திருச்சி: திருச்சியில் நேற்று முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில், திருச்சி காவலர் குடியிருப்புக்குள் உள்ள போலீசாரின் வீட்டுக்குள் புகுந்த இளைஞர் ஒரு கும்பலால் வெட்டி படுகொலை சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்த கொலை தொடர்பாக முக்கிய குற்றவாளி உள்பட 4 பேர் கைது செய்ப்பட்டு உள்ளனர்.
முக்கிய குற்றவாளியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்ததாக போலீசார் கூறி உள்ளனர்.

திருச்சி பீமநகரை சேர்ந்தவர் தாமரைச்செல்வன். இவர் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று காலை தாமரைச்செல்வனை பீமநகர் பகுதியில் இரு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, அவரை தொடர்ந்து வந்த 5 பேர் கும்பல் திடீரென வழிமறித்து அரிவாளால் வெட்டினர். இதில் அவர் தன் உயிரை காப்பாற்றிக் கொள்ள அருகே இருந்த காவலர் குடியிருப்புக்குள் புகுந்தார். அங்கு காவலர் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்து மறைந்த தாமரைச்செல்வனை அந்த கும்பல், வீட்டுக்குள்புகுந்த சுற்றி வளைத்து சராமரியாக வெட்டி படுகொலை செய்தனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
பின்னர், அந்த கும்பல் அங்கிருந்து தப்பினர். ஆனால், இளமாறன் என்ற நபரை மட்டும் பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து பாலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இந்த படுகொலை சம்பவத்தை அரங்கேற்றியதற்கு முக்கிய காரணமான லால்குடி வாளாடியை சேர்ந்த சதீஷ்(26), திருவானைக்காவல் கொண்டையம் பேட்டையை சேர்ந்த பிரபாகரன், நந்தகுமார், கணேசன் உள்பட 5 பேர் ஈடுபட்டது தெரியவந்தது. சதீஷூக்கும், தாமரைச்செல்வனுக்கும் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக தான் இந்த கொலை சம்பவம் நடந்தது தெரியவந்தது.

இதையடுத்து மாநகர காவல் ஆணையர் உத்தரவின்படி கொலையாளிகளை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் ஸ்ரீரங்கம் கொள்ளிடக்கரை வாட்டர்டேங்க் அருகே சதீஷ் பதுங்கி இருப்பதாக ஸ்ரீரங்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் ஆய்வாளர் திருவானந்தம் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது போலீசாரை கண்டதும், சதீஷ் அரிவாளால் மாதவராஜ், ஜார்ஜ் வில்லியம் உள்ளிட்ட போலீசாரை வெட்டியதாக கூறப்படுகிறது. உடனே காவல் ஆய்வாளர் திருவானந்தம் துப்பாக்கியால் சதீஷின் வலது முட்டியில் சுட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் அதே இடத்தில் சுருண்டு விழுந்தார். உடனே காயம் அடைந்த போலீஸ்காரர்களை ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
சதீஷை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று தாக்குதலுக்கு உள்ளான ஜார்ஜ் வில்லியம்ஸ், மாதவராஜ் ஆகியோரை சந்தித்தார். மேல் சிகிச்சைக்காக இரண்டு காவலர்களை திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதனால் அரசு தலைமை மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது
. திருச்சியில் முதலமைச்சர் சுற்றுப்பயண நேரத்தில் இந்த படுகொலை சம்பவம் நடைபெற்றதால் அரசியல் வட்டாரங்களில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.