அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசிய பிறகு, இந்தியா–அமெரிக்கா இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டதாக அறிவித்தார். இந்த ஒப்பந்தத்தின் படி, அமெரிக்கா இந்தியப் பொருட்களுக்கு விதித்திருந்த பரஸ்பர சுங்கவரியை 25%லிருந்து 18%க்கு குறைக்க ஒப்புக் கொண்டுள்ளது.
இதற்கு பதிலாக, அமெரிக்கப் பொருட்களுக்கு இந்தியா விதித்திருந்த சுங்க வரிகளையும் (Tariff), சுங்கமற்ற தடைகளையும் (Non-Tariff Barriers) முழுமையாக நீக்கி, பூஜ்யமாக்க நடவடிக்கை எடுக்கும் என்று டிரம்ப் தெரிவித்தார்.

Truth Social-ல் பதிவிட்ட டிரம்ப், “இந்திய பிரதமர் மோடி என் நெருங்கிய நண்பர். அவருக்கான நட்பு மற்றும் மரியாதையின் அடிப்படையில் இந்த வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஒப்புக் கொண்டோம்” என்று கூறினார். இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு மேலும் விரிவடையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், இந்தியா ‘BUY AMERICAN’ கொள்கையின் அடிப்படையில், அமெரிக்காவிலிருந்து எரிசக்தி, தொழில்நுட்பம், வேளாண் பொருட்கள், நிலக்கரி உள்ளிட்டவற்றை 500 பில்லியன் டாலருக்கும் அதிகமாக வாங்க ஒப்புக்கொண்டதாகவும் டிரம்ப் கூறினார்.
மேலும், ரஷ்ய எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்து, அமெரிக்காவிலிருந்து (குறிப்பாக வெனிசுவேலாவிலிருந்து) அதிகளவு பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி செய்ய ஒப்புக்கொண்டதாகவும் டிரம்ப் தெரிவித்தார். இது உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர உதவும் முயற்சியின் ஒரு பகுதியாகும் என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையில், பிரதமர் மோடி X தளத்தில் பதிலளித்து, இந்த ஒப்பந்தத்தை வரவேற்றார்.
“Made in India பொருட்களுக்கு சுங்கவரி 18%ஆக குறைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்திய மக்களின் சார்பில் அதிபர் டிரம்ப்க்கு நன்றி,” என்று அவர் பதிவிட்டார்.
இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளான இரு நாடுகளுக்கும் பயன் தரும் என்றும், இருதரப்பு ஒத்துழைப்பை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் என்றும் மோடி தெரிவித்தார்.
அமெரிக்காவின் இந்தியத் தூதர் செர்ஜியோ கோர், இந்த ஒப்பந்தத்தைப் பாராட்டி, “டிரம்ப்–மோடி நட்பு வலுவானது. இந்தியா–அமெரிக்கா உறவுக்கு எல்லையற்ற வாய்ப்புகள் உள்ளன” என்று கூறினார்.
[youtube-feed feed=1]