சென்னை: டிட்வா புயல் வலுவிழந்ததால், சென்னையில் மழை இருக்காது என கூறிய நிலையில், நேற்று முதலே மழை பெய்து வருகிறது. இதனால், பள்ளி குழந்தைகள், அலுவலகங்கள் செல்பவர்கள் கடுமையாக அவதிப்பட்டனர். இந்த நிலையில் மேலும் இரண்டு நாள் மழை நீடிக்கும் என வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
சென்னை முழுவதும் இப்போது நல்ல மழை பெய்து வருகிறது. மேகங்கள் நீடித்து நகரத்தின் ஆழத்திற்குள் நகர்ந்துள்ளன. இந்த அற்புதத்தை அனுபவியுங்கள். மேகமூட்டம் மீண்டும் டிட்வா வை சொன்னது அனுபவத்திற்கு வரும் என குறிப்பிட்டுள்ளது.

சாதாரண மழைக்கே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கும் திமுக அரசு, சென்னையில் கடந்த இரு நாட்களாக பெய்து வரும் மழையால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழலில் இன்று பள்ளிகளை திறந்து வைத்திருப்பது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அதிகாலை முதலே பள்ளிகளுக்கு விடுமுறையா ஏராளமான பெற்றோர் தங்களது பள்ளி ஆசிரியர்களிடம் விசாரித்த நிலையில், சுமார் 60 சதவிகிதம் குழந்தைகள் அரசு பள்ளிகளுக்கு வரவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், வங்கடலில் நிலைகொண்டுள்ள வலுவிழந்த டிட்வா புயல் சின்னம் காரணமாக அடுத்த 2 நாள்களுக்கு சென்னை கடற்கரை அருகே நிலைகொள்ளும் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

டிட்வா புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக – புதுச்சேரி கடலோரப்பகுதிகளில் நிலவி வருகிறது. தற்போது சென்னைக்கு தெற்கு – தென்கிழக்கே 50 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நிலை கொண்டிருக்கும் டிட்வா காரணமாக பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. தரைக்காற்றின் வேகமும் அதிகரித்துள்ளது.
சென்னையை நெருங்குவதற்கு முன்னதாகவே டிட்வா புயல் வலுவிழந்ததால் நேற்று சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட பலத்த மழை எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. இந்த நிலையில், நேற்று இரவு முதல், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதிகாலை நேரத்தில் லாசா பெய்து வந்த மழை தற்போது (பகல் 11 மணி அளவில்) தீவிரமடைந்து, தொடர் மழையாக பெய்து வருகின்றது.
இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் எ பிரதீப் ஜான் வெளியிட்டிருக்கும் கணிப்பில், “சென்னை எதிர்பார்த்த மழை அடுத்த 2 நாள்களில் வலுவிழந்த டிட்வா புயல் கொடுக்கும். புதன்கிழமை வரை காற்றழுத்தப் பகுதியாக சென்னை கடற்கரை அருகே நிலை கொள்ளும். எண்ணூரில் மட்டும் கடந்த இரண்டு நாள்களில் 100 மிமீ மழை பதிவாகியுள்ளது. நாளை பல இடங்களில் 100 மிமீ மழையை கடக்கும். இரண்டு நேரங்களில் மழையின் தீவிரத்தன்மை சில சமயங்களில் அதிகரிக்கக் கூடும்” எனத் தெரிவித்துள்ளார்.
அதேபோல், நீலகிரி, கோவை, ஈரோடு, டெல்டா, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று பகல் 1 மணி வரை சென்னை 5 மாவட்டங்களில் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுவரை, இயல்பை விட வடகிழக்கு பருவமழை 8 சதவீதம் கூடுதலாக பதிவாகயுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டிட்வா புயலானது வங்கக் கடலில் சென்னையிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டிருக்கும் நிலையில், தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில், ஈக்காட்டுக்தாங்கல், கிண்டி, வேளச்சேரி, எழும்பூர், அண்ணாநகர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் இயல்பாக அக். 1 முதல் நவ. 30 வரை 35 செ.மீ. மழை பெய்யும். இந்த ஆண்டு இயல்பவை 35 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சென்னை உள்பட 5 மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மழை பெய்யும் என்றும், தமிழக கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மிதமான மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.