சென்னை: சென்னையில் 80 ஆயிரம் பேர் உள்பட 22லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் தெரிவித்து உள்ளர்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் புத்தாண்டு கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கேள்வி நேரத்தின்போது, திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, “எலவம்பட்டி, மதுரா மைக்காடு மற்றும் ஜெகன்நாதன் வட்டம் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுக்குமா?” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன், “தற்போது வரை இந்த ஆட்சியில் இதுவரை 22 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. எனவே இவர்களுக்கும் பட்டா வழங்குவதற்கான வழிவகைகளை இந்த அரசு ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கும்” என்றார்.
தொடர்ந்து, பேசிய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை, “நீர்ப்பிடிப்பு இல்லாத பகுதிகளில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் மக்களுக்கு பட்டா வழங்கும் வகையில் அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும். நீர்நிலைகளை வரன்முறைப்படுத்த வேண்டும் ” என்றும் வலியுறுத்தினார்.
மேலும், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் நீர்ப்பிடிப்பு ஒரு காலத்தில் இருந்தது. இப்போது இல்லை. அந்த தொகுதியில் உள்ள மக்களுக்கும் வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதற்கு பதில் அளித்த, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், “அனைத்து பகுதியும் ஒரு காலத்தில் நீர்நிலை புறம்போக்குகளாக இருந்திருக்கும். அங்கு கட்டுமானங்கள் இருக்க கூடாது என நீதிமன்றம் கூறியுள்ளது. நீதிமன்றம் தலையீட்டின் காரணத்தினாலே நீர்நிலைப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் அகற்றப்படுகின்றன. ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படாத வகையில் அவர்களுக்கு பட்டா வழங்கும் படி கொள்கை முடிவு எடுக்க முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. உரிய தீர்வு காணப்படும்.
அதே நேரம் மேய்க்கால் புறம்போக்கு பிரச்சனையில் முதலமைச்சர் கொள்கைரீதியிலான முடிவு எடுப்பார். மேய்க்கால் புறம்போக்கு பகுதியில் இருக்கும் ஏழை மக்களுக்கு துன்பம் வராமல் அவர்களுக்கு பட்டா வழங்க முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார்.
முதலமைச்சரின் நல்ல எண்ணம் காரணமாக சென்னையொட்டி வசிக்கும் 80 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக பட்டா வழங்கப்படாத பகுதிகள் பட்டா வழங்கப்பட்டுள்ளது” என்று பதில் அளித்தார்.
தொடர்ந்து பேசிய கூடலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பொன். ஜெயசீலன், கூடலூர் தொகுதியில் பழங்குடியின மக்களுக்கு அரசு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், “கூடலூர் தொகுதியில் அரசு புறம்போக்கு நிலம் இருந்தால் அவற்றில் வீட்டு மனைப் பட்டா வழங்கப்படும். விலைவாசி கூடி விட்டதால் அரசே நிலத்தை வாங்கி மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்குவதில் சிரமம் இருக்கிறது. எனவே அரசு புறம்போக்கு நிலத்தை உறுப்பினர்கள் கண்டறிந்து கூறினால் அங்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
[youtube-feed feed=1]