2030ல் விண்வெளியில் செயற்கை நுண்ணறிவு (AI) டேட்டா சென்டர்கள் அமைக்கும் பெரிய திட்டத்தை சீனா அறிவித்துள்ளது. இதன் மூலம், விண்வெளி தொழில்நுட்பத்தில் அமெரிக்காவுடன் நேரடி போட்டிக்கு சீனா தயாராகி வருகிறது.
சீனாவின் முக்கிய விண்வெளி ஒப்பந்த நிறுவனம், “ஜிகாவாட் அளவிலான விண்வெளி டிஜிட்டல்-இன்டலிஜென்ஸ் கட்டமைப்பு” அமைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு மூலம், செயற்கைக்கோள்களிலேயே தகவல்களை சேமித்து, கணக்கிட்டு, தரவை அனுப்ப முடியும்.

இந்த விண்வெளி டேட்டா சென்டர்கள், கிளவுட் கம்ப்யூட்டிங், எட்ஜ் கம்ப்யூட்டிங், தரைத்தள நெட்வொர்க் ஆகியவற்றுடன் இணைந்து செயல்படும். இதனால், பூமியில் உள்ள மின்சாரத்தை அதிகமாக பயன்படுத்தும் டேட்டா சென்டர்களின் தேவையை குறைக்கலாம் என சீனா நம்புகிறது.
இந்த திட்டம் சீனாவின் வரவிருக்கும் 15-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் (15th Five-Year Plan) முக்கிய அம்சமாக சேர்க்கப்பட்டுள்ளது. 2030க்குள், “ஸ்பேஸ் கிளவுட்” எனப்படும் தொழில்துறை அளவிலான விண்வெளி கணினி வலையமைப்பை உருவாக்க இலக்கு வைத்துள்ளனர். இதற்கு, விண்வெளியில் அமைக்கப்படும் பெரிய சூரிய ஆற்றல் நிலையங்கள் மின்சாரம் வழங்கும்.
AI வளர்ச்சியால் அதிகரிக்கும் மின்சார தேவையை சமாளிப்பதோடு, முக்கிய டிஜிட்டல் கட்டமைப்புகளில் வெளிநாட்டு சார்பை குறைப்பதே இந்த முயற்சியின் நோக்கம் என சீன அதிகாரிகள் கூறுகின்றனர். இது நாட்டின் நீண்டகால பொருளாதார போட்டித்திறனுக்கும் பாதுகாப்பிற்கும் அவசியம் என அவர்கள் கருதுகிறார்கள்.
இதற்கிடையில், அமெரிக்காவின் SpaceX நிறுவனமும், விண்வெளியில் சூரிய ஆற்றலை பயன்படுத்தி AI டேட்டா சென்டர்கள் அமைக்கும் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. பூமியில் மின்சார வளங்கள் பற்றாக்குறை ஏற்படலாம் என்பதால், அடுத்த 2–3 ஆண்டுகளில் இப்படியான செயற்கைக்கோள்களை விண்ணில் அனுப்ப முடியும் என SpaceX தெரிவித்துள்ளது.
மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட் தொழில்நுட்பம் காரணமாக, அமெரிக்காவுக்கு குறைந்த செலவில் அடிக்கடி செயற்கைக்கோள்களை அனுப்பும் முன்னிலை உள்ளது. சீனா கடந்த ஆண்டு அதிகமான ஏவுதல்களை செய்திருந்தாலும், முழுமையான ரியூஸபிள் ராக்கெட் அமைப்பில் இன்னும் சவால்களை எதிர்கொண்டு வருகிறது.
AI டேட்டா சென்டர்கள் மட்டுமல்லாமல், விண்வெளி சுற்றுலா, டீப் ஸ்பேஸ் ஆராய்ச்சி, நட்சத்திரங்களுக்கு இடையிலான பயணம் போன்ற துறைகளிலும் சீனா கவனம் செலுத்துகிறது. இதற்காக புதிய ஆராய்ச்சி நிறுவனங்களும் தொடங்கப்படுகின்றன.
ஆனால், நீண்ட காலத்தில் உலக அளவில் முன்னணியில் நிற்க, மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட் தொழில்நுட்பம் மற்றும் நிலையான பெரிய அளவிலான விண்வெளி மின்சார உற்பத்தி ஆகியவற்றில் சீனா முக்கிய முன்னேற்றம் அடைய வேண்டியிருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
[youtube-feed feed=1]