சென்னை: சென்னை அருகே பூந்தமல்லியில் மின்சாரப் பேருந்து பணிமனையை தொடங்கி வைத்து மின்சார பேருந்து சேவையையும்  துணைமுதல்வர்  உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த பணிமனை  3.53 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கவும், சென்னையை உலகின் முக்கியமான நகரமாக உருவாக்கவும் அனைத்து துறைகளின் சார்பாக பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றார்.

போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதோடு, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புதிய பேருந்து முனையங்கள் அமைத்தல், பேருந்து நிலையங்களை பயணிகள், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தேவையான அனைத்து உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளோடு மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றார்.

அதனடிப்படையில் சென்னை பெருநகர கூட்டாண்மை திட்டத்தின் கீழ், நிலையான நகர்ப்புற சேவைகள் திட்டத்தின் அடிப்படையில் (CCP-SUSP), உலக வங்கி மற்றும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் (AIIB) பங்களிப்புடன், சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், 625 தாழ்தள மின்சாரப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. வியாசர்பாடி, பெரும்பாக்கம், பூவிருந்தவல்லி, மத்திய பணிமனை மற்றும் தண்டையார்பேட்டை-1 உள்ளிட்ட ஐந்து பணிமனைகள் மூலம் 697.00 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் மொத்த விலை ஒப்பந்தத்தின் அடிப்படையில் தாழ்தள மின்சாரப் பேருந்துகளை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

முதற்கட்டமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், 30.6.2025 அன்று வியாசர்பாடி மின்சாரப் பேருந்து பணிமனையை, திறந்து வைத்து, 120 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகளின் இயக்கத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடி அசைத்து, தொடங்கி வைத்தார்.

இரண்டாம் கட்டமாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், 11.8.2025 அன்று பெரும்பாக்கம் மின்சாரப் பேருந்து பணிமனையைத் திறந்து வைத்து, 135 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகளின் இயக்கத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடி அசைத்து, தொடங்கி வைத்தார்.

மூன்றாம் கட்டமாக துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் இன்று (19.12.2025) மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் 43.53 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட பூவிருந்தவல்லி மின்சாரப் பேருந்து பணிமனையை திறந்து வைத்தார்.

மீதமுள்ள இரண்டு பணிமனைகளிலும், உரிய கட்டட உட்கட்டமைப்பு (Civil Infrastructure) மற்றும் மின்னேற்றம் (Charger) செய்வதற்குரிய கட்டுமானப் பணிகள் மற்றும் புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகள் இயக்குவதற்கு தேவையான பராமரிப்பு கூடம், அலுவலக நிர்வாகக் கட்டடம், பணியாளர்கள் ஓய்வறை ஆகியவை புதுப்பிக்கப்பட்டும், புதிய மின்மாற்றிகள் பொருத்துதல் மற்றும் தீயணைக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் நிறுவுதல் போன்ற அனைத்துப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

புதிய தாழ்தள மின்சார குளிர்சாதனப் பேருந்துகள் மற்றும் புதிய தாழ்தள பேருந்துகளில் உள்ள சிறப்பு அம்சங்கள்:

உலகின் முக்கியமான நகரமாக உருவாகி வரும் சென்னையில் பொதுமக்கள் அனைவரும் பொதுப்போக்குவரத்து வாகனங்களை பயன்படுத்தி போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகள், தாழ்தள மின்சாரப் குளிர்சாதனப் பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

தரையில் இருந்து 40 செ.மீட்டர் (400 மி.மீ) உயரம் கொண்ட தாழ்தள மின்சார பேருந்தின் உயரத்தை, தேவையான நேரத்தில் பேருந்து ஓட்டுநர் 25 செ.மீட்டர் (250 மி.மீ) உயரம் வரை குறைத்து மாற்றுத்திறனாளிகள், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்கள் பேருந்துகளில் எளிதாக ஏறி, இறங்க வசதி செய்யப்பட்டுள்ளது.

பயணிகள் எளிதாக அமரும் வகையில் இருக்கைகள் ஒரே சமதளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தாழ்தள மின்சாரப் பேருந்துகளில் இருக்கைகளின் பக்கவாட்டு இடைவெளி 65 செ.மீட்டருக்கு (650 மி.மீ.) பதிலாக 70 செ.மீட்டர் (700 மி.மீ) அகலம் உள்ளதால், நின்று செல்லும் பயணிகளுக்கு வசதியாக இருக்கும்.

மேலும், மகளிருக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்திடும் வகையில், தாழ்தள மின்சாரப் பேருந்துகளில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. புதிய தாழ்தள மின்சார குளிர்சாதனப் பேருந்துகளில் விருப்பம் போல் பயணம் செய்ய மாதாந்திர பயணச் சீட்டு ரூ.2,000/- அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பூவிருந்தவல்லியிலிருந்து – அண்ணா சதுக்கம் செல்லும் 25 எண் வழித்தடத்தில் 10 டீலக்ஸ், 10 ஏ.சி பேருந்துகள், பூவிருந்தவல்லியிலிருந்து – பிராட்வே செல்லும் 54 எண் வழித்தடத்தில் 10 ஏ.சி பேருந்துகள், பூவிருந்தவல்லியிலிருந்து – தியாகராயநகர் செல்லும் 154 எண் வழித்தடத்தில் 10 டீலக்ஸ் பேருந்துகள், பூவிருந்தவல்லியிலிருந்து – செங்குன்றம் செல்லும் 62 எண் வழித்தடத்தில் 15 டீலக்ஸ் பேருந்துகள், பூவிருந்தவல்லியிலிருந்து கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் (KCBT) செல்லும் 66 P வழித்தடத்தில் 15 டீலக்ஸ் பேருந்துகள்,

பூவிருந்தவல்லியிலிருந்து – திருவான்மியூர் செல்லும் 49 X வழித்தடத்தில் 5 டீலக்ஸ், 5 ஏ.சி பேருந்துகள், பூவிருந்தவல்லியிலிருந்து – பிராட்வே செல்லும் 101CT வழித்தடத்தில் 20 ஏ.சி பேருந்துகள், பிராட்வேயிலிருந்து – திருமழிசை செல்லும் 101X வழித்தடத்தில் 5 டீலக்ஸ் பேருந்துகள், பூவிருந்தவல்லியிலிருந்து – திருவள்ளூர் செல்லும் 597A வழித்தடத்தில் 10 டீலக்ஸ் பேருந்துகள்,

பூவிருந்தவல்லியிலிருந்து -சுங்குவார்சத்திரம் செல்லும் 578 எண் வழித்தடத்தில் 10 டீலக்ஸ் பேருந்துகள் என 214.50 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 45 புதிய தாழ்தள மின்சார குளிர்சாதனப் பேருந்துகள் மற்றும் 80 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகளின் இயக்கத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

[youtube-feed feed=1]