சர்வதேச சிறார் பாலியல் குற்றவாளியும் உலக செல்வாக்குமிக்க நபர்களின் இடைத்தரகருமான ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பாக அமெரிக்க நீதித்துறை வெளியிட்டிருக்கும் ஆதாரங்கள் உலகம் முழுவதும் அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் பிரதமர் மோடிக்கு உள்ள தொடர்பு குறித்தும் தகவல்கள் வெளியான நிலையில் நாடாளுமன்றத்தில் இதுதொடர்பாக அவரிடம் நேரடியாக கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் மேற்கொண்ட முயற்சி திசை திருப்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் முன்னாள் வெளியுறவுத் துறை அதிகாரியும் தற்போதைய மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சருமான ஹர்தீப் சிங் பூரிக்கும் ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பவன் க்ஹெரா வெளியிட்டுள்ள அறிக்கையில் :

2014 அக்டோபர் 24 அன்று, ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஹர்தீப் சிங் பூரிக்கு எழுதிய கடிதத்தில், “என் உதவியாளருக்கு இந்தியாவுக்குச் சென்று ஒரு திருமணத்தில் கலந்துகொள்ள விரைவாக விசா தேவைப்படுகிறது. தூதரகத்தில் அவர் யாரிடம் பேசலாம்?” என்று கேட்டிருந்தார்.

ஹர்தீப் பூரி இதை ஒரு சாதாரணக் கோரிக்கையாகக் கருதவில்லை. அவர் வரம்பு மீறி தலையிட்டு, ஓய்வுபெற்ற தூதர் பிரமோத் பஜாஜ் மற்றும் நியூயார்க்கில் உள்ள சஞ்சீவ் என்பவருக்கு மின்னஞ்சல் அனுப்பி, எப்ஸ்டீனுக்கு உதவுமாறு அவர்களுக்கு உத்தரவிட்டார். “பிரமோத் பஜாஜூம் அதற்கு இணங்கினார்” என்று அந்த அறிக்கையில் பவன் க்ஹெரா குறிப்பிட்டுள்ளார்.

2008-ல் ஒரு சிறுமி சம்பந்தப்பட்ட வழக்கில் பாலியல் கடத்தல் குற்றத்திற்காக ஏற்கனவே தண்டிக்கப்பட்டிருந்த ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்காக 2013-ல் இந்திய வெளியுறவுப் பணியில் இருந்து ஓய்வு பெற்று, 2014 ஜனவரியில் பாஜக-வில் இணைந்த ஹர்தீப் பூரி வரிந்துகட்டிக்கொண்டு அதிகாரிகளோடு தனக்கு இருக்கும் நெருக்கத்தையும் அரசியல் செல்வாக்கையும் பயன்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது.

இது மிகுந்த கவலையளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ள பவன் க்ஹெரா :

1. எப்ஸ்டீனின் வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு, குறிப்பாக அவர் எப்ஸ்டீனின் வட்டாரத்தைச் சேர்ந்தர் என்பதற்காகவே, ஹர்தீப் பூரி தனது இராஜதந்திர மற்றும் அரசியல் செல்வாக்கை தவறாகப் பயன்படுத்தி ஏன் உதவிக்கு விரைவுபடுத்தினார்?

2. பாலியல் குற்றவாளி எனத் தண்டிக்கப்பட்ட ஒருவருடன் பணிபுரியும் ஒருவருக்கு வழிகளைத் திறந்துவிட தனது செல்வாக்கைப் பயன்படுத்துவதற்கு முன்பு, இந்த வருகை உண்மையாகவே “ஒரு திருமணத்திற்காகத்தான்” – இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்திற்கு குந்தகம் விளைவிக்கும் அல்லது இழிவுபடுத்தும் ஒன்றிற்காக அல்ல என்பதைச் சரிபார்க்க ஹர்தீப் பூரி என்ன உரிய விசாரணைகளை மேற்கொண்டார்?


3. எப்ஸ்டீனுக்குச் சலுகைகள் வழங்கவும், அவருக்காக வரம்பு மீறிச் செயல்படவும் அவர் தயாராக இருந்த இந்த வெட்கக்கேடான தொடர்பிலிருந்து அவர் என்ன ஆதாயம் பெற்றார்?

4. எப்ஸ்டீனுடனான தனது தொடர்புகள் “டிஜிட்டல் இந்தியா” திட்டத்தை ஊக்குவிப்பதோடு மட்டுமே நின்றுவிட்டன என்று ஹர்தீப் பூரி இப்போதும் கூறுகிறாரா?

என்று பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

மேலும், சமீபத்தில் நடந்த தேவையற்ற மற்றும் தொடர்பில்லாத பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் எவ்வளவு உரத்த குரலிலும் ஆக்ரோஷமாகவும் பேசினாரோ, அதே அவசரத்துடனும் முழுமையான விவரங்களுடனும் இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்குமாறு கேட்டுள்ளார்.

[youtube-feed feed=1]