சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின், வீட்டில் இருந்தே ஸ்டார் 3.0 பத்திரப்பதிவு உள்பட 18 சேவைகளை இன்று தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.
இதன் காரணமாக, இனிமேல் பொதுமக்கள் இனி வீடு, நிலம் வாங்க பத்திர பதிவு அலுவலகம் செல்ல தேவையில்லை. சார் – பதிவாளர் அலுவலகம் செல்லாமல், எங்கிருந்தும், எப்போது வேண்டுமானாலும் பத்திரப்பதிவு செய்யும் வகையில், 18 வகையான புதிய சேவைகள் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

சார் பதிவாளர் அலுவலகம் செல்லாமல் வீட்டிலிருந்தே பத்திரப்பதிவு செய்யும் வசதி அறிமுகம். பதிவுத்துறையில் ஸ்டார் 3.0 திட்டத்தின் கீழ் 18 புதிய சேவைகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
பதிவுத்துறையில் ஸ்டார் 3.0 திட்டத்தின் கீழ், காகிதமில்லா ஆவணப்பதிவு, நேரடி வருகையில்லா ஆவணப்பதிவு, தானியங்கி பத்திர உருவாக்கம், மறு விற்பனையாகும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கட்டடக் களப்பணியின்றி ஆவணங்களை அன்றே திரும்ப வழங்கும் திட்டம், எளிய முறையில் வில்லங்கச்சான்றில் தேடுதல் உள்ளிட்ட 18 சேவைகளை இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
அந்த வகையில் தற்போது பதிவுத்துறையில் பயன்பாட்டில் உள்ள ‘ஸ்டார் 2.0’ மென்பொருளுக்கு பதிலாக ‘ஸ்டார் 3.0’ என்ற புதிய மென்பொருள் அறிமுகப்படுத் தப்படும் வகையில் புதிய திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. இதற்கான புதிய மென்பொருள் தற்போது நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டு சோதனைகளும் வெற்றி அடைந்துள்ளது. இதனையடுத்து புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள ‘ஸ்டார் 3.0’ மென்பொருளை மூலம் சொத்து வாங்கும் மக்கள், எங்கிருந்தும், எப்போது வேண்டுமானாலும், பத்திரப்பதிவை மேற்கொள்ளும் வகையில் 18 புதிய வசதிகள் இதில் இடம் பெற்றுள்ளன.
அந்த வகையில் சொத்துக்களை வாங்க டிஜிட்டல் கையெழுத்திட்டு, சொத்து பத்திரங்கள் டிஜிட்டல் முறையில் மக்களுக்கு கிடைக்கும் வகையில் நடவடிகைக எடுக்கப்படவுள்ளது. காகிதமில்லா அலுவலகம் என்பதுடன், கட்டணங்களை கியூஆர் குறியீடு முறையில் செலுத்தும் வசதிகளும், இதில் இடம் பெற்றுள்ளன. இதனால் பத்திரப்பதிவு பணிகள் மிகவும் எளிதானதாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வீட்டில் இருந்தே பத்திர பதிவு
இந்த புதிய நடைமுறை காரணமாக சார் – பதிவாளர் அலுவலகத்துக்கு, பத்திரங்களை காகித வடிவில் எடுத்துச் செல்ல வேண்டாம். முதல்கட்டமாக 10 வகையான பத்திரப்பதிவு பணிகள் முழுமையாக ‘ஆன்லைன்’ முறையில் மேற்கொள்ளப்படவுள்ளது. இதில் புதிய வீடு மற்றும் மனை வாங்குவோர், சார் – பதிவாளர் அலுவலகம் செல்லாமல், பில்டர், மேம்பாட்டாளர் அலுவலகத்தில் இருந்தபடியே பத்திரப்பதிவை முடிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வார வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்கள், முகூர்த்த நாட்களில், மக்கள் விரும்பும் நேரத்தில், ‘ஆன்லைன்’ முறையில் பத்திரப்பதிவை மேற்கொள்ளும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமில்லாமல் சொத்தின் வில்லங்க சான்றிதழ்களை ஒரே இடத்தில் ஆன்லைனில் பெறலாம் . சான்றிடப்பட்ட பத்திரப் பிரதியை மூன்று நாட்களுக்குள் வழங்கும் வகையிலும் வசதி செய்யப்பட்டுள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறையின் சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் சார்பில் ரூ. 167 கோடியே 9 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தற்போதைய மந்தைவெளி பேருந்து பணிமனை மற்றும் முனையத்தில் ஒருங்கினைந்த பன்முக போக்குவரத்து மற்றும் வணிக வளாகத்திற்கான கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் சார்பில் 60 கோடி ரூபாய் மதிப்பீட்டில், இராஜீவ் காந்தி சாலை ஒக்கியம் மடுவில் புதியதாக கட்டப்பட்டுள்ள நான்கு வழி சாலைப்பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் 16 கோடியே 88 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அதிநவீன உறை விந்து வங்கி, கால்நடை மருத்துவமனை, 4 கால்நடை மருந்தகங்கள், 2 கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி நிலையம், இணை இயக்குநர் அலுவலகம், 2 ஒருங்கிணைந்த பண்ணைகள் மற்றும் தெருநாய்களுக்கான சிறப்பு கால்நடை மருத்துவ வளாகம் ஆகிய 12 கட்டடங்களை திறந்து வைத்து, 118 கோடியே 42 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 31 ஒருங்கிணைந்த கால்நடை பண்ணைகள் மற்றும் நவீன ஒருங்கிணைந்த இறைச்சி உற்பத்தி மற்றும் இறைச்சி பதப்படுத்தும் வளாகத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 126 இளநிலை உதவியாளர் மற்றும் 96 தட்டச்சர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
பதிவுத்துறையின் ஸ்டார் 3.0 திட்டத்தின் கீழ், காகிதமில்லா ஆவணப்பதிவு, நேரடி வருகையில்லா ஆவணப்பதிவு, தானியங்கி பத்திர உருவாக்கம், மறு விற்பனையாகும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கட்டடக் களப்பணியின்றி ஆவணங்களை அன்றே திரும்ப வழங்கும் திட்டம், சொத்து தொடர்பான பரிவர்த்தனைகளை எளிய முறையில் வில்லங்கச்சான்றில் தேடுதல் உள்ளிட்ட 18 சேவைகள் உள்ளடக்கிய செயல் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் சார்பில் வெளிநாட்டில் பட்டமேற்படிப்பு பயில 10 சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், 10 சிறுபான்மையின மாணவ, மாணவியர்களுக்கு தலா 36 லட்சம் ரூபாய் கல்வி உதவித்தொகைக்கான ஆணைகளை வழங்கினார்.
மேலும், 2 தொன்மையான தேவாலயங்கள் மற்றும் 2 பழைமை வாய்ந்த தேவாலயங்களை புனரமைப்பதற்கு முதல் தவணைத் தொகையாக 1 கோடியே 81 இலட்சத்து 97 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை தேவாலய பிரதிநிதிகளிடம் வழங்கினார்.
தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பாக நடைபெறும் நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாவட்டம், சிப்காட் தொழில் பூங்கா மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் அமைந்துள்ள தொழிற்சாலைகளின் தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு முள்ளக்காடு கிராமத்தில், நாளொன்றுக்கு 60 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட கடல் நீரை நன்னீராக்கும் திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டினார்.