சென்னை: வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பணி நாளாக இருக்க வேண்டும் என வலியுறுத்தி ஜன. 27 ஆம் தேதி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுஉள்ளது. இதன் காரணமாக வரும் செவ்வாய்கிழமை வங்கிகள் இயங்காது.

வங்கிளுக்கு சனி, ஞாயிறு, ஜனவரி 26 குடியரசு தின விடுமுறை என 3 நாள் தொடர் விடுமுறை உள்ள நிலையில், வங்கி ஊழியர்கள் சங்கம் ஜனவரி 27ந்தேதி ஸ்டிரைக் அறிவித்துள்ளதால், தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள் இயக்காத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் வங்கி சேவைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது அனைத்து ஞாயிற்றுக்கிழமைகள், இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இருந்தாலும் சனிக்கிழமை தோறும் விடுமுறை வேண்டும் என வங்கி ஊழியர்கள் கோரி வருகின்றனர். இதை வலியுறுத்தி இந்திய வங்கி சங்கம் மற்றும் ஒருங்கிணைந்த வங்கி ஊழியா்கள் கூட்டமைப்பு இடையே 2024, மாா்ச் மாதம் உடன்பாடு ஏற்பட்டது. ஆனால் இந்த நடைமுறை அமலாகவில்லை.
தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஜன.27-ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இம்மாத தொடக்கத்தில் ஒருங்கிணைந்த வங்கி ஊழியா்கள் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து, வங்கி ஊழியா்கள் கூட்டமைப்புடன் தலைமை தொழிலாளா் ஆணையா் புதன்கிழமை (ஜன.21) மற்றும் வியாழக்கிழமை (ஜன.22) பேச்சுவாா்த்தை நடத்தினாா். இது தோல்வியில் முடிந்தது.
இதையடுத்து வங்கி ஊழியர் கூட்டமைப்பு அறிவித்தபடி வேலைநிறுத்தம் நடைபெறும் என அறிவித்து உள்ளது. இந்த வேலைநிறுத்தத்தில் நாடு முழுவதும் உள்ள சுமார் 8 லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வங்கி ஊழியா்கள் கூட்டமைப்பு வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘மத்திய நிதி அமைச்சகத்தின்கீழ் செயல்படும் நிதி சேவைகள் துறை அதிகாரிகள், மத்திய அரசு அதிகாரிகளுடன் 9 சங்கங்கள் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் திட்டமிட்டபடி ஜன.27-ஆம் தேதி வேலைநிறுத்த போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
[youtube-feed feed=1]