சென்னை: தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும், தூய்மை பணியாளர்கள் மாநகராட்சியின் கீழ் பணி அமர்த்தப்படுவார்கள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர் சேகர்பாபு உறுதி அளித்த நிலையில், மகிழ்ச்சி அடைந்த தூய்மை பணியாளர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்து உள்ளனர்.

சென்னை மாநகராட்சியின் இரண்டு மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதை எதிா்த்து கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி முதல் சென்னை மாநகராட்சியால் பணி மறுக்கப்பட்ட 1,953 தூய்மைப் பணியாளர்கள் பல்வேறு வகையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், அவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப்பவதாக அறிவித்தனர். இதற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டு, அனுமதி பெற்றனர். அதன்படி, அம்பத்தூரில் 4 பேர் உண்ணாவிரதம் போராட்டம் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, கடந்த ஆண்டு (2025) நவம்பர் 15ந்தேதி முதல் தூய்மை பணியாளர்களான ஜெனோவா, பாரதி, கீதா மற்றும் வசந்தி ஆகிய நான்கு பெண்களும் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இவர்களின் போராட்டம் 57 நாட்களாக தொடர்ந்து வந்த நிலையில், விரைவில் நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தூய்மை பணியாளர்களை நேற்று (2026 ஜனவரி 12ந்தேதி) அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா ஆகியோர் நேரில் சந்தித்து உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டார்.
அதுமட்டுமின்றி தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் எனவும் அவர் வாக்குறுதி அளித்தனர். இந்த சந்திப்பின்போது, உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் பாரதி மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் உடன் இருந்தனர். அமைச்சர் சேகர்பாபு வாக்குறுதி அளித்ததால் மகிழ்ச்சி அடைந்த தூய்மை பணியாளர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், சென்னை மாநகராட்சியின், “5 மற்றும் 6 மண்டலத்தை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டத்தை ஈடுபட்டு வந்தனர். சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடாது என்பதற்காக கண்ணியத்துடன் நடந்து கொண்ட தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு களை தெரிவித்துக் கொள்கிறேன்.
போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முயற்சி மேற்கொண்ட விசிக தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், முன்னாள் செயலாளர் முத்தரசன், உழைப்பர் உரிமையை இயக்க தலைவர் பாரதி உள்ளிட்ட நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நகராட்சி நிர்வாக அமைச்சர் கே.என். நேரு, மேயர், துணை மேயர் ஆகியோருக்கும் நன்றி.
பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று இந்த மாதம் இறுதிக்குள் தூய்மை பணியாளர்களை மீண்டும் சென்னை மாநகராட்சியின் கீழ் பணி அமர்த்தப்படுவார்கள் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். வருகின்ற பொங்கல் தூய்மை பணியாளர்களுக்கு மகிழ்ச்சியான பொங்கலாக இருக்கும்.
அவர்களின் முக்கிய கோரிக்கையான, ஊதியம் தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அரசு பரிசீலனை செய்து முடிவு எடுக்கும். ஊழியர்களின் நலனுக்காக உழைப்போர் உரிமை இயக்கத்தினரும் எதையும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். நாங்களும் இரு பக்கமும் தட்டிக் கொடுத்து எந்த உதவிகள் எல்லாம் செய்ய முடியுமோ, அதை எல்லாம் செய்வோம். தனியாருக்கு தூய்மை பணிகள் வழங்கப்பட்டது தொடர்பாக நீதிமன்ற இறுதி தீர்ப்புக்கு பிறகு பரிசீலனை செய்து நடைமுறைப்படுத்துவோம்” என்று தெரிவித்தார்.
[youtube-feed feed=1]