டெல்லியில் நடைபெற்று வரும் இந்திய ஓபன் சூப்பர் 750 பேட்மிண்டன் போட்டி குறித்து வெளிநாட்டு வீரர்கள் சிலர் கடும் கவலை வெளியிட்டுள்ளனர். குறிப்பாக, டென்மார்க் நாட்டைச் சேர்ந்த வீரர்கள் காற்று மாசு மற்றும் சுகாதார குறைபாடுகள் பற்றி பேசியுள்ளனர்.
உலக தரவரிசையில் 3-ஆம் இடத்தில் இருக்கும் ஆண்டர்ஸ் ஆன்டன்சன், டெல்லியில் நிலவும் கடும் காற்று மாசு காரணமாக இந்தப் போட்டியில் இருந்து விலகினார். இதே காரணத்தால் அவர் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்திய ஓபனை தவிர்த்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்ஸ்டாகிராமில், “டெல்லியில் இப்போது மாசு மிக அதிகமாக உள்ளது. இப்படிப்பட்ட இடத்தில் பேட்மிண்டன் போட்டி நடத்துவது சரியல்ல. கோடைக்காலத்தில் உலக சாம்பியன்ஷிப் நடைபெறும் போது நிலைமை மேம்படும் என நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் போட்டியில் பங்கேற்காததால், BWF (உலக பேட்மிண்டன் சம்மேளனம்) அவருக்கு 5000 அமெரிக்க டாலர் (ரூ. 4.5 லட்சம்) அபராதம் விதித்துள்ளது.
BWF விதிப்படி, முன்னணி வீரர்கள் குறிப்பிட்ட போட்டிகளில் கட்டாயம் பங்கேற்க வேண்டும். காயம் அல்லது மருத்துவ சான்று இல்லாமல் விலகினால் அபராதம் விதிக்கப்படும்.
இதற்கிடையில், டென்மார்க் வீராங்கனை மியா ப்ளிக்ஃபெல்ட், போட்டி நடைபெறும் இடத்தில் சுகாதாரம் மோசமாக உள்ளது என கூறினார்.
“மைதானத்தில் பறவைகள் பறந்து, அழுக்கு ஏற்படுகிறது. இது வீரர்களின் உடல்நலத்திற்கு நல்லதல்ல” என்று அவர் தெரிவித்தார்.
ஆனால் இதை மறுத்த இந்திய பேட்மிண்டன் சங்கத்தின் (BAI) செயலாளர் சஞ்சய் மிஷ்ரா, “மியா கூறியது பயிற்சி மைதானம் பற்றியே. முக்கிய போட்டி அரங்கம் சுத்தமாகவும், பராமரிப்புடன் உள்ளது” என்று விளக்கம் அளித்தார்.
இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்த முன்னாள் உலக நம்பர் 1 வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த். “இப்படிப்பட்ட சிக்கல்கள் இந்தியாவில் மட்டும் இல்லை. வெளிநாடுகளிலும் இதுபோன்ற பிரச்சனைகள் நடந்துள்ளன” என்றார்.
இதற்கிடையில், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட தகவல்படி, புதன்கிழமை டெல்லியின் காற்று தர குறியீடு (AQI) 354 ஆக இருந்தது. இது ‘மிக மோசமான’ நிலை என்று கூறப்படுகிறது.
இந்த சூழலில், டெல்லி சர்வதேச பேட்மிண்டன் போட்டி நடத்த ஏற்ற இடமா என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது.
[youtube-feed feed=1]