டெல்லி: ‘வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு நான் ஆறு முறை கடிதம் எழுதி கூட எந்த பதிலும் கிடைக்கவில்லை. எங்களுக்கு எங்கும் நீதி கிடைப்பதில்லை’ என உச்ச நீதிமன்றத்திடம் மம்தா பானர்ஜி முறையிட்டார்.
இந்த வழக்கின் விசாரணையை அடுத்து, மேற்கு வங்க வாக்காளர் பட்டியல் விவகாரத்தில், பெயர் எழுத்துப்பிழை முரண்பாடுகள் குறித்து நோட்டீஸ் அனுப்புவதில் ‘அதிக உணர்வுடன்’ இருக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.

தலைமை நீதிபதி சூர்யகாந்த் பேசும்போது, பெயர் எழுத்துப்பிழைகளில் உள்ள சிறிய முரண்பாடுகள் காரணமாக ‘தர்க்கரீதியான முரண்பாடு’ இருப்பதாகக் கூறி, மக்களுக்கு நோட்டீஸ் அனுப்பும்போது, தங்கள் அதிகாரிகளை அதிக “உணர்வுடன்” இருக்குமாறு அறிவுறுத்த வேண்டும் என்று இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் தெரிவ்த்தார்.
வாக்காளர் பட்டியலில் ‘தர்க்கரீதியான முரண்பாடுகள்’ இருப்பதாகக் கூறி தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீஸ்களால் மேற்கு வங்க வாக்காளர் களுக்கு ஏற்பட்ட சிரமங்கள் குறித்தும், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புச் செயல்பாட்டில் ‘கணக்கிடப்படாதவர்’ என்று குறிப்பிடப்பட்டதாகக் கூறப்படும் புகழ்பெற்ற கவிஞர் ஜாய் கோஸ்வாமியின் மனுவைக் கருத்தில் கொண்டும், நேரில் ஆஜரான முதலமைச்சர் மம்தா பானர்ஜி முன்வைத்த வாதங்களைத் தொடர்ந்து, தலைமை நீதிபதி சூர்ய காந்த் இந்த அறிவுறுத்தலை தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்தார்.
மேற்குவங்க மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் பிப்ரவரி 4ந்தேதி அன்று நடைபெற்றது. இதுதொடர்பான 4 மனுக்களை உச்சநீதிமன்ற . தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்ஷி, வி.எம்.பஞ்சோலி அமர்வு விசாரணையை மேற்கொண்டது.
முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் மனுவே கடைசியாக ஜனவரி 28 அன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் திருத்தச் செயல்முறையானது, “தேர்தல் ஆணையத்தின் வெளிப்படைத்தன்மையற்ற, அவசரமான, அரசியலமைப்புக்கு விரோதமான மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளால்” “பாரிய அளவில் வாக்குரிமை பறிக்கப்படுவதற்கு” வழிவகுக்கும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கின் விசாரணையின்போது மேற்குவங்க அரசு சார்பில், மூத்த வழக்கறிஞர் ஷ்யாம் திவன், தலைமை நீதிபதியிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்தார்.
அந்தக் கடிதத்தில், ‘‘இந்த வழக்கின் உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளை நன்கு அறிந்தவர் மம்தா பானர்ஜி. நீதிமன்றத்தின் கண்ணியம் மற்றும் நடைமுறைகள் குறித்து முழுமையாக அறிந்தவர் அவர். நீதிமன்றத்துக்கு உரிய மரியாதையுடனும், நடைமுறையில் உள்ள விதிகள் மற்றும் வழக்கங்களுக்கு இணங்கவும் நடந்து கொள்ள அவர் உறுதி அளித்துள்ளார். எனவே, அவர் தனது தரப்பை முன்வைக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்” என கோரப்பட்டிருந்தது.
இதை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி சூர்ய காந்த், மம்தா பானர்ஜி பேச அனுமதி அளித்தார். அப்போது மம்தா பானர்ஜி, தனக்கு ஐந்து நிமிடம் வழங்குமாறு கோரிக்கை வைத்தார். 15 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளலாம் என தலைமை நீதிபதி கூறியதை அடுத்து தனது தரப்பு வாதத்தை மம்தா பானர்ஜி முன்வைத்தார்.

மம்மா பானர்ஜி பேசியது என்ன?
அப்போது, ‘‘பிரச்சினை என்னவென்றால், எங்களுக்கு எங்குமே நீதி கிடைப்பதில்லை. நான் தேர்தல் ஆணையத்துக்கு ஆறு முறை கடிதம் எழுதியுள்ளேன். ஆனாலும் எந்தப்பதிலும் கிடைக்கவில்லை. மொழி பிரச்சினைகளுக்காகவும், எழுத்துப் பிரச்சினைகளுக்காகவும் வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இப்படி நடப்பதை மாநில அரசு விரும்பவில்லை. பல வாக்காளர்களை “தர்க்கரீதியான முரண்பாடு” என்ற பிரிவின் கீழ் “கண்டறியப்படாத வர்கள்” என்று தேர்தல் ஆணையம் வகைப்படுத்தியதை முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்தார்.
திருமணத்திற்குப் பிறகு பெயரும் முகவரியும் மாறிய பெண்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். மேலும், உயிருடன் இருக்கும் பல வாக்காளர்களை தேர்தல் ஆணையம் இறந்தவர்கள் என்று அறிவித்திருப்பதாகவும் அவர் வாதிட்டார். இந்த வாதங்களையும், கவிஞர் ஜாய் கோஸ்வாமியின் வழக்கையும் (மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் பிரதிநிதித்துவப்படுத்தினார்)
இதை கணக்கில் எடுத்துக்கொண்ட தலைமை நீதிபதி காந்த், தேர்தல் ஆணையம் தனது அதிகாரிகளை மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்த வேண்டும் என்று கூறினார்.
“ஜாய் கோஸ்வாமி – அவர் ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர், [ஆனந்தா] புரஸ்கார் விருது பெற்றவர்… இதில் ஏதேனும் தவறு இருக்கலாம்… தயவுசெய்து உங்கள் அதிகாரிகளிடமும் சற்று உணர்வுபூர்வமாக இருக்குமாறு கூறுங்கள். [அவரைப்] போன்றவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டாம்…” என்று தலைமை நீதிபதி, தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் டி.எஸ். நாயுடுவிடம் கூறினார்.
மேலும், உச்ச நீதிமன்றம் உள்ளூர் பேச்சுவழக்கை அறிந்த அதிகாரிகளின் உதவியை மாநில அரசு தேர்தல் ஆணையத்திற்கு வழங்கலாம் என்றார்.
இதையடுத்து, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான், “தர்க்கரீதியான முரண்பாடு” பிரிவின் கீழ் சுட்டிக்காட்டப்பட்ட பெரும்பாலான வழக்குகள் (50% க்கும் மேற்பட்டவை) சிறிய பெயர் பொருத்தமின்மைகள் மற்றும்/அல்லது எழுத்துப் பிழைகள் தொடர்பானவை என்றும், அவை சரிபார்ப்புக்கு ஏற்கனவே உள்ள குறைந்த நேரத்தை மேலும் குறைப்பதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதையடுத்து பேசிய மம்தா, உதாரணத்துக்கு ஒரு பெண் தனது மாமனார் குடும்பப் பெயரை தனது பெயருடன் சேர்த்துக்கொண்டதற்காக அவரது பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. திருமணத்துக்குப் பின் ஒரு பெண் தனது கணவர் வீட்டுக்கு இடம் மாறியதால் அவரது பெயரை, முரண்பாடுகள் பட்டியலில் சேர்த்துள்ளது.
நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென், புகழ்பெற்ற வங்க கவிஞர் ஜாய் கோஸ்வாமி, திரிணமூல் காங்கிரஸ் எம்பி தீபக் அதிகாரி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலருக்கு தீவிர சிறப்புத் திருத்தம் தொடர்பாக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

ஆதார் அடையாள அட்டையை ஏற்க மறுப்பதன் மூலம் நீதிமன்றத்தின் உத்தரவை தேர்தல் ஆணையம் மீறுகிறது. மற்ற மாநிலங்களில் இருப்பிடச் சான்று அனுமதிக்கப்படுகிறது, சாதிச் சான்று அனுமதிக்கப்படுகிறது. ஆனால், மேற்கு வங்கம் மட்டும் குறிவைக்கப்படுகிறது, நசுக்கப்படுகிறது.
இந்த வாதங்களுக்குப் பதிலளித்த தலைமை நீதிபதி காந்த், தேர்தல் ஆணையத்திடம், “இதற்கு உங்கள் தீர்வு என்ன? எழுத்துப் பிழையால் கூட ஏற்படாத, உள்ளூர் பேச்சுவழக்கில் நீங்கள் உச்சரிக்கும் விதத்தால் மட்டுமே ஏற்படும் இதுபோன்ற முரண்பாடுகளைப் பற்றி என்ன செய்வது? இது இந்தியா முழுவதும் நடந்துள்ளது… ஹரியானா மற்றும் பஞ்சாபிலும் இது நடந்தது.” என்று கேள்வி எழுப்பினார்.
இந்த நேரத்தில், மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், கடந்த விசாரணையின் போது, எழுத்துப் பிழைகள் காரணமாக வாக்காளர் களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டாம் என்று தனது அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் உறுதியளித்ததை சுட்டிக்காட்டினார்.
லேசான நகைச்சுவையாக, நீதிபதி பக்ஷி, தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதியிடம், அவரது குடும்பப்பெயரான ‘திவேதி’ கூட பெங்காலியில் வித்தியாசமாக உச்சரிக்கப்படும் என்று சுட்டிக்காட்டினார். “அப்போது நீங்களும் [வெளியேற்றப்படுவீர்கள்]”, என்று தலைமை நீதிபதி சூர்ய காந்த் கேலி செய்தார். “பெங்காலி மொழியில் ‘வ’ என்ற எழுத்து இல்லை…”, என்று நீதிபதி பக்ஷி கூறினார்.
அப்போது, நீதிபதி விபுல் பஞ்சோலியின் பெயரும் பெங்காலியில் வித்தியாசமாக உச்சரிக்கப்படும் என்பதை தலைமை நீதிபதி காந்த் குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து, தனது பெயர் அடிப்படையில் ஒரு பெங்காலி பெயர் என்பதால், அதில் எந்தத் தவறும் இருக்காது என்று தலைமை நீதிபதி குறிப்பிட்டார்.
இருப்பினும், முதலமைச்சர் மம்தா பானர்ஜி, “ஐயா, அப்படியும் இருக்கலாம்” என்று கூறி மாறுபட்ட கருத்தைத் தெரிவித்தார். இறுதியாக, உள்ளூர் பேச்சுவழக்கில் நன்கு பரிச்சயமான சில அதிகாரிகளை மாநில அரசு தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கலாம் என்றும், அதன் மூலம் அடையாள அடிப்படையிலான முரண்பாடுகளிலிருந்து உள்ளூர் பேச்சுவழக்கு முரண்பாடுகளைப் பிரித்தறிய அவர்கள் உதவ முடியும் என்றும் தலைமை நீதிபதி காந்த் ஒரு ஆலோசனையை வழங்கினார்.
“மாநில அரசு பெங்காலி மற்றும் உள்ளூர் பேச்சுவழக்கில் நன்கு பரிச்சயமான அதிகாரிகளைக் கொண்ட ஒரு குழுவை வழங்கினால்… அவர்கள் இதை ஆய்வு செய்து… இது உள்ளூர் பேச்சுவழக்குத் தவறுதான், அடையாளத் தவறு அல்ல என்று தேர்தல் ஆணையத்திடம் கூறினால்… அது உதவியாக இருக்கும்,” என்று தலைமை நீதிபதி கூறினார்.
தொடர்ந்த பேசிய மம்தா, நான்கு மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அசாமில் தீவிர சிறப்பு திருத்தம் இல்லை. ஆனால், மேற்கு வங்கத்தில் அது நடைமுறைப்படுத்தப்படுகிறது. இது ஏன்? இன்னும் மூன்று மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதைச் செய்ய என்ன அவசரம்? சிறப்பு தீவிர திருத்தத்தால் 100-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேற்கு வங்கம் புல்டோசர் கொண்டு இடிக்கப்படுகிறது. தயவு செய்து மக்களின் உரிமைகளை நீங்கள் பாதுகாக்க வேண்டும்’’ என மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்தார் .
எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு உண்டு என தெரிவித்த நீதிபதிகள், மனுதாரர் எழுப்பியுள்ள பிரச்சினைகள் நியாயமானவை என்பதால் அதை விசாரணைக்கு ஏற்பதாகக் குறிப்பிட்டனர்.
மேலும், நோட்டீஸ் அனுப்புவதற்கு முன்பாக சிறிதேனும் புத்திசாலித்தனத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று உங்கள் அதிகாரிகளுக்கு அறிவுறுத்துங்கள் என தேர்தல் ஆணைய வழக்கறிஞரிடம் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், இந்த வழக்கின் அடுத்த விசாரணையை வரும் திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.
[youtube-feed feed=1]