சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணங்களில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 70% ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தெரிவித்தார். அதுபோல, மற்றொரு கேள்விக்கு பதில் கூறிய அமைச்சர், இந்தியாவில் குறைவான குற்றங்கள் நடைபெறும் மாநிலம் தமிழ்நாடு என்று இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி கூறினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய எதிர்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார், “முதலமைச்சர் ஸ்டாலின் துபாய் சென்று மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தொடர்பான முதலீடுகள் வந்துவிட்டதா?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, ”முதலமைச்சர் வெளிநாடு பயணங்களில் மட்டும் 69 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப் பட்டன. இவற்றில் 70 சதவீதம் ஒப்பந்தங்கள் செயல்பாட்டில் உள்ளன.
லூலூமால் கோயம்புத்தூரில் திறக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் விளைப்பொருட்களை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று லூலூ நிறுவனத்திடம் பேசி வருகிறோம். மேலும் சென்னையில் லூலூ மால் அமைப்பது தொடர்பாகவும் பேசி வருகிறோம்” என்று அமைச்சர் ராஜா பதில் அளித்தார்.
தொடர்ந்து பேசிய எதிர்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார், ”நிரந்தரமான சட்டம் ஒழுங்கு டிஜிபியை நியமிக்காத காரணத்தால் தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது. கொலைகள் அதிகமாக நடைபெற்றுள்ளது. மேலும் மக்களின் உயிர் பாதுகாப்பை இந்த அரசு உறுதி செய்யவில்லை என்ற கவலை ஏற்பட்டுள்ளது” என்று பேசினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், ”உறுப்பினர் கூறிய சம்பவங்கள் தனி மனித மோதல். நீங்கள் ஆட்சியில் இருந்தபோது தூத்துக்குடி தூப்பாக்கிச்சூடு என்ற அரச பயரங்கரவாத்தை செய்தீர்கள்” என்று பதில் அளித்தார். தொடர்ந்து பேசிய இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி, ”இந்தியாவில் குறைவான குற்றங்கள் நடைபெறும் மாநிலம் தமிழ்நாடு தான். இதற்கு அனைத்து தரவுகளும் உள்ளன” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், ”தமிழ்நாட்டில் மிகவும் குறைவான குற்ற சம்பவங்கள் நடைபெறுகிறது. அவ்வாறு நடைபெறும் சம்பவங்களுக்கு உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறது. உங்கள் ஆட்சி போன்று மறைக்கவில்லை” என்று பதில் அளித்தார்.
[youtube-feed feed=1]