சென்னை: தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் தீவிர சீர்திருத்தம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அதை எதிர்த்து திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கு வரும் 11ந்தேதி விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் கூறி உள்ளது.

இந்தியத்தேர்தல் ஆணையம் நாடு முழுவதும் மேற்கொள்ளத் தயாராகி வரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த (Special Intensive Revision – SIR) நடவடிக்கைக்கு, எதிர்க்கட்சிகளின் ‘இண்டியா’ கூட்டணி கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறது. இது சாதாரண வாக்காளர்களின் உரிமையைப் பறிக்கும் முயற்சி என்று குற்றம் சாட்டி வருகிறது. காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியும் ஆதாரங்களை காட்டி வீடியோ வெளியிட்டு வருகிறார். ஆனால், தேர்தல் ஆணையம் அதை கண்டுகொள்ள மறுத்துவருகிறது.

இந்த நிலையில், தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்டமாக எஸ்.ஐ.ஆர். பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.  இதற்கு திமுக கூட்டணி எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், அதிமுக, பாஜக, பாமக ஆதரவு தெரிவித்துள்ளது. இதையடுத்து, திமுக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடருவது என முடிவு செய்யப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தி.மு.க. சார்பில் ஆலந்தூர் பாரதி தாக்கல் செய்த மனுவில், “எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையானது அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 14 (சமத்துவ உரிமை), 19 (பேச்சு சுதந்திரம்) மற்றும் 21 (வாழ்க்கை உரிமை) மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், வாக்காளர் பதிவு விதிகள் 1960 ஆகியவற்றை மீறுவதாக உள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தி.மு.க. சார்பில் வழக்கறிஞர் விவேக் சிங் இந்த ரெட் மனுவைத் தாக்கல் செய்தார்.

தி.மு.க.வின் இந்த மனுவை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதி கே. வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. மேலும் வழக்கின் விசாரணை நவம்பர் 11-ஆம் தேதி விசாரணை  என அறிவித்துள்ளது

இதற்கிடையில், தமிழகத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், எஸ்.ஐ.ஆர். தொடர்பாக மக்களுக்கு எழக்கூடிய பல்வேறு சந்தேகங்களைத் தீர்க்குமாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

“பிஎல்ஓக்கள் (BLOs) படிவத்தைப் பூர்த்தி செய்ய உதவுவதில்லை, இதனால் சிரமம் ஏற்படுகிறது.”

“பெற்றோர் 2002 வாக்காளர் பட்டியலில் இல்லாவிட்டால் என்ன செய்வது?”

“வெளிநாட்டில் வேலையில் இருப்பவர்களின் படிவத்தை எப்படிப் பூர்த்தி செய்வது?”

போன்ற மக்களின் கேள்விகளைத் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்று, அனைத்துச் சந்தேகங்களையும் தீர்க்க, மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோவிடம் ஸ்டாலின் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.