டெல்லி: 2026 டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் முதன்முறையாக தமிழ்நாட்டு நாய் இனங்கள் உள்பட விலங்குகள் படைப்பிரிவு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடப்பு ஆண்டு குடியரசு தின விழாவில், முதன்முறையாக, விலங்குகள் படைப்பிரிவு சேர்க்கப்பட உள்ளது. இந்த படைப்பிரிவில் இரட்டைத்திமில் ஒட்டகங்கள், மலை ஏறும் திறன் கொண்ட 4 குதிரைகள், தற்போது பணியில் உள்ள 16 நாய்கள் மற்றும் 4 ராப்டர் பறவைகள் போன்றவை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு வலிமை என்பது இயந்திரங்களாலும் வீரர்களாலும் மட்டும் கட்டமைக்கப்படவில்லை என்பதை அது ஒரு நெகிழ்ச்சியான நினைவூட்டலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய நாட்டின் ஒற்றுமை, சமத்துவம் மற்றும் கலாசார பாரம்பரிய செறிவை கவுரவிக்கும் வகையில் நாட்டின் 77-வது குடியரசு தினம் வருகிற 26ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, டெல்லியில் உள்ள கடமை பாதையில் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்படும். ராணுவம், கடற்படை மற்றும் விமான படை என முப்படைகளின் அணிவகுப்பு, அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு ஆகியவையும் அப்போது நடைபெறும். இதேபோன்று, பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகள், பல்வேறு துறைகளை சேர்ந்த அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பும் இடம்பெறும்.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தையொட்டி டெல்லியில் உள்ள ‘கடமைப்பாதை’யில் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெறுவது வழக்கம். இந்த ஊர்வலத்தில் ராணுவத்தின் மூன்றுபடை வீரர்கள், தேசிய மாணவர் படையினர், போலீஸ் படையினர், பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் பங்கேற்கின்றன. வீரர்களின் சாகச நிகழ்ச்சிகள், குறிப்பாக வான்வழி சாகசங்கள் மிகவும் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தியும் பங்கேற்கிறது.
குடியரசு தின விழாவையொட்டி, ராணுவ வீரர்கள் உள்ளிட்ட இந்திய ஆயுத படைகள் டெல்லி கடமை பாதையில் கடும் குளிருக்கு மத்தியில், குடியரசு தின அணிவகுப்புக்கான ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியில் கடந்த டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து பனிப்பொழிவு அதிகரித்து காணப்படுகிறது. பனிமூட்டமும் அதிகரித்து காணப்படுகிறது.
இந்த ஆண்டு புதுமையாக, விலங்குகள் படைப்பிரிவு சேர்க்கப்பட உள்ளது. இந்த படைப்பிரிவில் இரட்டைத்திமில் ஒட்டகங்கள், மலை ஏறும் திறன் கொண்ட 4 குதிரைகள், தற்போது பணியில் உள்ள 16 நாய்கள் மற்றும் 4 ராப்டர் பறவைகள் போன்றவை இடம்பெறுகின்றன. இரட்டைத்திமில் ஒட்டகங்கள், மலையேற்ற குதிரைகள் இமயமலைப் பகுதிகளில் கடும் குளிரிலும் பாரங்களை சுமந்து பயணம் செய்யும் திறன் கொண்டவை ஆகும். அந்த ஒட்டகங்கள் 250 கிலோ வரை, குதிரைகள் 50 முதல் 60 கிலோ வரை எடையை எடுத்துச் செல்லும்.

தமிழ்நாட்டு நாய் இனங்கள்:
மேலும், ராப்டர் பறவைகள் எதிரிகளை கண்காணிக்கும் திறன் கொண்டவை. 16 நாய்களில் சிப்பிப்பாறை, கோம்பை, ராஜபாளையம் போன்ற தமிழ்நாட்டு நாய் இனங்களும் இடம்பெற்றிருப்பது சிறப்பமானது. இந்த விலங்குகள் படைப்பிரிவை இரட்டைத்திமில் ஒட்டகங்கள் தலைமை தாங்கி நடத்திச் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
[youtube-feed feed=1]