சென்னை: மாநிலங்களில் டி.ஜி.பி நியமன விவகாரத்தில் யு.பி.எஸ்.சிக்கே அதிகாரம் என்று மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக யுஜிசி எந்த நேரத்திலும் நீதிமன்றத்தை நாடலாம் என்றும் கூறியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக டிஜிபி நியமனம் செய்யப்படாமல் உள்ளது. இதுதொடர்பாக யுஜிசியின் பரிந்துரையை திமுக அரசு ஏற்க மறுத்து வருவ்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த சூழலில் தெலுங்கான மாநிலத்திலும் டி.ஜி.பி-களை நியமிக்காமல் தற்காலிக அதிகாரிகளைக் கொண்டு நிர்வாகத்தை நடத்தும் மாநில அரசை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மாநிலஅரசுகளை கடுமையாக சாடியதுடன், தெலங்கானாவில் 2017 முதல் நிரந்தர டி.ஜி.பி இல்லாததை சுட்டிக்காட்டிய நீதிமன்றம், மாநிலங்கள் பரிந்துரைகளை அனுப்பத் தாமதித்தால் நேரடியாக முறையிட யு.பி.எஸ்.சி-க்கு அதிகாரம் வழங்கியுள்ளது.
மேலும், மாநில அரசின் காவல்துறை டி.ஜி.பி நியமனத்திற்கான பரிந்துரைகளை அனுப்புவதில் பல மாநிலங்கள் காட்டும் தாமதத்தை உச்ச நீதிமன்றம் தீவிரமாக கருத்தில் கொள்கிறது என்றும், இதில் யுஜிசிக்கே அதிகாரம் உள்ளது என்று கறாராக தெரிவித்துள்ளது.
மாநிலங்கள் காவல்துறை தலைமை இயக்குநர்களின் (டிஜிபி) நியமனங்களைத் தாமதப்படுத்தி, அதற்குப் பதிலாக தற்காலிகத் தேர்வுகளை மேற்கொள்வதைக் கண்டித்த உச்ச நீதிமன்றம், பரிந்துரைக்கப்பட்ட பெயர்களை அனுப்புமாறு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நினைவூட்டல்களை அனுப்பலாம் என்றும், அவ்வாறு செய்யத் தவறினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்கலாம் என்றும் தெரிவித்தது.
காவல்துறை சீர்திருத்தங்கள் தொடர்பான ‘பிரகாஷ் சிங்’ வழக்கில், உச்ச நீதிமன்றம் சில வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. அதன்படி, யு.பி.எஸ்.சி பட்டியலிடும் 3 மூத்த ஐ.பி.எஸ் அதிகாரிகளில் ஒருவரை டி.ஜி.பி-யாக மாநில அரசு தேர்ந்தெடுக்க வேண்டும், அவர்களுக்கு 2 ஆண்டுகள் நிலையான பணிக்காலம் வழங்கப்பட வேண்டும்.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யா காந்த் மற்றும் நீதிபதி ஜோய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு, பிரகாஷ் சிங் வழக்கின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல் மாநிலங்கள் தாமதம் செய்வது குறித்து யு.பி.எஸ்.சி வெளிப்படுத்திய கவலையை முழுமையாக ஏற்றுக்கொண்டது.
டி.ஜி.பி நியமனத்திற்கான பரிந்துரைகளை அனுப்புவதில் பல மாநிலங்கள் காட்டும் அளவுகடந்த தாமதத்தை வியாழக்கிழமை (05.02.2026) உச்ச நீதிமன்றம் தீவிரமாக கண்டித்ததுடன், இத்தகைய சம்பவங்களை நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வர யு.பி.எஸ்.சி-க்கு அதிகாரம் அளித்தது.
மாநில அரசுகளின் இத்தகைய தாமதத்தால், தகுதியுள்ள மற்றும் மூத்த அதிகாரிகள் டி.ஜி.பி பதவிக்கு பரிசீலிக்கப்படும் வாய்ப்பை இழக்க நேரிடுவதாக யு.பி.எஸ்.சி நீதிமன்றத்தில் தெரிவித்தது. பல மாநிலங்கள் உச்ச நீதிமன்ற உத்தரவுகளை அலட்சியப்படுத்தி, நிரந்தர டி.ஜி.பி-யை நியமிப்பதற்குப் பதிலாக, ‘தற்காலிக டிஜிபி’ முறையையே விரும்புவதாக ஆணையம் கூறியது.
“பிரகாஷ் சிங் வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் மீறப்படாமல் இருப்பதை உறுதி செய்ய, டி.ஜி.பி நியமனத்திற்கான பரிந்துரைகளை சரியான நேரத்தில் அனுப்புமாறு மாநில அரசுகளுக்கு முதலில் கடிதம் எழுத யு.பி.எஸ்.சி-க்கு அதிகாரம் அளிக்கிறோம்” என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கூறியது. மாநிலங்கள் சரியான நேரத்தில் பரிந்துரைகளைச் சமர்ப்பிக்கவில்லை என்றால், பிரகாஷ் சிங் வழக்கின் கீழ் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யுமாறு யு.பி.எஸ்.சி-க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
தெலங்கானா உயர் நீதிமன்றம் ஜனவரி 9-ம் தேதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து யு.பி.எஸ்.சி தாக்கல் செய்த மனுவை இந்த அமர்வு விசாரித்தது. தெலங்கானா மாநிலத்திற்கான டி.ஜி.பி தேர்வு செயல்முறையை 4 வாரங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் ஆணையத்திற்கு உத்தரவிட்டிருந்தது.
தெலங்கானா மாநிலத்தைப் பொறுத்தவரை, கடைசி நிரந்தர டி.ஜி.பி நவம்பர் 2015-ல் நியமிக்கப்பட்டு, அவர் 2017 நவம்பரில் ஓய்வு பெற்றார். அதன் பிறகு பரிந்துரைகளை அனுப்புவதில் அம்மாநில அரசு பெரும் தவறு இழைத்துள்ளதாக யு.பி.எஸ்.சி வழக்கறிஞர் வாதிட்டார்.
மாநிலங்களின் இத்தகைய செயலால் பல மூத்த அதிகாரிகள் ஓய்வு பெற்றுவிடுகின்றனர் அல்லது அவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர் என்ற ஆணையத்தின் கவலையை நீதிபதிகள் பதிவு செய்தனர். “எந்தவித தயக்கமுமின்றி, தெலங்கானா மாநிலத்திற்கான டி.ஜி.பி நியமனப் பரிந்துரைகளை வழங்க யு.பி.எஸ்.சி உடனடியாக கூட்டத்தைக் கூட்ட வேண்டும்” என்று கூறிய நீதிபதிகள், இப்பணியை முடிக்க மேலும் 4 வார அவகாசம் அளித்தனர். ஜார்க்கண்ட் மற்றும் தமிழகத்திலும் பொறுப்பு டிஜிபி நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]