ஈரோடு: செங்கோட்டையன் அதிமுகவில் தொடர லாயக்கற்றவர் , அவர் ஒரு  துரோகி,  எம்ஜிஆர்,ஜெயலலிதா படங்களை புறக்கணித்தவர், அவர் கட்சிக்கு கெடு விதித்ததுடன் அதிமுகவுக்கு எதிராக செயல்பட்டதால், அவரை கட்சியின்  அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

“கோபிசெட்டிபாளையத்தில் உள்ள ஒருவரைப் பற்றி மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என பேசிய எடப்பாடி,  செங்கோட்டையன் வீடியோவை போட்டுக் காட்டி ஆவேசமாக பேசியதுடன்,   3 ஆண்டுகளாக கட்சிக்கு துரோகம் செய்ததாக தெரிவித்ததுடன்,  தேர்தலின்போது வாக்கு கேட்டு வந்தாரே, ராஜினாமா செய்வது குறித்து மக்களிடம் கேட்டாரா? மக்கள் கவலைப்பட வேண்டாம். எடப்பாடி தொகுதியைவிட கோபிசெட்டிபாளையம் தொகுதியை அதிமுக ஆட்சியில் உயர்த்துவோம். அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக அதிமுக அரசைப் பாராட்டி விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. அதில், எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இடம் பெறவில்லை என்று செங்கோட்டையன் அதைப் புறக்கணித்தார். இன்று யார் புகைப்படத்தை வைத்துக்கொண்டு தவெக-வில் இணைந்துள்ளார் என கடுமையாக சாடினார்.

அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடந்த ஜூலை 7 ஆம் தேதி, ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற எழுச்சி பயணத்தை மேட்டுப்பாளையத்தில் தொடங்கினார். 5 கட்டங்களாக நடைபெற்ற எழுச்சிப்பயணத்தில் 174 சட்டமன்ற தொகுதிகளில் மக்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி  நேற்று  175 ஆவது தொகுதியாக ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம் வந்தடைந்தார்.

முன்னதாக,  செங்கோட்டையன், தவெகவில் இணைந்த நிலையில், அவரது தொகுதியில் மாஸ் காட்டுவதற்காக, கோபிசெட்டிப்பாளையத்தில் எழுச்சி பயணத்தை மேற்கொண்ட எடப்பாடி பழனிச்சாமிக்கு பெரும் கூட்டம் கூடியது.  நல்லகவுண்டன்பாளையம் தனியார் திருமண மண்டபம் திடலில் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில்  பேசிய எடப்பாடி பழனிச்சாமி, செங்கோட்டையனை கடுமையாக விமர்சித்தார். அவர் ஒரு துரோகி என்றவர், தொகுதி நிகழ்ச்சியில் எம்ஜிஆர் ஜெயலலிதா படத்தை புறக்கணித்தவர், தற்போது மக்களை ஏமாற்ற தவெகவில் இணைந்த நிலையிலும் எம்ஜிஆர் ஜெயலலிதா புகைப்படத்தை வைத்துள்ளார் என கடுமையாக விமர்சனம் செய்தார்.

நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி,  கோபி நகரமே குலுங்குகின்ற அளவுக்கு மக்கள் கூட்டத்திற்கிடையே பேசுகிறேன். உங்கள் ஆரவாரத்தில் அடுத்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றுவிட்டார் என்பது உறுதி. யார் யாரோ கண்ட கனவை நொறுக்கிவிட்டீர்கள். அடுத்த ஆண்டு நடக்கும் தேர்தலில் அதிமுக கூட்டணி பெரும்பான்மை இடத்தில் வெல்லும். அதிலும் கோபி தொகுதியில் பெருவாரியான வித்தியாசத்தில் வென்று அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்.

இந்த தொகுதியில் ஒருவர் எம்.எல்.ஏ.வாக இருந்தார். ஓட்டு வாங்குவதற்கு உங்களிடம் வந்தார். ராஜினாமா செய்வதற்கு உங்களிடம் கேட்டாரா? இனி, அதைப்பற்றி கவலைப்படாதீர்கள். அதிமுக ஆட்சியில் கோபி தொகுதி எடப்பாடி தொகுதிக்கு மேல் வளர்ச்சியடைந்து, தமிழகத்தில் முதல் தொகுதியாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இது, விவசாயிகள் நிறைந்த தொகுதி. விவசாயிகள் வளம் பெற, விவசாய தொழிலாளர்களின் 50 ஆண்டு கால போராட்டத்துக்கு தீர்வு காண, கனவு திட்டமான அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை நிறைவேற்றிக்கொடுத்தேன்.

கோபிசெட்டிபாளையத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் செங்கோட்டையன் கலந்துகொண்ட மாணவர்களுக்கான சைக்கிள் வழங்கும் விழாவில் எம்ஜிஆர் படமும் இல்லை. ஜெயலலிதா படமும் இல்லை. அதற்கு அவர் என்ன சொல்லப் போகிறார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றினோம்.ஆனால், அதையும் மீறி நீக்கப்பட்டவர்களுடன் சேர்ந்துகொண்டு அவர்களை கட்சியில் சேர்க்க வேண்டும் என தலைமைக்கு 10 நாள் கெடு விடுத்தார்.

அதனால்தான், அவரது பொறுப்பை எடுத்தோம். அப்போதாவது திருந்துவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அவர் திருந்தியபாடில்லை. சீனியர் என்பதால் கண்டுகொள்ளாமல் இருந்தோம். உச்சமாக தேவர் ஜெயந்தியன்று கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ்ஸை சந்தித்தார்.

அதனால்தான் தலைமைக்கழக நிர்வாகிகளுடன் பேசி, செங்கோட்டையனை நீக்கினோம். கடந்த மூன்று ஆண்டுளாக கட்சிக்குள் இருந்து கொண்டு துரோகம் செய்தவர் செங்கோட்டையன்.

அவரைப்போல சுயநலவாதி நான் அல்ல. 2026 தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று முதன் முதலில் கோபிசெட்டிபாளையத்தில்தான் வெற்றி விழா கொண்டாடப்படும். 2026 தேர்தலில் கோபிசெட்டி பாளையத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெறும். தூய்மையான ஆட்சி கொடுப்போம் என்று கூறுகிறார்.

அப்படியென்றால் எம்ஜிஆர், ஜெயலலிதா தூய்மையான நல்லாட்சி கொடுக்கவில்லையா? துண்டை மாற்றினால் கருத்தை மாற்றிக் கொள்வாரா செங்கோட்டையன். அவர் மட்டுமல்ல எந்தக் கொம்பனாலும் அதிமுக-வை வீழ்த்த முடியாது. அதிமுக தொண்டர்களை நம்பியுள்ள கட்சி. நான் இல்லையென்றால் வேறுயாராவது பொதுச் செயலாளராக வருவார்கள். துரோகிகளுக்கு அதிமுக-வில் இடமில்லை.

கோபி தொகுதியில் மட்டும் 30% பேர் பயன் பெறுகிறார்கள். ரூ.1652 கோடி முழுக்க முழுக்க மாநில நிதியில் இருந்து செயல்படுத்தினேன். யார் உதவியையும் கேட்கவில்லை. மத்திய அரசிடம் ஸ்டாலினை போல் கேட்கவில்லை. இது, விவசாயிகளின் பிரச்னை என்பதால் நானே நேரடியாக அவிநாசியில் அடிக்கல் நாட்டினேன். திட்டம் துரிதமாக நடைபெற்றது.

கொரோனா வந்ததால், செயல்படுத்த முடியவில்லை. இல்லையென்றால் அதிமுக ஆட்சியிலேயே முடிந்திருக்கும். 80% பணிகள் என் நேரடி பார்வையில், என் கண்காணிப்பில் நடந்தது. மீதம் இருந்த 20% பணிகளை 3 ஆண்டு காலம் கிடப்பில் போட்டது ஸ்டாலின் ஆட்சி. அவருக்கு விவசாயிகள் பற்றி கவலையில்லை. முடக்க வேண்டும் என்று எண்ணியே ஆமை வேகத்தில் பணியாற்றினார்கள். முழுமையாக நிறைவேற்றாமலே முதல்வர் திறந்துவைத்தார்.

நமது குழந்தைக்கு ஸ்டாலின் பெயர் வைத்தார். பல ஆண்டு கால பிரச்னைக்குத் தீர்வு கண்ட அரசு அதிமுக அரசு. இரண்டு நாட்களுக்கு முன்பு இங்கு ஸ்டாலின் வந்தார். என்ன திட்டம் கொண்டு வந்தார்? நாங்கள் ஏராளமான திட்டங்கள் கொடுத்தோம். கலை கல்லூரியை கொடுத்தோம். கோபி முதல் ஈரோடு நான்கு வழிச்சாலை, கோபி – சத்தியமங்கலம் சாலை, கோபி – மேட்டுப்பாளையம் நான்கு வழிச்சாலை அமைக்க மத்திய அரசிடம் கேட்டோம். அதை முடக்கி வைத்திருக்கிறது திமுக அரசு.

நம்பியூரில் அரசு கலைக்கல்லூரி கொடுத்தோம். கால்வாய்களை கான்கிரீட் கால்வாயாக மாற்றினேன். பவானிசாகர் முதல் பவானி வரை நான்கு வழி சாலைக்கு அனுமதி பெற்று வைத்திருந்தோம். அதையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை. கையாலாகாத அரசின் பொம்மை முதல்வர் பேசிவிட்டுச் சென்றார். அவரால், இந்த மாவட்டம், தொகுதிக்கு என்ன பயன் கிடைத்தது என்று எண்ணி பாருங்கள்.

நான் விவசாயிகளின் பச்சை துரோகி என்று ஸ்டாலின் பேசுகிறார். ஸ்டாலின் அவர்களே விவசாயம் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? நான் வருகிறேன், நீங்களும் வாருங்கள். பயிர்களை உங்கள் முன் வைக்கிறேன். அது என்ன பயிர்? என சொல்லிவிடுங்கள் பார்க்கலாம். என்ன பயிர் என்றும் தெரியாது, தானியமும் தெரியாது. அப்படிப்பட்டவர் என்னை பச்சைத் துரோகி என்கிறார். நான் இன்றைக்கும் விவசாயம் செய்கிறேன்.

நமக்கு நாமே திட்டத்தில் சேலத்தில் கரும்புத் தோட்டத்தில் கான்கிரீட் சாலை போட்டுச் சென்றவர் ஸ்டாலின். டெல்டாவில் நெல் பயிர்கள் நீரில் மூழ்கின. நான், ஓடோடிச் சென்று பார்வையிட்டேன். மக்கள் பிரச்னை என்றால் முதலில் போகும் கட்சி அதிமுக. முதல்வர் திரைப்படம் பார்க்க செல்கிறார். விவசாயிகளை பார்க்க அவருக்கு நேரமில்லை.

தலைமைச்செயலகத்தில் அழுகிப்போன பயிர்களை டிரேயில் வைத்து காட்டுகிறார்கள். இவரா மக்கள் முதல்வர்? இந்தியாவில் இப்படிப்பட்ட முதல்வர் யாருமில்லை. எங்காவது, யாராவது டிரேயில் வைத்து பயிரை பார்த்திருக்கிறார்களா? விவசாயிகளை பார்க்க மனமில்லாத முதல்வர். இவரா மக்களுக்கு நன்மை செய்வார்? ஒரே ஆண்டில் இரண்டு முறை நிவாரணம் அளித்த அரசு அதிமுக அரசு. இயற்கை சீற்றம், பயிர் காப்பீடு திட்டத்தில் இந்தியாவிலேயே அதிக இழப்பீடு பெற்றுக்கொடுத்தோம். நான் பதவி ஏற்கும்போது கடும் வறட்சி. அவர்களுக்கு வறட்சி நிவாரணம் கொடுத்த ஒரே அரசு அதிமுக அரசு.

குடிமராமத்துத் திட்டம் மூலம் ஏரி, குளம் தூர்வாரினோம். நீர் தேக்கினோம். இப்படி ஒரு சாதனை செய்தாரா? சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. சிறுமி முதல் பாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பில்லை. கொங்கு மண்டலத்தில் முதியோர்களிடம் கொள்ளை அடிக்கிறார்கள் மற்றும் கொலை செய்கிறார்கள். இப்படிப்பட்ட அவல ஆட்சி தேவையா? தமிழகத்தில் நான்கு முதல்வர்கள். அதாவது ஸ்டாலின், உதயநிதி, சபரீசன், துர்கா என நான்கு பேர் ஆட்டிப்படைத்து வருகின்றனர். ஒரு டிஜிபியை நியமிக்க முடியாத அரசு இது. எப்படி சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவார்கள்? நிரந்தர டிஜிபி இருந்தால்தான் காவலர்களை சரியான முறையில் நடத்துவார்கள். பலமுறை சொல்லியும் இதுவரையிலும் டிஜிபி நியமிக்கவில்லை.

பணி ஓய்வு பெறுவதற்கு 3 மாதம் முன்பே மத்திய யுபிஎஸ்சிக்கு பட்டியல் அனுப்ப வேண்டும். அதிலிருந்து 3 பேர் அனுப்புவார்கள். அதிலிருந்து ஒருவரை நியமிக்க வேண்டும். இவர்களுக்கு தேவையானவர் நபர் அதில் இடம்பெறவில்லை என்பதால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது. போதைப் பொருள் நிறைய கிடைக்கிறது. கொலை, கொள்ளை, பாலியல் சீண்டல் நடக்காத நாளே இல்லை. தினமும் கொலை நிலவரம் பார்க்கும் நிலை வந்துவிட்டது. 6999 சிறுமிகள் பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ரூ.104 கோடி நிவாரணம் கொடுத்தோம் என்று சமூக நலத்துறை அமைச்சர் பேசுகிறார். இது கேவலமாக இல்லையா?

பாலியல் வன்கொடுமையை தடுத்திருந்தால் நல்ல ஆட்சி. நிவாரணம் கொடுப்பதால் வாழ்க்கை திரும்பி வந்துவிடுமா? இப்படிப்பட்ட மோசமான ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தல் இது. கோபியில் இருக்கும் ஒருவர் பற்றி சொல்லியாக வேண்டும். புள்ளிவிவரம் தெரிந்து கொள்ள வேண்டும். அத்திக்கடவு அவிநாசி திட்ட நிகழ்ச்சியில் நிறைய கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த தொகுதி எம்எல்ஏ பங்கு பெறவில்லை. எதற்கு கலந்து கொள்ளவில்லை? என்று கேட்டதற்கு பேனரில் தலைவர் படம், அம்மா படம் இல்லை என்றார். இப்போது யார் படத்தை வைத்துக்கொண்டு மாற்று கட்சியில் சேர்ந்தீர்கள்? உங்களுக்கு அடையாளம், பதவி கொடுத்தது அதிமுக. இதே கோபியில் பள்ளி நிகழ்ச்சியில் அம்மா படம், தலைவர் படம் இல்லை. விலையில்லா சைக்கிள் கொடுக்கும் நிகழ்ச்சியின் காட்சியை பாருங்கள். (வீடியோ திரையிடப்படுகிறது)

பல்வேறு கட்சி தலைவர்கள் சேர்ந்து அதிமுக ஆட்சியில் தான் 50 ஆண்டு விவசாயிகள் வேண்டுகோளை நிறைவேற்றினீர்கள் என பாராட்டு விழா நடத்தினார்கள். அங்கு எப்படி நம் தலைவர்கள் படத்தை மட்டும் வைக்க முடியும். வேண்டுமென்றே திட்டமிட்டு கூட்டத்தை புறக்கணித்தவர் தான் முன்னாள் எம்எல்ஏ. இவரா உங்களுக்கு நன்மை செய்வார்? எதிர்க்கட்சிக்காரர் நம்மை மதிக்கிறார். நம் கட்சியை சேர்ந்தவர் பொதுச்செயலாளர் கூட்டத்தில் கூட கலந்துகொள்ளவில்லை என்றால் அவர் மக்கள் மீது அக்கறை கொண்டவரா? ஒரு மாதம் முன்பாக மனம் திறந்து பேட்டி என்றார். கட்சிக் கட்டுப்பாட்டை மீறி சிலரை சந்தித்தார். நாங்கள் அமைதியாக கண்டுகொள்ளாமல் தான் இருந்தோம். ஆனால் மனம் திறந்து பேசுகிறேன் என்று கோபியில் பேட்டி கொடுத்தார். 10 நாளில் இணைப்பை முன்னெடுக்கவில்லை என்றால் நானே முன்னெடுப்பேன் என்று கெடு விதிக்கிறார்.

இப்படிப்பட்டவரை எப்படி வைத்துக்கொள்ள முடியும்? கழக முன்னோடிகளோடு கலந்து பேசி, அவருடைய கட்சி பொறுப்பை எடுத்தோம். அதன் பிறகு திருந்துவார் என்று பார்த்தோம். திருந்தவில்லை. பிறகு தேவர் நினைவிடம் சென்றார். அதிமுகவில் நீக்கப்பட்டவரோடு, எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. அதற்கு எதிராக நீக்கப்பட்டவர்களோடு செல்கிறார். எனவே மீண்டும் நிர்வாகிகளை அழைத்துப் பேசினோம். அவர் இனி இங்கு தொடர லாயக்கற்றவர் என்பதாலே அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கினோம். ஏதோ எடுத்தோம், கவிழ்த்தோம் என நடவடிக்கை எடுக்கவில்லை. அவர் திட்டமிட்டு கடந்த 2, 3 ஆண்டுகளாக இயக்கத்தில் இருந்து கொண்டே, இயக்கத்துக்கு துரோகம் விளைவித்தார்.

நல்லது செய்தால் நல்லது நடக்கும். கெட்டது செய்தால் கெட்டது மட்டுமே நடக்கும். இந்த இயக்கத்துக்குத் துரோகம் செய்தவர்களை ஆண்டவன் பார்த்துக்கொள்வான். நான் இவரைப்போல சுயநலவாதி அல்ல. எம்ஜிஆர் காலத்தில் இருந்தே சோதனைகள் தான். அவற்றை எல்லாம் வென்று முதல்வரானார். எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் அம்மாவுக்கு சோதனைகள். அவற்றை வென்று அவர் முதல்வரானார். அதுபோல இப்போது வரும் சோதனையை வென்று அதிமுக ஆட்சி அமைக்கும். வரும் 2026 தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் ஆட்சி அமைத்து முதன்முதலாக கோபியில் வெற்றி விழா கொண்டாடுவோம். இது நடக்கும்.

இப்போது மாற்றுக்கட்சிக்கு போயிருக்கிறார். எங்கிருந்தாலும் வாழ்க. சும்மா இருந்தால் சரி. தூய்மையான ஆட்சி கொடுப்பேன் என்கிறார். எம்ஜிஆர் இருக்கும்போது எம்எல்ஏ, அம்மா மற்றும் எனது அமைச்சரவையில் அமைச்சர். அப்போதெல்லாம் தூய்மையான ஆட்சி கொடுக்க வில்லையா? துண்டை மாற்றியதும் கருத்தும் மாறிவிட்டது. எந்தக் கொம்பனாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது. இந்த இபிஎஸ் ஒருவரல்ல. ரெண்டு கோடி தொண்டர் இருக்கிறார். இபிஎஸ் இல்லை என்றால் யார் வேண்டுமானாலும் பொதுச்செயலாளராக வருவார். ஒருவரை மட்டும் நம்பியிருக்கும் கட்சியல்ல.

ஸ்டாலின் எத்தனையோ முறைகள் வீழ்த்த முயற்சித்த சூழ்ச்சிகளை முறியடித்த கட்சி அதிமுக. முதலில் சட்டமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்கும்போது திமுகவினர் எப்படி நடந்து கொண்டனர். சபாநாயகர் டேபிளில் ஏறி டான்ஸ் ஆடினர். நம்பிக்கைக்கோரும் தீர்மானத்தில் நாங்கள் வென்றோம். அப்போதே குடைச்சல் கொடுக்க ஆரம்பித்தனர்.

ஆட்சியை வீழ்த்த முடியவில்லை. ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரியை சேர்த்து அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் 17 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கொண்டு வந்து சிறப்பான சிகிச்சை அளித்தோம். இந்த 4 ஆண்டுகளில் திமுக அரசால் ஒரே ஒரு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூட கொண்டு வர முடியவில்லை. அதற்கெல்லாம் திறமை வேண்டும். இங்கு திறமையற்ற ஒரு முதல்வர் நம்மை ஆள்கிறார்.

அதுமட்டுமில்லாமல் 68 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 21 அரசு பாலிடெக்னிக் கல்லூரி, 4 அரசு பொறியியல் கல்லூரிகள், 7 அரசு சட்டக்கல்லூரிகள், 4 அரசு வேளாண்மைக் கல்லூரிகள், 5 அரசு கால்நடை மருத்துவக் கல்வி ஆராய்ச்சி நிலையங்கள் என்று பல கல்லூரிகளை திறந்து, இந்தியாவிலேயே உயர்கல்வியில் முதன்மை மாநிலம் என்று வரும் 2030ம் ஆண்டில் அடைய வேண்டிய இலக்கை 2019ம் ஆண்டிலேயே அடைந்துவிட்டது தமிழ்நாடு.

தமிழகத்தில் கிராமப்புறங்களில் 3 லட்சத்து 80 ஆயிரம் பேர், அதாவது சுமார் 41% பேர் அரசுப் பள்ளிகளில் படிக்கின்றார்கள். இடஒதுக்கீடு வழங்கும் முன்பு வரை நீட் தேர்வு எழுதிய அரசு பள்ளி மாணவர்களில் வெறும் 9 பேருக்கு தான் மருத்துவக் கல்வியில் இடம் கிடைத்தது. நீட் தேர்வை ஒருபோதும் மாநில அரசால் ஒழிக்க முடியாது என்பதால் ஏழை, எளிய அரசுப் பள்ளி மாணவர்களும் மருத்துவராக வேண்டும் என்ற கனவை நனவாக்க இந்த எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த திட்டம் 7.5% உள் இடஒதுக்கீடு. இந்த 7.5% இடஒதுக்கீடு மூலம் கடந்த அதிமுக ஆட்சியில் 2818 பேர் ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் இலவசமாக மருத்துவம் படித்து மருத்துவர் ஆகியிருக்கிறார்கள்.

இந்த ஆட்சியில் மின் கட்டணம் 67% உயர்த்திவிட்டனர். ஆண்டுக்கு 5% உயர்வு. தொழிற்சாலை, கடைகளுக்கு பீக் ஹவர் கட்டணம் என்று தனியாக வசூலிக்கின்றார்கள். குடிநீர் வரி, வீட்டு வரி, கடை வரி என எல்லா வரிகளையும் 100% முதல் 150% வரை உயர்த்திவிட்டனர். இது போதாக்குறைக்கு குப்பைக்கும் வரி போட்ட ஒரே அரசு திமுக அரசு தான். ஆண்டுக்கு 6% உயர்வு. விண்ணை முட்டும் அளவுக்கு உணவுப் பொருள்களின் விலை உயர்ந்துவிட்டது. மளிகை கடையில் புள்ளிவிவரங்களை பெற்று பேசுகிறேன். இல்லையெனில் எடப்பாடி பழனிசாமி பஸ்ஸை தூக்கிக்கொண்டு வந்து பொய் சொல்வதாக சொல்வார்கள். சாப்பாட்டு பச்சரிசி ஒரு கிலோ அதிமுக ஆட்சியில் 50 ரூபாய். திமுக ஆட்சியில் 77 ரூபாய். பொன்னி புழுங்கல் அரிசி அதிமுக ஆட்சியில் 50 ரூபாய் திமுக ஆட்சியில் 72 ரூபாய்.

டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் மூலம் மட்டும் 5 ஆண்டுகளில் 22 ஆயிரம் கோடி வசூல் செய்துள்ளார்கள். நகர்ப்புற வளர்ச்சித் துறையில் ரூ.800 கோடி ஊழல் நடைபெற்றுள்ளது. தேர்தலின் போது பாதி அமைச்சர்கள் சிறையில் தான் இருப்பார்கள். நமக்கு தேர்தல் களத்தில் எதிரிகளே இருக்க மாட்டார்கள்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

இந்த கூட்டத்தில் கொண்டயம்பாளையம் இந்திராபுரம் பகுதியைச் சேர்ந்த அர்ஜுனன் (43) என்பவரும் கலந்துகொண்டார். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருவதற்கு முன்பு திடலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்கெஸ்ட்ரா மேடை அருகில் இருந்த அர்ஜுனன் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

மயங்கி விழுந்ததை கண்ட அருகில் இருந்தவர்கள் உடனடியாக தகவல் தெரிவித்ததன் பேரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அர்ஜுனன் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து இறந்தவரின் உடல் கோபி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கேசி. கருப்பண்ணன், முன்னாள் எம்எல்ஏ எஸ்எஸ் ரமணிதரன், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு ஏகே செல்வராஜ் ஆகியோர் கோபி அரசு மருத்துவமனைக்கு சென்று உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.