவல்துறையிர், வெடிகுண்டுநிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர்.

டெல்லியில்  நாடாளுமன்றம் மற்றும்  10க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மின்னஞ்சல்கள் வந்தன. இதைத்தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளில் இருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.  இதுகுறித்து தகவல் அறிந்ததும்,  பெற்றோர்கள் பலர் பள்ளி வாயில்கள் அருகே கூடினர். இதனால் பாதுகாப்பு கருதி போலீசார் குவிக்கப்பட்டனர்.

டெல்லி மாநகர  காவல்துறையின் மின்னஞ்சல் முகவரிக்கு இன்று காலை 8.30 மற்றும் 9.00 மணியளவில் இரண்டு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. அதில், ”டெல்லி காலிஸ்தானாக மாறும்  என்றும்,   பிப். 13, பகல் 1.11 மணிக்கு நாடாளுமன்றத்துக்குள் குண்டுவெடிக்கும்” என்று அப்சல் குரு மற்றும் காலிஸ்தான் தேசிய இராணுவத்தின் பெயரில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மெயிலில்,   நாடாளுமன்ற சுற்றுப்புறத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளின் பெயர்களை குறிப்பிட்டு குண்டுவெடிப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டு டெல்லி காவல்துறையினர், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் இணைந்து தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகளின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை பத்திரமாக வெளியேற்றியுள்ளனர். நாடாளுமன்ற வளாகத்திலும் காவல்துறையினர், பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு, தீவிர சோதனையில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இன்று மொத்தம் 10 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. தீயணைப்பு குழுக்கள் உடனடியாக வளாகத்தை அடைந்தன. சோதனை நடந்து வருகிறது என்று தெரிவித்தார். தற்போது கட்டடங்களில் தேடுதல் பணிகள் நடந்து வருகின்றன. இதனால் பெற்றோர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

[youtube-feed feed=1]