மதுரை:  மதுரையில் கோயில் இடத்தை ஆக்கிரமித்து தயா  பொறியியல் கல்லூரி கட்டப்பட்டு உள்ளதை எதிர்த்து  தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்கு,  முன்னாள் திமுக தென்மண்ட செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான  மு.க.அழகிரி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில்  ஆஜரானார்.

ஏற்கனவே மு.க.அழகிரியின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில்,  அவர் மீண்டும் விசாரணைக்கு ஆஜரானார். இதையடுத்து வழக்கு பிப்ரவரி 2 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள சிவரக்கோட்டையில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தனது மகன் துரை தயாநிதி பெயரில் தயா பொறியியல் கல்லூரி என்ற கல்லூரியை கட்டியிருந்தார். இந்நிலையில் சிவரக்கோட்டையைச் சேர்ந்த ஜெயராமன் என்பவர் தயா பொறியியல் கல்லூரி கட்டுவதற்காக விநாயகர் கோயில் இடத்தை அழகிரி தரப்பு ஆக்கிரமித்ததாக நில அபகரிப்புப் பிரிவில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து புகாரின் பேரில் கடந்த 2014 ஆம் ஆண்டு முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.

 இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தபோது முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி நேரில் ஆஜராகினர். இதையடுத்து வழக்குவிசாரணையை பிப்ரவரி 2 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

முன்னதாக, கோவில் நிலத்தை ஆக்கிரமித்து கல்லூரி கட்டப்பட்டுள்ளதை எதிர்த்து, தொடரப்பட்ட  வழக்கில் 2021 ஆம் ஆண்டு மதுரை நீதிமன்றம் மு.க அழகிரியை சில பிரிவுகளில் விடுவித்தது. இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அழகிரி மீதான மோசடி, ஏமாற்றுதல் போன்ற குற்றச்சாட்டுகளுக்கான விடுவிப்பை ரத்து செய்து, விசாரணையை தொடர உத்தரவிட்டது. உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அழகிரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததும் குறிப்பிடதக்கது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.அழகிரியிடம் செய்தியாளர்கள்,  வரும் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் கூறியவர்,  யாராவது ஒருவர் வெற்றி பெறுவார்கள் என பதில் அளித்தார்.

 

[youtube-feed feed=1]