சென்னை: சென்னையில் பன்னாட்டு புத்தகத் திருவிழா வரும் 16ந்தேதி தொடங்குகிறது. இந்த புத்தக திருவிழாவில்  102 நாடுகளில் இருந்து 1,500- க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை கலைவானர் அரங்கில் பன்னாட்டு புத்தகத் திருவிழா  ஜனவரி மாதம் 16 முதல் 18ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

சென்னையில் புத்தக கண்காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில், ஜனவரி 8ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த புத்தக கண்காட்சி ஜனவரி 21 வரை 14 நாட்கள் நடைபெறுகிறது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், சென்னை கலைவானர் அரங்கில் பன்னாட்டு புத்தகத் திருவிழா  நடைபெற உள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  சென்னையில் ‘நாகரீகங்களுக்கு இடையிலான ஒரு உரையாடல்’ என்ற தலைப்பில் பன்னாட்டு புத்தகத் திருவிழா நடக்கவுள்ளது. இதில் 102 நாடுகள் பங்கேற்பதால் 1,500-க்கும் மேற்பட்ட புத்தக உரிமை ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே கடந்த 3 ஆண்டுகளில் நடைபெற்றதை விட இந்த முறை பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா 2026 குறித்து ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், பள்ளிக்கல்வித்துறை செயலாளருமான சந்திரமோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ”சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா 2026 வெறும் புத்தகத் திருவிழா மட்டுமல்லாமல், இது நாகரீகங்களுக்கு இடையிலான ஒரு உரையாடலாக இருக்கும். ஜனவரி மாதம் 16 முதல் 18ஆம் தேதி வரையில் சென்னை கலைவானர் அரங்கில் நடைபெறுகிறது.

இலக்கியமே நாகரிகங்களுக்கு இடையே பரஸ்பர புரிதலை ஏற்படுத்துவதற்கான உறுதியான வழி என்பதை சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா 2026 நிரூபிக்கும். 102-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பதிப்பாளர்கள் மற்றும் இலக்கிய முகவர்கள் தங்கள் பங்கேற்பை உறுதி செய்துள்ளனர். தமிழ் நாட்டைச் சேர்ந்த 90 பதிப்பாளர்கள் உள்நாட்டுப் பங்கேற்பில் முன்னிலை வகிக்கின்றனர். கேரளா, டெல்லி, குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மேற்கு வங்கம், தெலங்கானா ஆகிய 8 மாநிலங்களில் இருந்து 42 பதிப்பாளர்கள் பங்கேற்கின்றனர். தமிழ்நாடு அரசால் பிரத்யேகமாக பயிற்சி அளிக்கப்பட்ட 28 இலக்கிய முகவர்கள் இதில் இடம்பெறுகின்றனர்.

சென்னை பன்னாட்டு புத்தகக் கண்காட்சியில் பெல்லோஷிப் திட்டத்தின் மூலம் 2023 ஆம் ஆண்டில் 24 நாடுகளிலிருந்தும், 2024 ஆம் ஆண்டில் 40 நாடுகளிலிருந்தும் மற்றும் 2025 ஆம் ஆண்டில் 64 நாடுகளிலிருந்தும் பன்னாட்டு பதிப்பாளர்கள் பங்கேற்றனர். இந்த ஆண்டு, சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழாவின் 4 வது பதிப்பில், 113 நாடுகளைச் சேர்ந்த 318 பங்கேற்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவர்களில், 113 நாடுகளைச் சேர்ந்த 130 பங்கேற்பாளர்களுக்கு பயணச் செலவு, தங்குமிடம் மற்றும் விருந்தோம்பல் ஆகியவற்றை உள்ளடக்கிய ‘Gold Fellowship’ வழங்கப்பட்டுள்ளது. மேலும், 50 பங்கேற்பாளர்களுக்கு தங்குமிடம் மற்றும் விருந்தோம்பல் வசதியுடன் கூடிய ‘Silver Fellowship’ வழங்கப்பட்டுள்ளது”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]