லிவ்-இன் உறவுகளை காந்தர்வ (காதல்) திருமணம் போலவே பார்க்க வேண்டும் என்றும், அந்த உறவில் இருக்கும் பெண்களுக்கு மனைவி என்ற சட்ட அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் முக்கியமான கருத்தை தெரிவித்துள்ளது.
திருமணம் செய்வதாக பொய் வாக்குறுதி கொடுத்து உடலுறவு வைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு முன் ஜாமீன் வழங்க மறுத்த நீதிமன்றம், இது பாரதிய நியாய சஞ்சிதா (BNS) சட்டம் பிரிவு 69ன் கீழ் கடுமையான குற்றம் எனக் கூறியுள்ளது.

மனுதாரரும் குற்றம்சாட்டப்பட்டவரும் பள்ளிப் பருவம் முதல் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள் என்றும் அவர்களது பழக்கம் காதல் உறவாக மாறியதாகவும் நாளடைவில் திருமணம் செய்வதாகக் கூறியதால் அதுவே உடல் ரீதியான உறவாக மாற்றியதாக அந்தப் பெண் அளித்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
2024ல் இருவரும் திருமணம் செய்ய வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், மகள் காணாமல் போனதாக பெண்ணின் குடும்பம் கொடுத்த புகாரை அடுத்து இவர்களை கண்டுபிடித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையின் போது, வேலை கிடைத்த பிறகு திருமணம் செய்வதாக ஆண் வாக்குறுதி அளித்துள்ளார்.
பின்னர் திருமணம் செய்ய மறுத்ததை அடுத்து மோசடி மற்றும் மிரட்டல் புகாரை அந்தப் பெண் அளித்துள்ளார்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரிய குற்றம் சாட்டப்பட்டவர், அந்த உறவு இருவரின் சம்மதத்துடன் ஏற்பட்டது என்றும், பெண்ணின் முந்தைய உறவுகள் பற்றித் தெரிந்த பிறகுதான் அதை முறித்துக்கொண்டதாகவும் கூறினார். வேலையின்மை மற்றும் நிதி நெருக்கடியையும் அவர் திருமணம் செய்யாததற்கான காரணங்களாகக் குறிப்பிட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி எஸ். ஸ்ரீமதி, “லிவ்-இன் உறவுகள் இந்திய சமூகத்திற்கு ஒரு ‘கலாச்சார அதிர்ச்சி’. இதை நவீனம் என்று நினைத்து பலர் சட்ட விளைவுகளை புரிந்து கொள்ளாமல் இதில் இறங்குகிறார்கள். உறவு உடைந்ததும், திருமணம் அளிக்கும் சட்ட பாதுகாப்பு லிவ்-இன் உறவிலுள்ள பெண்களுக்கு இல்லை என்ற உண்மை தீ போல் வாட்டத் தொடங்குகிறது” என்று குறிப்பிட்டார்.
திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்து குற்றம் சாட்டப்பட்டவர் உடல் உறவைத் தொடர்ந்தார், பின்னர் அதிலிருந்து பின்வாங்கினார் என்பதைக் காட்ட போதுமான முகாந்திரம் இருப்பதாக நீதிமன்றம் கண்டறிந்தது.
ஏமாற்றுவதன் மூலம் பாலியல் உறவு கொள்வதை குற்றமாக்கும் BNS-இன் பிரிவு 69, முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்படவில்லை என்பதை நீதிமன்றம் குறிப்பிட்டதுடன், அந்தப் பிரிவைச் சேர்க்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது.
மேலும், குற்றம் சாட்டப்பட்டவர் திருமணம் செய்ய மறுத்ததால், பிரிவு 69-இன் கீழ் வழக்குத் தொடர்வது தவிர்க்க முடியாதது என்றும், குற்றத்தின் தன்மை மற்றும் தீவிரத்தன்மை காரணமாக காவலில் வைத்து விசாரிப்பது அவசியம் என்றும் நீதிமன்றம் கூறியது.
லிவ்-இன் உறவுகளில் உள்ள பெண்களுக்கு சட்டப் பாதுகாப்பில் உள்ள ஒரு குறைபாட்டையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
சிறுமிகள் POCSO சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படுகிறார்கள் என்றும், திருமணமான பெண்களுக்கு சட்டரீதியான தீர்வுகள் உள்ளன என்றும், ஆனால் லிவ்-இன் உறவுகளில் உள்ள பெண்களுக்கு அத்தகைய குறிப்பிட்ட தீர்வுகள் இல்லை என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
“இப்போது பாதிக்கப்படக்கூடிய ஒரு பிரிவினரான பெண்கள் ‘லிவ்-இன் உறவு’ என்ற கருத்தால் மன உளைச்சலுக்கு ஆளாகி, அதற்கு இரையாகிறார்கள். அவர்களுக்கு முற்றிலும் எந்தப் பாதுகாப்பும் இல்லை,” என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
தம்பதிகள் லிவ்-இன் உறவுகளை “நவீனமானது” என்று ஏற்றுக்கொள்கிறார்கள், ஆனால் பின்னர் தகராறுகள் ஏற்படும்போது ஒரு பெண்ணின் குணநலன்களைத் தாக்குகிறார்கள் என்று நீதிமன்றம் மேலும் கூறியது.
சமரசம் பேசப்பட்டபோது, புகார்தாரர் இழப்பீடு பெற மறுத்துவிட்டார். அவ்வாறு செய்தால், “பணத்திற்காக உறவு கொண்டவர்” என்று முத்திரை குத்தப்படுவோம் என்று அஞ்சியதே இதற்குக் காரணம். இந்த அச்சம் பிரச்சினையின் தீவிரத்தைப் பிரதிபலிக்கிறது என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
ஒரு ஆண் திருமண வாக்குறுதி அளித்து ஒரு பெண்ணுடன் பாலியல் உறவு கொண்டு, பின்னர் திருமணம் செய்ய மறுத்தால், அந்த நடத்தை பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவு 69-இன் கீழ் வரும் என்று தீர்ப்பளித்த நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்டவரின் ஜாமீன் மனுவை நிராகரித்தது.
[youtube-feed feed=1]