டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில், SIR குறித்து மக்களவையில் விவாதம் நடத்த வேண்டும் என திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கி உள்ளார். அதுபோல காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்தும் ஒத்தி வைப்பு தீர்மானம் கொடுத்துள்ளார். இதுகுறித்து விவாதிக்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

நாடு முழுவதும் இந்திய தேர்தல் ஆணையம் போலி வாக்காளர்களை நீக்கவும், அகதிகள் சட்டவிரோதமாக பெற்றுள்ள வாக்காளர் உரிமையை நீக்கும் வகையில் தீவிர வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் (SIR) பணிகளை முடுக்கி விட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால், அதையும் மீறி தேர்தல் ஆணையம் தனது பணியை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி வருகிறது.
முதல்கட்டமாக பீகாரில் நடத்தப்பட்ட நிலையில், இரண்டாவது கட்டமாக தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் நவம்பர் 4ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், சத்தீஸ்கர், கோவா, குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் ஆகிய 9 மாநிலங்கள், அந்தமான் நிகோபார் தீவுகள், புதுச்சேரி, லட்சத்தீவு ஆகிய 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் அக்டோபர் 27-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. அதைத்தொடர்ந்து எஸ்ஐஆர் பணிகள் நடைபெற்று வருகின்றன
இதற்கிடையில், தமிழகத்தில் மொத்தம் 6.41 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில், வீடு வீடாகச் சென்று படிவங்களை வழங்க 68,470 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (பிஎல்ஓ) நியமிக்கப்பட்டனர். அரசியல் கட்சிகள் சார்பில் 2.39 லட்சம் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் (பிஎல்ஏ) நிய மிக்கப்பட்டு, பிஎல்ஓக்களுக்கு அவர்கள் உதவி வருகின்றனர். 87 சதவீதம் பதிவேற்றம்: இதுவரை 6.33 கோடி படிவங்கள் (98 சதவீதம்) வாக்காளர்களிடம் வழங்கப்பட்டுள்ளன. அதில் 5.61 கோடி (87 சதவீதம்) வாக்காளர்களிடம் இருந்து படிவங்கள் பூர்த்தி செய்து பெறப்பட்டு, கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையில், தமிழ்நாட்டில் மழை பெய்து வருவதாகவுல் எஸ்ஐஆர் படிவங்களை சமர்ப்பிக்கும் அவகாசத்தை டிசம்பர் 11-ம் தேதி வரை நீட்டித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. டிச.12 முதல் 15-ம் தேதிக்குள் வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படும். டிச.16-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல், பிப்.14-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் நடைபெற்ற திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில், எஸ்ஐஆர் பிரச்சினை குறித்து, வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் குரல் எழுப்புமாறு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்தார்.
இந்த நிலையில், இன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில், தமிழ்நாட்டின் எஸ்ஐஆர் பணிகள் குறித்து விவாதிக்க வேண்டும் என திமுக எம்.பி. கனிமொழி ஒத்தி வைப்பு தீர்மானம் நோட்டீஸ் கொடுத்துள்ளார்.
அதுபோல, SIR காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து அவசர விவாதமாக எடுத்து விவாதிக்க கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த் ஒத்திவைப்பு தீர்மானம் அதில், SIR ஒருதலைப்பட்சமாக நடைபெறுவதால் BLO-க்கள் பலர் மன அழுத்தத்துக்கு ஆளாகி மரணமடைந்துள்ளதால் அதனை விசாரிக்க வேண்டும் எனவும் SIR-ஐ இடைநிறுத்தம் செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்